பெங்களூரில் கிட்டத்தட்ட 50% பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம்.. காரணம் SIR? வெளியான தகவல்
பெங்களூர்: கர்நாடகாவில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்த பணியில், பெங்களூர் நகரில் மிக பெரியளவில் வாக்காளர்கள் நீக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. அங்கு வீடு வீடாக மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்போது, நகரின் வாக்காளர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் ASDDO எனப்படும் Absent, Shifted, Duplicate, Dead and Others பிரிவில் இடம்பெற்றுள்ளனர்.
தேர்தல் ஆணையம் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் எஸ்ஐஆர் எனப்படும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி இப்போது நமது அண்டை மாநிலமான கர்நாடகாவில் இந்த எஸ்ஐஆர் பணிகள் நடந்து வருகிறது. அதில் கர்நாடக தலைநகர் பெங்களூரின் நிலைமையே கவலை தருவதாக மாறியுள்ளது.

எஸ்ஐஆர் பணிகள்
அதாவது பெங்களூர் நகர்ப்புற மாவட்டத்தில் மொத்தம் 40.21 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இதில் இதுவரை 55.39 சதவீதம் கணக்கெடுப்பு படிவங்கள் மட்டுமே வெற்றிகரமாக டிஜிட்டல் முறையில் பதிவு செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள 44.61 சதவீதம், அதாவது சுமார் 17.93 லட்சம் வாக்காளர்கள், ASDDO- Absent, Shifted, Duplicate, Dead and Others அல்லது படிவம் பெறாதவர்களாகவே உள்ளனர்.
கிட்டத்தட்ட 50% வாக்காளர்கள்
பெங்களூரின் மூன்று மண்டலங்களிலும் இந்த விகிதம் மாநில சராசரியை விட அதிகமாக உள்ளது. தெற்கு பெங்களூர் இது பகுதியில் அதிகபட்சமாக 51.18 சதவீதம், அதாவது 10.97 லட்சம் வாக்காளர்கள் படிவம் பெறப்படாத பிரிவில் உள்ளனர். அதேபோல், மத்திய பெங்களூரில் 47.85% பேர், அதாவது 9.04 லட்சம் வாக்காளர்களும், வடக்கு பெங்களூரில் 46.95% பேர், அதாவது 10.95 லட்சம் வாக்காளர்களும் படிவத்தை பெறவில்லை. ஒட்டுமொத்தமாக பெங்களூரின் நகர்ப்புற பகுதிகளில் 48.9 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் ASDDO பிரிவில் குறிக்கப்பட்டுள்ளனர். இது கர்நாடகாவின் ஒட்டுமொத்த சராசரியான 19.93 சதவீதத்தைவிட அதிகமாகும்.
அதேநேரம் ஒருவர் ASDDO பிரிவில் குறிக்கப்பட்டிருப்பது மட்டும் அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து தானாக நீக்கப்படும் என்று அர்த்தமல்ல என்று தேர்தல் அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். ஒருவரது பெயர் தவறுதலாக இந்த ASDDO பிரிவுக்கு போய்விட்டால் அவர் தங்களது விவரங்களை திருத்திக்கொள்ளவும், பெயரை மீண்டும் சேர்க்கக் கோரவும் வாய்ப்பு உள்ளது.
கர்நாடகா
கர்நாடகாவில் இப்போது மாநிலம் முழுக்க சுமார் 5.54 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்கான கணக்கெடுப்பு படிவங்கள் 100 சதவீதம் அச்சிடப்பட்டு BLOக்களிடம் வழங்கப்பட்டுள்ளன. இதுவரை 99.99 சதவீத படிவங்கள் டிஜிட்டல் முறையில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் சுமார் 19.93 சதவீதம், அதாவது 1.1 கோடி வாக்காளர்கள் ASDDO பிரிவில் உள்ளனர். இதில் அதிகபட்சமாக 66.43 லட்சம் பேர் நிரந்தரமாக வேறு இடத்துக்கு குடிபெயர்ந்தவர்கள் என குறிக்கப்பட்டுள்ளனர்.
ASDDO
அதற்கு அடுத்தபடியாக இறந்தவர்களாக 16.32 லட்சம் பேரும், கண்டறிய முடியாதவர்கள் அல்லது வீட்டில் இல்லாதவர்களாக 16.12 லட்சம் பேரும், ஏற்கனவே வேறு இடத்தில் வாக்காளர்களாக பதிவு செய்யப்பட்டவர்களாக 6.93 லட்சம் பேரும், இதர பிரிவில் 4.67 லட்சம் பேரும் வருகிறார்கள்.
இது ஒரு பக்கம் இருக்க பெங்களூரில் புதிய வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் பணிகளையும் தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது. இதற்காக வாக்காளர் பட்டியலில் புதிய பெயரை சேர்க்க பயன்படும் பார்ம் 6 விண்ணப்பப் படிவங்கள் சுமார் 10 லட்சம் வழங்கப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications
