டிராஃபிக்ல அப்படித்தான் தம்பி போகணும்..ஏடாகூடமாக ஓட்டி.. மாட்டிக்கொண்ட பெங்களூர் பேருந்து ஓட்டுநர்
பெங்களூர்: நாட்டிலேயே போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்படும் பகுதியாக பெங்களூரு உள்ள நிலையில், போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பிப்பதற்காக அரசுப் பேருந்தை எதிர் திசையில் ஓட்டிய ஓட்டுநரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பெங்களூர் சாலைகளில் இதுபோன்ற சம்பவங்களில் அடிக்கடி அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் ஈடுபடுவதாக நெட்டிசன்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
கர்நாடக மாநிலம், பெங்களூரில் போக்குவரத்து நெருக்கடி பிரச்னை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. நாட்டிலேயே போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்படும் பகுதிகளில் பெங்களூர் முதலிடத்தில் உள்ளது. உலகளவில் போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்படும் நகரங்களில் பெங்களூர் 6வது இடத்திலும் உள்ளது. இதனால் பெங்களூர் வாசிகள் வாகனங்களை எடுப்பதற்கே அச்சப்படுகின்றனர்.

இந்நிலையில், பெங்களூர், மாரத்தஹள்ளி - ஹெச்ஏஎல் சாலையில் பெங்களூர் மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் (பிஎம்டிசி) பேருந்து ஒன்று போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதற்காக எதிர் சாலையில் அதிவேகமாக செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுதொடர்பான வீடியோ கர்நாடக போர்ட்ஃபோலியோ எனும் எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
அந்த வீடியோவில், ஹெச்ஏஎல் சாலையில் இருந்து மாரத்தஹள்ளி நோக்கி அதிவேகமாக எதிர் சாலையில் பேருந்து ஒன்று அதிவேகமாகச் செல்லும் வீடியோ உள்ளது. அந்தப் பதிவில், பிஎம்டிசி பெங்களூர் பேருந்து ஒன்று போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பித்து முன்னால் செல்வதற்காக எதிர்ப்புறம் உள்ள சாலையில் அதிவேகமாகவும், கவனக் குறைவாகவும் ஓட்டுநர் இயக்குகிறார். இதுபோன்ற ஆபத்தான செயலால் சமீபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவருக்கு விபத்து ஏற்பட்டு பலத்த காயமடைந்தார்.
பயணிகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் இதுபோன்ற பேருந்து ஓட்டுநர்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கவனக் குறைவாக வாகனத்தை ஓட்டுவதால் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதுடன், சாலை பாதுகாப்பை குறைத்து மதிப்பிடுவதற்கு வழிவகுக்கிறது. பாதுகாப்பான சாலை போக்குவரத்தை உறுதி செய்யவும், இதுபோன்ற ஆபத்தான செயல்களை கட்டுப்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ள நிலையில், சமூக வலைதள பயனர்கள் பலரும் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்கள் குறித்துப் பதிவு செய்து வருகின்றனர். அதில் ஒரு பயனர், பிஎம்டிசி பேருந்துகள் மிகவும் ஆபத்தானவை. குறிப்பாக, ஏசி பேருந்துகளின் அருகில் செல்லும்போது கவனமாக இருங்கள்.
அவர்கள் வாகனத்தை இயக்கிக் கொண்டிருக்கும்போதே திடீரென சாலையின் நடுவில் வண்டியை நிறுத்தி விடுவார்கள். சாலையின் வலது பக்கமாக அந்தப் பேருந்துகளை முந்திச் செல்ல முயன்றால் வாகனத்தை டிவைடரோடு சேர்த்து உங்களை மோதிவிட்டு பார்க்காமல் சென்று விடுவார்கள் என்று பதிவிட்டுள்ளார்.
இதற்கிடையே, பெங்களூர் போலீஸார் சம்பந்தப்பட்ட பேருந்தை அடையாளம் கண்டு ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்து அபராதம் விதித்துள்ளனர்.
இதேபோல, பெங்களூர் டூ மைசூரு செல்லும் விரைவுச் சாலைகளிலும் பல அரசுப் பேருந்துகள் நீண்ட யூடர்ன்களைத் தவிர்ப்பதற்காக எதிர் சாலையில் பேருந்துகளை வேகமாக இயக்குவது கண்டறியப்பட்டுள்ளது. போக்குவரத்து விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பெங்களூர் போலீஸார் மற்றும் கேஎஸ்ஆர்டிசி சார்பில் அனைத்து ஓட்டுநர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications