பல கோடி மதிப்பிலான கார் இருந்தாலும்.. பழைய காரை ஓட்டும் பெங்களூர் தொழிலதிபர்! என்ன காரணம் தெரியுமா
பெங்களூர்: பெங்களூர் நகரின் போக்குவரத்து நெரிசலில் தினமும் சிக்கித் தவிப்பது வாகன ஓட்டிகளுக்குப் பெரும் சவாலாக உள்ளது. குறிப்பாக, விலை உயர்ந்த கார்களை ஓட்டி செல்பவர்களுக்கு இது நரக வேதனை தான். பைக்குகள் மற்றும் ஆட்டோக்களால் கார் மீது கீறல், பள்ளம் ஏற்பட்டுவிடுமோ என்ற கவலையுடன் பயணிக்க வேண்டியுள்ளது. இந்த பிரச்சினைக்கு வித்தியாசமான தீர்வு கண்ட பெங்களூர் இளைஞர் ஒருவரின் பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் கவனம் ஈர்த்துள்ளது.
பெங்களூருவை சேர்ந்த அந்த நபரிடம் ஸ்கோடா ஸ்லாவியா கார் உள்ளது. முதலில் ஒர்க் பர்ம் ஹோமில் இருந்ததால் அவருக்கு பிரச்சினை இல்லை. ஆனால், ஒரு கட்டத்தில் அலுவலகத்துக்கு நேரில் வந்து வேலை செய்ய வேண்டும் என்று அவரது நிறுவனம் திட்டவட்டமாக கூறிவிட்டதாம். இருப்பினும், பெங்களூர் போக்குவரத்து நெரிசலில் தனது புதிய காரை ஓட்டிச் செல்ல அவருக்கு விருப்பமில்லையாம்.

பெங்களூர் டிராபிக்
இதையடுத்து கடந்த 2015ல் தயாரிக்கப்பட்ட மாருதி சுசுகி செலெரியோ காரை அவர் செகண்ட் ஹேண்டில் வாங்கியுள்ளார். சுமார் ரூ.3 லட்சம் மதிப்பிலான இந்த பழைய காரை, தினசரி அலுவலக பயணத்துக்காக மட்டுமே பயன்படுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார். காரின் பெயிண்ட் ஏற்கெனவே மங்கிவிட்டதாகவும், ஏசி மட்டும் நன்றாக வேலை செய்வதாகவும் கூறிய அவர் தெரிவித்துள்ளார்.
விலை உயர்ந்த காரில் கீறல் விழுந்துவிடுமோ என்று கவலைப்படுவதற்கு பதிலாக, பழைய காரை பயன்படுத்துவது தனக்கு மனநிம்மதியை அளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சமீபத்தில் சில்க் போர்டு சிக்னலில் சென்று கொண்டிருந்தபோது, ஆட்டோ ரிக்ஷா ஒன்று அவரது காரின் முன்பக்க பம்பரில் உரசியுள்ளது. இதனால் காரில் கீறல் ஏற்பட்டுவிட்டதாம்.
ரூ.3 லட்சம் பழைய கார்
ஆட்டோ ஓட்டுநர் மீதே தவறு இருந்தாலும் அவர் சண்டைக்கு போகவில்லையாம். பழைய கார் தான் என்பதால் கோபப்படாமல் ஆட்டோ ஓட்டுநரை பார்த்து கட்டைவிரலை உயர்த்தி காட்டிவிட்டு, கூலாக பயணத்தை தொடர்ந்திருக்கிறார். இது குறித்து சமூக வலைத்தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், "இன்று சில்க் போர்டு சிக்னலில் ஆட்டோ ஒன்று எனது காரின் முன்பக்க பம்பரில் உரசியது. அந்த ஓட்டுநர் சண்டை வரப்போகிறது என்று பயந்தார். நான் அவரைப் பார்த்து தப்ஸ் அப் காட்டிவிட்டு சென்றுவிட்டேன்.
இந்த காரை வாங்க எனக்கு ரூ.3 லட்சம் ஆனது. இது எனக்கு பெரிய தொகை இல்லை. ஆனால், இதுதான் எனது பெஸ்ட் செலவு. அலுவலக பயணத்துக்கு இது போன்ற சாதாரணமான, பழைய காரை வாங்குவது நல்லது. அப்போது தான் மனநிம்மதி கிடைக்கும்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நெட்டிசன்கள்
இந்த பதிவைப் பார்த்த பலரும் அவரது முடிவை பாராட்டியுள்ளனர். இது தொடர்பாக நெட்டிசன் ஒருவர், "ஸ்கோடா ஸ்லாவியாவை நல்ல லாங் டிரைவிற்காக வைத்து கொள்ளுங்கள். தினசரி அடிபட வேண்டிய வேலையை செலெரியோ பார்த்து கொள்ளட்டும். பெங்களூர் போக்குவரத்தை சமாளிக்க இதுதான் புத்திசாலித்தனமான வழி" என்று பதிவிட்டுள்ளார்.
மனநிம்மதி
மற்றொரு நபர், "நகர பயணங்களுக்கு சிறிய, குறைந்த விலை கொண்ட மாருதி காரை பயன்படுத்துவது அதிக மனநிம்மதியை தரும்" என்று குறிப்பிட்டுள்ளார். தங்களது ஸ்கோடா கார்களும் மற்றவர்கள் செய்த தவறுகளால் விபத்தில் சிக்கியுள்ளதாக மேலும் சிலர் பதிவிட்டுள்ளனர். எனவே, பெங்களூர் போக்குவரத்தில் விலை உயர்ந்த கார்களை பயன்படுத்துவது மன அழுத்தத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளனர்.




Click it and Unblock the Notifications
