"ஆண்டி" என அழைத்ததால் ஆத்திரம்.. ஏடிஎம் காவலாளியை செருப்பால் அடித்து பெண் அடாவடி! பெங்களூரில் பகீர்
பெங்களூர்: கர்நாடக தலைநகர் பெங்களூரில் "ஆண்டி" என்று அழைத்த ஒரே காரணத்திற்காக ஏடிஎம் காவலாளி ஒருவரை இளம்பெண் மிக கொடூரமாகத் தாக்கிய ஷாக் சம்பவம் அரங்கேறியுள்ளது.
இந்த நவீன வாழ்க்கை பல வழிகளில் நமது வாழ்க்கையை எளிமையானதாக மாற்றி இருக்கிறது என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை. அதேநேரம் பல மணி நேரம் வேலை, மேல் அதிகாரி பிரஷர் உள்ளிட்ட காரணங்களால் மனவழுத்தம் அதிகரிக்கிறது.

இதனால் நகர்ப் புறங்களில் வாழும் பெரும்பாலானோர் கடுமையான மன அழுத்தத்தில் தான் வாழ்ந்து வருகிறார்கள். இதனால் சில நேரங்களில் நம்மையே அறியாமல் நாம் மோசமான காரியங்களில் ஈடுபடுவோம்.
ஆண்டி என அழைத்ததால்: அப்படியொரு ஷாக் சம்பவம் தான் பெங்களூரில் நடந்துள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஏடிஎமில் இருந்த காவலாளி ஒருவரைப் பெண் கொடூரமாகத் தாக்கியுள்ளார். அவரை செருப்பால் அடித்தும் கொடூரமாகவும் தாக்கியுள்ளார். அந்த காவலாளி ஏதோ தவறாக நடந்து கொண்டதால் இப்படியெல்லாம் செய்கிறார் என நினைக்காதீர்கள். அந்த காவலாளி அந்த பெண்ணை பார்த்து "ஆண்டி" என அழைத்துள்ளார். இதன் காரணமாகவே ஆத்திரமடைந்து அந்த பெண் இப்படி கொடூரமாகத் தாக்கியுள்ளார்.
அந்தப் பெண் ஏடிஎம்மில் இருந்து பணத்தை எடுத்த பிறகும் உள்ளே மிஷன் அருகே நின்று கொண்டிருந்தார். வெளியே பலர் வரிசையில் இருந்ததால் அவரை வெளியே வர அழைத்துள்ளார். அப்போது தான் அந்த காவலாளி "ஆண்டி" என அழைத்துள்ளார். லைனில் பலரும் காத்திருப்பதால் வெளியே வருமாறு கூறியிருக்கிறார்.
தாக்குதல்: இருப்பினும், "ஆண்டி" என்ற அந்த ஒற்றை வார்த்தையால் கடுப்பான அந்த பெண், காவலாளியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் அந்த காவலாளியைச் செருப்பால் அடித்தும், மிக மோசமாகத் தாக்கியதாகவும் இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர். அங்கிருந்தவர்கள் அந்த பெண்ணை பிடித்த போதும், தொடர்ந்து தாக்கியுள்ளார். இதையடுத்து அந்த வழியாகச் சென்றவர்கள் இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பின்னரே இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர். இந்த சம்பவம் நடந்த போது அந்த பெண் என்ன நிலையில் இருந்தார் என்பது குறித்தும் போலீசார் விசாரிக்கிறார்கள். அந்த பெண் குறித்து எந்தவொரு தகவலும் வெளியிடப்படவில்லை.
விசாரணை: இந்தச் சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்துள்ளனர். அந்த பெண் கடுமையாகத் தாக்கிய போதிலும், நல்வாய்ப்பாக இந்தச் சம்பவத்தில் காவலாளிக்குப் பெரியளவில் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. கைது செய்யப்பட்ட அந்த பெண் இப்போது ஜாமீனில் வெளிவந்துள்ளார்.












Click it and Unblock the Notifications