கட்டம் கட்டிய கட்டவுட்.. பெங்களூருக்கு வந்த 'சுல்தானாகஞ்ச் பாலம்'.. நிதிஷ் குமாருக்கு நூதன எதிர்ப்பு
பெங்களூர்: பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் பெங்களூரில் ஒன்று கூடியுள்ள நிலையில், பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமாரை விமர்சிக்கும் வகையில் சில பேனர்கள் பெங்களூர் சாலைகளில் வைக்கப்பட்டிருந்தன. இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியதையடுத்து போலீசார் தற்போது இந்த பேனர்களை அகற்றியுள்ளனர்.
தற்போது இரண்டாவது முறையாக வெற்றி பெற்று பாஜக மத்தியில் ஆட்சியில் இருக்கிறது. இந்நிலையில் மூன்றாவது முறையும் பாஜக வெற்றிப் பெற வேண்டும் என்று பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. மூன்றாவது முறையும் நரேந்திர மோடிதான் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த முறை அவர் மீண்டும் பிரதமராக வெற்றி பெற்றுவிட்டால், நேருவுக்கு பின்னர் தொடர்ந்து மூன்றாவது முறை பிரதமரான ஒரே நபர் இவர்தான் என்கிற பெருமையையும் பெறுவார்.

அதேபோல எதிர்வரும் 2025ம் ஆண்டில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் 100வது ஆண்டு விழா கொண்டாடப்பட இருக்கிறது. இந்த விழாவை சிறப்பாக கொண்டாட பாஜக ஆட்சியில் இருக்க வேண்டியது அவசியமாகும். எனவே இதற்காக கட்சி கடுமையாக உழைத்து வருகிறது. மறுபுறம், இமாச்சல் மற்றும் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியிருந்தாலும், வட மாநிலங்களில் அதன் செல்வாக்கு கடுமையாக சரிந்து வருகிறது. இதனை ஈடு செய்ய இந்த நாடாளுமன்ற தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்று கட்சி திட்டமிட்டுள்ளது.
இதற்காக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியை பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் மற்றும் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் கையில் எடுத்திருக்கின்றனர். இதற்கான முதல் கூட்டம் பீகாரின் பாட்னாவில் நடைபெற்றது. இதில் 6 மாநிலங்களின் முதலமைச்சர் உட்பட 17 எதிர்க்கட்சித் தலைவர்கள் பங்கேற்றிருந்தனர். இந்நிலையில் இந்த கூட்டத்தில் 26 எதிர்க்கட்சி கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
வைகோ தலைமையிலான ம.தி.மு.க., இ.ஆர்.ஈஸ்வரன் தலைமையிலான கொ.தே.ம.க., தொல். திருமாவளவன் தலைமையிலான வி.சி.க., இடதுசாரிக் கட்சிகளான ஆர்.எஸ்.பி, பார்வர்டு பிளாக், கேரளத்தில் முக்கிய கட்சியாக இருக்கும் ஐ.யூ.எம்.எல்., கேரள காங்கிரஸ் (ஜோசப்), கேரள காங்கிரஸ் (மணி) ஆகிய கட்சிகள் புதியதாக இந்த கூட்டத்தில் பங்கெடுக்கின்றன. இந்த கூட்டத்தில், குறைந்தபட்ச செயல் திட்டம், பாஜகவுக்கு எதிரான இந்த கூட்டணிக்கு பெயர் சூட்டுவது, பிரதமர் வேட்பாளர் போன்றவை குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த கூட்டத்திற்கு பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் வருகை தர உள்ள நிலையில் அவருக்கு எதிராக பெங்களூரில் பல்வேறு இடங்களில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. அதில் பீகாரின் 'சுல்தான்கஞ்ச் பாலம்' இடிந்து விழுந்ததை விமர்சித்து நிதீஷ் குமாருக்கு எதிரான வசனங்கள் அச்சிடப்பட்டுள்ளன. இந்த சுல்தான்கஞ்ச் பாலமானது, பீகார் மாநிலம், பாகல்பூர் அருகே கங்கை ஆற்றில் 3.2 கிலோமீட்டர் நீளத்திற்கு கட்டப்பட்டு வந்தது.
ரூ.1,700 கோடியில் கட்டப்பட்டு வந்த இந்த பாலம் கடந்த 15 மாதங்களில் இரண்டாவது முறையாக இடிந்து விழுந்திருக்கிறது. இந்த பாலம் கட்டும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டியது அம்மாநில முதலமைச்சர் நிதீஷ் குமார்தான். அதேபோல தற்போது எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க பெரும் முயற்சி எடுத்து வருபவரும் இவர்தான். எனவேதான் இவரை விமர்சித்து பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. இது பெங்களூரில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது இந்த பேனர்களை போலீசார் அகற்றியுள்ளனர்.












Click it and Unblock the Notifications