பெங்களூர் அப்பார்ட்மென்ட்.. ஏஐ பணிநீக்கத்தால் கணவன் - மனைவி எடுத்த விபரீத முடிவு
பெங்களூர்: இன்றைய டிஜிட்டல் பொருளாதாரத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) வளர்ச்சி வேலைவாய்ப்பு சந்தையில் பெரும் மாற்றங்களை உருவாக்கி வருகிறது. ஏஐ உதவியுடன் 10 பேர் செய்ய வேண்டிய வேலையை 3-4 பேர் கொண்டு செய்ய முடியும் காரணத்தால் பல நிறுவனங்கள் ஊழியர்களை அதிகளவில் பணிநீக்கம் செய்து வருகிறது. குறிப்பாக டெக் மற்றும் டிஜிட்டல் சேவை துறையில் அதிகளவில் நடக்கிறது.
இந்த நிலையில் அமெரிக்காவில் அதிகப்படியான சம்பளத்தில் பணியாற்றிய இளம் ஐடி டெக் நிபுணர் பணிநீக்கம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதும், அடுத்த சில நிமிடங்களில் அவரது மனைவியும் உயிரிழந்த சம்பவம் பெங்களூரை உலுக்கியுள்ளது.

பெங்களூர் அப்பார்ட்மென்ட்..
பெங்களூருவில் அப்பார்ட்மென்ட் வீட்டில் தங்கியிருந்த 32 வயதான பானு சந்தர் ரெட்டி செவ்வாய்க்கிழமை தனது அறையில் பூட்டிக் கொண்டு இருந்த நிலையில், அவரது மனைவி ஷாஜியா சிராஜ் ஹைதராபாத் சென்று இரவு வீடு திரும்பியபோது அறையின் கதவைத் தட்டியும் திறக்காததால் சந்தேகம் ஏற்பட்டது. பலமுறை அழைத்தும் பதில் வராததால், அவர் அப்பார்ட்மென்ட் செக்யூரிட்டி ஊழியர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினரிடம் உதவி கேட்டுள்ளார்.
உடனடியாக உதவிக்கு வந்த அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, பானு சந்தர் ரெட்டி தூக்கிட்டு கொண்ட நிலையில் காணப்பட்டார். இந்த சம்பவம் அங்கிருந்த அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்தது.
கணவர் மரணம் அடைந்ததை அருகில் இருந்தவர்கள் உறுதி செய்த நிலையில் ஷாஜியா அதிர்ச்சி அடைந்தார். உடனே, அவசர உதவி எண்ணுக்கு கால் செய்துள்ளார் ஷாஜியா சிராஜ் . பின்னர் திடீரென அவர் லிப்டில் 18வது மாடிக்கு சென்று அங்கிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இவை அனைத்தும் 20 நிமிடத்திற்குள் நடந்ததுள்ளாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
பானு சந்தர் ரெட்டி முன்பு அமெரிக்காவில் ஆண்டுக்கு ரூ.80 லட்சம் வருமானம் பெறும் பணியில் இருந்தார். அவர் அங்கு வீடு வாங்கியதுடன், தனது குடும்பத்திற்காக தெலுங்கானாவிலும் வீடு கட்டியிருந்தார்.
ஆனால், AI தொழில்நுட்ப முன்னேற்றம் காரணமாக ஏற்பட்ட பணியாளர் குறைப்பில் அவர் தனது வேலையை இழந்துள்ளார். இதை தொடர்ந்து புதிய வேலை கிடைக்காததால், அவர் கடுமையான மன அழுத்தத்தில் இருந்ததாகவும், இதுவே அவரது தற்கொலைக்கு காரணம் என போலீசார் கைப்பற்றிய லெட்டரில் பானு சந்தர் ரெட்டி குறிப்பிடப்பட்டு உள்ளதாக தெரிவித்தனர்.
அமெரிக்காவில் பணியை இழந்த பின்பு இருவரும் ஹைதராபாத்திற்கு சில மாதங்கள் வசித்து வந்தனர், பல்வேறு காரணத்தால் பெங்களூருவுக்கு இடமாற்றம் செய்தனர். பெங்களூரில் தனிசந்திரா மெயின் ரோட்டில் உள்ள அப்பார்ட்மென்ட் வீட்டில் வசித்து வந்தனர்.
இந்த சம்பவம் தனிசந்திரா பகுதியில் மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த பெங்களூர் ஐடி மற்றும் டெக் ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மனநலப் பிரச்சினைகள் அல்லது தற்கொலை எண்ணங்கள் கொண்டவர்களை நீங்கள் அறிந்திருந்தால், தயவுசெய்து உடனடியாக உதவி செய்யுங்கள். கீழே உள்ள உதவி எண்கள் உடனடியாக உதவியை வழங்கும்:
தமிழ்நாடு மாநில சுகாதார துறை உதவி எண்: 104
ஸ்நேஹா தற்கொலை தடுப்பு மையம்: 044-24640050












Click it and Unblock the Notifications