ஆட்டோ சவாரியை ரத்து செய்ததால் டென்ஷன்.. நடுரோட்டில் பெண்களை அடித்த ஓட்டுநர்.. பரபரத்த பெங்களூர்!
பெங்களூர்: பெங்களூர் ஹெச்எஸ்ஆர் லேஅவுட் பகுதியில் ஆட்டோர் ஓட்டுநர் ஒருவர் 2 இளம் பெண்களை ஒருவரை சரமாரியாக தாக்கும் வீடியோ வெளியாகி விவாதமாகியது. இந்த சம்பவத்தால் பொது இடங்களில் பெண்களின் பாதுகாப்பு குறித்த கேள்வி எழுந்த நிலையில், ஆட்டோ ஓட்டுநர் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கர்நாடகா மாநிலம் பெங்களூரில் நேற்று ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண்களை சாலையிலேயே வைத்து கொடூரமாக தாக்கும் வீடியோ டிரெண்டாகியது. வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த இரு பெண்களை ஆட்டோ ஓட்டுநர் இப்படியா தாக்குவார் என்று சமூக ஆர்வலர்கள் பலரும் கேள்வி எழுப்பினர்.

இதனால் பெங்களூரில் பெண்கள் பாதுகாப்பு குறித்த கேள்விகள் எழுப்பப்பட்டது. இந்த நிலையில் வீடியோ காவல்துறை கவனத்திற்கு சென்ற நிலையில், சம்பவம் அரங்கேறியது ஹெச்எஸ்ஆர் லேஅவுட் பகுதி என்பது தெரிய வந்தது. இதன்பின் பாதிக்கப்பட்ட பெண்களை அடையாளம் கண்ட காவல்துறை, உடனடியாக புகார் அளிக்குமாறு கேட்டு கொண்டது.
தொடர்ந்து இளம் பெண்கள் இருவரும் புகார் அளித்த நிலையில், ஆட்டோ ஓட்டுநர் சேத்தன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்பின் சம்பவம் குறித்த விவரங்கள் தெரிய வந்துள்ளன. பாதிக்கப்பட்ட பெண்கள் செயலி மூலமாக ஆட்டோவை புக் செய்துள்ளனர். ஆனால் ஆட்டோ வருவதற்கு நேரமாக, அந்த பெண்கள் ஆட்டோ புக்கிங்கை ரத்து செய்துள்ளனர்.
இதனால் டென்ஷனான ஆட்டோ ஓட்டுநர், உடனடியாக பெண்கள் இருந்த இடத்திற்கு வந்து தகராறில் ஈடுபட்டிருக்கிறார். இதன்பின் அந்த இளம் பெண்ணும், அவரின் தோழியும் ஆட்டோ ஓட்டுநரை தட்டிக் கேட்டுள்ளனர். அப்படி தட்டிக் கேட்டதற்காக ஆட்டோ ஓட்டுநர் இருவரையும் சரமாரியாக தாக்கி இருக்கிறார். சுற்றி இருந்தவர்கள் கூறிய போதும், அந்த ஆட்டோ ஓட்டுநர் கேட்டதாக தெரியவில்லை.
தற்போது ஆட்டோ ஓட்டுநர் மீது பெண்களிடம் அத்துமீறி நடந்து கொள்ளுதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஆட்டோ ஓட்டுநர் தரப்பில், ஆட்டோ கட்டணம் தொடர்பாகவே பிரச்சனை வந்தது என்றும், அந்த பெண்கள் மதுபோதையில் இருந்ததாகவும் கூறப்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications
