வடஇந்தியாவின் 4 மாநில ஆண்களுக்கு இனி வேலை கிடையாது.. திடீரென அறிவித்த பெங்களூர் பிரபல நிறுவனம்
பெங்களூர்: ''வடஇந்திய மாநிலங்களாக உள்ள உத்தர பிரதேசம், பீகார், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட இடங்களை சேர்ந்த ஆண்களை இனி வேலைக்கு எடுக்க மாட்டோம்'' என்று பெங்களூரில் செயல்பட்டு வரும் பிரபல நிறுவனத்தின் சிஇஓ ஒருவர் தெரிவித்துள்ளார்.

பெங்களூரில் 'ஏ1 ஸ்போர்ட்ஸ் வேர்ல்ட்' என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இது ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனமாகும். குழந்தைகளை விளையாட்டு வீரராக மேம்படுத்தவும், விளையாட்டில் உள்ள அறிவியல் நுட்பங்களை கற்றுக்கொடுக்கும் வகையில் இந்த நிறுவனம் செல்பட்டு வருகிறது.
இந்த நிறுவனத்தின் சிஇஓவாக கார்த்தி என்பவர் உள்ளார். தற்போது கார்த்தி தான் சர்ச்சையில் சிக்கி உள்ளார். இந்த சர்ச்சைக்கு அவர் சமூக வலைதளங்களில் பதிவிட்ட பதிவு தான் முக்கிய காரணம்.
அதாவது நேற்று கார்த்தி நேற்று தனது எக்ஸ் பக்கத்தில், ''இந்த முடிவுக்காக நான் வருந்துகிறேன். ஆனால் நீண்ட விவாதத்திற்கும், வாக்குவாதத்திற்கும் பிறகு இன்று நாங்கள் இதை தெளிவாக கூறிவிட்டோம். வடஇந்தியாவில் உள்ள உத்தர பிரதேசம், ராஜஸ்தான், பீகார், மத்திய பிரதேசம் என்ற இந்த 4 மாநிலங்களை சேர்ந்த எந்த ஆண்களையும் எங்கள் நிறுவனத்தில் இனி பணியமர்த்தமாட்டோம். ஏற்கனவே எங்களிடம் ராஜஸ்தானை சேர்ந்த ஒருவர் பணியாற்றுகிறார். அவர் எங்கள் முடிவை 100 சதவீதம் வரை ஏற்றுக்கொண்டுள்ளார்'' என்று கூறியுள்ளார்.
இவரது இந்த பதிவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. உத்தர பிரதேசம், ராஜஸ்தான், பீகார், மத்திய பிரதேசத்தை சேர்ந்த பலரும் அவரது பதிவை விமர்சனம் செய்து வருகின்றனர். இதுவும் ஒரு நவீன தீண்டாமை தான் என்று விமர்சனம் செய்து வருகின்றனர்.
இதற்கும் கார்த்தி பதிலளித்துள்ளார். அந்த பதிவில், ''உண்மையில் நான் என்னுடைய முடிவில் உறுதியாக இருப்பேன். எம்பிஏ படித்த நன்றாக தன்னை வெளியே காட்டிக்கொண்ட ஒருவரை வேலையில் சேர்த்தேன்.
ஆனால் 2 மாதத்திற்கு பிறகு அவர் பெண் ஊழியரை ஆபாசமாக திட்டி தவறாக நடக்க முயன்றார். எங்களை பொறுத்தவரை ஒரு தொழிலை நடத்துவதை விட எங்களின் டீமின் பாதுகாப்பு முக்கியம். அதுமட்டுமின்றி நாங்கள் குழந்தைகளுடன் பணிபுரிகிறோம். இதனால் அவர்களின் பாதுகாப்பும் முக்கியமானது'' என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications
