விஸ்வரூபம் எடுத்த போராட்டம்.. திடீரென மைக்குடன் வந்த டிசிபி.. ஒரே பாட்டுதான்.. நிலைமையே மாறி போச்சு
Recommended Video
பெங்களூர்: "ஆன்னா ஊன்னா அடிக்கிறானுங்க.. ஆனா நாட்டுக்கு ஒரு பிரச்சனை அப்படின்னா ஒன்று சேர்ந்து விடுகிறார்கள்.. இப்படி இருந்தா இந்தியாவை அடிச்சுக்க முடியாது.." என்று வடிவேலு கோவில் என்ற திரைப்படத்தில் ஒரு வசனம் பேசியிருப்பார்.
வடிவேலு வசனத்தையே முன்மாதிரியாகக் கொண்டு பெங்களூரு போலீஸ் துணை கமிஷனர் ஒருவர் போராட்டங்களை கட்டுக்குள் கொண்டு வந்துள்ள ருசிகர சம்பவம் நேற்று நடந்தது.
குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து பெங்களூரில் கடந்த சில நாட்களாக கடுமையான போராட்டங்கள் பல்வேறு அமைப்பினரால் முன்னெடுக்கப்படுகின்றன.

டவுன் ஹால்
சென்னையில் எப்படி வள்ளுவர் கோட்டம் போராட்டத்தின் மையப்புள்ளியாக மாறி உள்ளதோ, அதேபோல பெங்களூரில் டவுன் ஹால், போராட்டக்காரர்களின் ஈர்ப்பு சக்தியாக உருவெடுத்துள்ளது. பிரபல வரலாற்று ஆசிரியர் ராமகிருஷ்ண குஹா நேற்று இங்கு போராட்டம் நடத்த வந்தபோது தான் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

துணை கமிஷனர்
இந்த இடத்தில்தான் பல்வேறு அமைப்பினரும் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அங்கு வருகை தந்தார் பெங்களூரு மத்திய பிரிவு துணை போலீஸ் கமிஷனர் சேத்தன் சிங் ராத்தூர். எவ்வளவு சொல்லியும் போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து செல்ல தயாராக இல்லை. அவர்களை வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்லும் ஒரே வாய்ப்புதான் போலீசாருக்கு எஞ்சி இருந்தது. ஆனால் இதை தவிர்க்க முடிவு செய்த துணை கமிஷனர், சேத்தன் சிங் ராத்தோர் ஒரு ஐடியா செய்தார்.
|
தேசிய கீதம்
திடீரென மைக்கை பிடித்து ஜனகனமன.. என தேசிய கீதத்தை பாட ஆரம்பித்துவிட்டார். தேசிய கீதத்தை கேட்டதும் போராட்டக்காரர்களும் அவருடன் சேர்ந்து பாட ஆரம்பித்தனர். மேலும் தேசிய கீதம் பாடி முடித்ததும் அங்கிருந்து அமைதியாக போராட்டக்காரர்கள் கிளம்பி சென்றுவிட்டனர்.

கோவில் படம்
இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக சுற்றி வருகிறது. கோவில் திரைப்படத்தில், தப்பு வாத்தியம் பெரியதா? பேண்ட் வாத்தியம் பெரியதா என்று ஒரு போட்டி நடக்கும். அப்போது ஏற்படக்கூடிய மோதலை தவிர்க்க, வந்தே மாதரம் என்ற பாடலை வடிவேலு பாடுவார். அந்த இடமே அமைதியாக மாறிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லி போலீஸ் கப் சிப்
அதேநேரம், டெல்லியில், போராட்டம் நடத்திய மாணவர்களை கலைக்க வந்த போலீசார் முன்னிலையில் தேசிய கீதம் பாடி, ரோஜாப் பூ கொடுத்தனர் மாணவர்கள். ஆனால் போலீசார், தேசிய கீதம் பாட மறுத்துவிட்டனர். போராட்டக்காரர்களை கலைந்து செல்ல வைப்பதில்தான் அவர்கள் குறியாக இருந்தனர்.












Click it and Unblock the Notifications