பெங்களூருக்கு மேகதாது அணை தேவையே இல்லை.. குடிநீர் வழங்கல் அதிகாரி சொன்ன உண்மை
பெங்களூர்: பெங்களூருக்கு மேகதாது (மேக்கேதாட்டு என்று கன்னடத்தில் அழைப்பார்கள்) அணை தேவையே இல்லை என்றும், பெங்களூருக்கு நீண்ட காலமாக தண்ணீர் வழங்கிய வரும் திப்பகொண்டனஹள்ளி நீர்த்தேக்கத்திலிருந்து 2.2 டி.எம்.சி நீர் வீணாகிறது என்றும் அந்த தண்ணீரே பெங்களூரின் தேவைக்கு போதுமானது என்பது தெரியவந்துள்ளது. பெங்களூரு குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியத்தின் அதிகாரி ஒருவர் அளித்த பேட்டியில் பல்வேறு தகவல்கள் தெரியவந்துள்ளது,
கர்நாடகா தமிழ்நாடு எல்லையில் உள்ள மேகதாது என்ற இடத்தில் 67டிஎம்சி தண்ணீரை சேமிக்கும் திறன் கொண்ட அணையை கட்டுவதற்கு கர்நாடக அரசு முயன்று வருகிறது. இந்த அணை கட்டினால் கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் காவிரி நீரின் அளவு பெரும் அளவு குறைந்து விடும் என்றும் தமிழ்நாடு காவிரி டெல்டா பகுதிகள் பாலைவனம் ஆகிவிடும் என்றும் குற்றச்சாட்டு உள்ளது. கர்நாடக தரப்பினோ இந்த அணை கட்டினால் கர்நாடகாவை விட தமிழ்நாட்டிற்கு நல்லது என்றும், வீணாகும் நீரை சேமித்து அதை கர்நாடகாவில் இருக்கும் தமிழ்நாட்டில் பயன்படுத்த முடியும் என்றும் வாதம் வைக்கப்படுகிறது . ஆனால் இந்த வாதத்தை ஏற்க மறுக்கும் தமிழ்நாடு இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் தமிழ்நாட்டிற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட வராமல் போய்விடும் என்று அச்சப்படுகிறது.

இந்த சூழலில் பெங்களூரிலிருந்து மகாடி சாலையில் சுமார் 35 கி.மீ. தொலைவில் திப்பகொண்டனஹள்ளி அணை அமைந்துள்ளது . இந்த அணையில் சுமார் 2.2 டிஎம்சி தண்ணீரை கர்நாடக அரசு வீணாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பெங்களூரு குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியத்தின் அதிகாரி கூறுகையில், "திப்பகொண்டனஹள்ளி நீர்த்தேக்கத்தில் 58 அடி உயரத்திற்கு சுமார் 2.2 டிஎம்சி தண்ணீர் இருக்கிறது. ஆனால், இந்த நீர் முறையாகப் பயன்படுத்தப்படாமல் அப்படியே நீண்ட காலமாக தேங்கிக் கிடக்கிறது. அண்மையில் தான் திப்பகொண்டனஹள்ளி அணை ரூ. 230 கோடி செலவில் பழுதுபார்க்கப்பட்டு மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. அங்கு அணை கதவு இயந்திரங்கள் வீணாகிவிடக் கூடாது என்பதற்காக, நாள்தோறும் 4 மில்லியன் லிட்டர் குடிநீரை, கீழ்ப்பகுதியில் உள்ள மஞ்சனபெலே அணை மற்றும் மகடி கிராமங்களுக்கு அனுப்பி வருகிறோம் மீதமுள்ள தண்ணீர் அப்படியே தேங்கி நிற்பதால், ஆவியாதல் மற்றும் கசிவு மூலம் வீணாகி வருகிறது . எனினும் இருப்பினும், நல்ல விஷயம் என்னவென்றால், இந்தப் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் நன்றாக இருக்கிறது, இந்த பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.
திப்பகொண்டனஹள்ளி நீரை புறக்கணிக்காமல் பயன்படுத்தினால், பெங்களூருக்கு மேகதாது திட்டத்தின் மூலம் கிடைக்கும் 4 டிஎம்சி தண்ணீர் தேவைப்படாது. மேலும், மேகதாது திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கையில், பெங்களூருக்கு தண்ணீர் கொண்டு வருவதற்கு, குழாய் அமைப்பது சேர்க்கப்படவே கிடையாது . ஆனால், திப்பகொண்டனஹள்ளி நீர்த்தேக்கத்தைப் பொறுத்தவரை, ஏற்கனவே தண்ணீர் கொண்டு வருவதற்கான குழாய் இணைப்பு பெங்களூருக்கு உள்ளது. அந்தக் குழாயும் அண்மையில் பழுதும் பார்க்கப்படட்டுள்ளது.
அங்கு கடந்த சில ஆண்டுக்கு முன்பு இந்திய அறிவியல் கழகத்தின் ஆலோசனையின் அடிப்படையில், தண்ணீரை சுத்திகரித்து குடிநீராகப் பயன்படுத்துவதற்காக கூடுதல் ஓசோனேஷன் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது. 2024-ஆம் ஆண்டு சோதனை அடிப்படையில் திப்பகொண்டனஹள்ளி நீரானது, பெங்களூருக்கு விநியோகிக்கப்பட்டது. ஆனால், கர்நாடக அரசு தற்காலிகமாக நீர் விநியோகத்தை நிறுத்தி உள்ளது . ஆனால் திப்பகொண்டனஹள்ளி நீர் தரமானது; பயன்பாட்டிற்கு ஏற்றது. திப்பகொண்டனஹள்ளி நீர்த்தேக்கம் 74 அடி வரை நீரைச் சேமிக்கும் திறன் கொண்டது. இதன் நீர் பரப்பளவு 2,300 ஏக்கராகவும், மொத்தப் பரப்பளவு 2,700 ஏக்கராகவும் உள்ளது.
திப்பகொண்டனஹள்ளி நீர்த்தேக்கத்திற்கு ஆர்காவதி ஆறு மற்றும் ஹெசரகட்டாவிலிருந்து நீர் வருகிறது. எனினும் அரசும் பொதுமக்களும் இந்த நீர்த்தேக்கத்தின் நீரை குடிநீர் ஆதாரமாக நம்புவது கிடையாது. காவிரி நீர் சுத்திகரிக்கப்பட்டு குளோரின் கலக்கப்படும் நிலையில், திப்பகொண்டனஹள்ளி நீர் கூடுதலாக ஓசோனேஷன் ( கழிவுகளை அகற்றி தூய்மையாக்குவது) செயல்பாட்டிற்கு உள்படுத்தப்படுகிறது. ஆர்காவதியில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட 35 எம்எல்டி தண்ணீர் திப்பகொண்டனஹள்ளி நீர்த்தேக்கத்துக்கு அப்படியே பாய்கிறது.
தற்போது பெங்களூரு குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம், இந்த நீர்த்தேக்கத்தின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளை மீட்டெடுப்பது தொடர்பான அறிக்கையை தயாரித்து வருகிறது. நாள்தோறும் திப்பகொண்டனஹள்ளி நீர்த்தேக்கத்திலிருந்து 1,940 எம்எல்டி காவிரி நீர், பெங்களூருக்கு விநியோகித்து வருகிறோம். குடிநீரை பொறுத்தவரை திப்பகொண்டனஹள்ளி நீர்த்தேக்கத்தின் தண்ணீர் தரமானது; குடிநீராகப் பயன்படுத்துவதற்கு ஏற்றது. எனினும் நாள்தோறும் வீணடிக்கப்படுகிறது. ஏத்தினஹொளே திட்டம் பெங்களூரை வந்தடையும் போது திப்பகொண்டனஹள்ளி நீரைப் பயன்படுத்த அரசு திட்டமிட்டிருக்கிறது. ஆனால், அந்தத் திட்டம் தாமதமாகி வருகிறது. திப்பகொண்டனஹள்ளி நீரைப் பயன்படுத்துவதற்காக, டொப்பாஸ்பேட் மற்றும் பீன்யா தொழிற்பேட்டை பகுதிகளுக்கு தண்ணீர் வழங்கும் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது" இவ்வாறு பெங்களூரு குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியத்தின் அதிகாரி கூறினார.
இந்திய அறிவியல் கழகத்தின் சுற்றுச்சூழல் அறிவியல் மையத்தைச் சேர்ந்த பேராசிரியர் டி.வி. ராமச்சந்திரா செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், பெங்களூருக்குப் போதுமான மழைப்பொழிவு கிடைப்பதால், இந்த நகரத்துக்கு மேகதாது திட்டம் தேவையில்லை. பெங்களூருக்கு போதுமான அளவு காவிரி நீர் கிடைக்கிறது. அதற்கு இணையான அளவில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரும் கிடைத்து வருகிறது. இவற்றை முறையாக பயன்படுத்தலாம்" என்றார்.
அதேபோல் பெங்களூர் பொதுமக்கள் இந்த தண்ணீரை விரும்பாததற்கு காரணங்கள் இல்லாமல் இல்லை. இதுபற்றி பெங்களூருவாசி ஒருவர் கூறுகையில், திப்பகொண்டனஹள்ளி அணை ஆர்காவதி மற்றும் குமுதாவதி நதிகள் சங்கமிக்கும் இடத்தில் இருக்கிறது. பெங்களூரு நகரின் அசுர வளர்ச்சியால், பீன்யா தொழில்துறை பகுதி மற்றும் சுற்றியுள்ள குடியிருப்புப் பகுதிகளின் சுத்திகரிக்கப்படாத திரவக் கழிவுகள் மற்றும் இரசாயனங்கள் இந்த நதிகளில் பெருமளவில் கலந்துவிட்டது. கலந்தும் வருகிறது. அதனால் அணையில் 2 டிஎம்சிக்கும் அதிகமான தண்ணீர் தேங்கி இருந்த போதிலும், அது நச்சுத்தன்மை நிறைந்ததாக மாறி உள்ளது,, அதை நேரடியாகச் சுத்திகரித்து பெங்களூரு மக்களுக்குக் குடிநீராக வழங்குவது மிகவும் கடினமான காரியம், அப்படியே பயன்படுத்தலாம் என்றாலும் சுத்திகரிக்கும் செலவும் அதிகமாகும்.
ஆனால் மேகதாது அணையை பொறுத்தவரை பெங்களூருவில் இருந்து தெற்கே 90 கிமீ அடர்ந்த வனப்பகுதியில் உள்ள தூய்மையான தண்ணீரை கொண்டுள்ளது. நீர் மாசுபடாதது. மேகதாதுவில் 67 டிஎம்சி கொள்ளளவு கொண்ட பெரிய அண கட்டிவிட்டால், குடிநீரோடு சேர்த்து 400 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்ய முடியும் செய்யலாம். எனவே தான் மேகதாது அணை நீரை விரும்புகிறோம்" என்றார்.


Click it and Unblock the Notifications
