பெங்களூரில் நடந்த சம்பவம்! மரக்கிளை முறிந்து விழுந்ததில்.. கோமா நிலைக்கு சென்ற நபர்!
பெங்களூர்: பைக்கில் சென்ற நபர் மீது மரக்கிளை முறிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட நபர் கோமா நிலைக்கு சென்றுள்ளார்.
கடந்த புதன்கிழமை மாலை, ராஜாஜிநகரின் ராம் மந்திர் சாலை வழியாக 53 வயதான சுரேஷ் என்பவர் தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார். நிதி நிறுவனத்தில் பணிபுரியும் அவர், அப்போது ஹெல்மெட் அணியாமல் இருந்துள்ளார்.

அவர் சாலையைக் கடக்கும்போது, ஓரத்தில் இருந்த ஒரு காய்ந்த மரக்கிளை திடீரென முறிந்து நேரடியாக அவரது தலையில் விழுந்தது. இதில் நிலைகுலைந்த அவர், பைக்குடன் அப்படியே சாலையில் சரிந்து விழுந்தார். இந்த விபத்தில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, உடனடியாக சுயநினைவை இழந்தார்.
சிசிடிவி காட்சிகள்
இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அதில், அவர் ஹெல்மெட் அணியாமல் செல்வதும், மரக்கிளை விழுந்த வேகத்தில் அவர் சுருண்டு விழுவதும் பதிவாகியுள்ளது. அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு யஷ்வந்த்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
தற்போதைய நிலை
மருத்துவமனையில் அவருக்கு அவசர மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் கோமா நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டுள்ளார். அடுத்த 48 மணி நேரம் மிகவும் முக்கியமானது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதிகாரிகளின் அலட்சியம்
இந்த விபத்து குறித்து அப்பகுதி மக்கள் கடும் ஆத்திரம் அடைந்துள்ளனர். அந்தப் பகுதியில் உள்ள காய்ந்த மற்றும் ஆபத்தான மரக்கிளைகளை அகற்றக் கோரி பலமுறை வனத்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும், அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அதிகாரிகளின் அலட்சியமே இந்த விபத்துக்குக் காரணம் என்று சமூக வலைதளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக ராஜாஜிநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாதாரண மரக்கிளை, எதிர்பாராத நேரத்தில் உடைந்து விழுந்ததால், ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலைக்கு சென்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே பைக் ஓட்டும்போது ஹெல்மெட் அணிவது முக்கியமாகும்.












Click it and Unblock the Notifications