பெங்களூர் – ஓசூர் மெட்ரோ ரயில்.. 9 ஸ்டேஷன்களுடன் பொம்மசந்திரா – அத்திபள்ளி வரை ‘ஓகே’ சொன்ன BMRCL
பெங்களூர்: தென்இந்தியாவில் முதல் முறையாக இருமாநிலங்களுக்கு இடையே மெட்ரோ ரயில் சேவையை தொடங்குவதற்கான திட்டத்தை கையில் எடுத்துள்ளது பெங்களூர் மெட்ரோ ரயில் நிறுவனம். இந்த திட்டத்தின்படி கர்நாடகா - தமிழ்நாடு இடையே பெங்களூரின் பொம்மசந்திராவில் இருந்து ஓசூர் அருகே உள்ள அத்திப்பள்ளி வரை 10.5 கிலோமீட்டர் தொலைவுக்கு 9 மெட்ரோ ரயில் நிலையங்களுடன் புதிய ரயில் பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பெங்களூர் மெட்ரோ ரயில் நிறுவனம் சாத்தியக்கூறு அறிக்கை (Feasibility Study) தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் பெங்களூரில் மஞ்சள் வழித்தடமாக உள்ள மெட்ரோ பாதையை பொம்மசந்திராவில் இருந்து அத்திப்பள்ளி (தமிழ்நாடு - கர்நாடகா எல்லை) வரை 10.5 கிலோமீட்டர் தொலைவுக்கு விரிவாக்கம் செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த பொம்மசந்திரா - அத்திப்பள்ளி வழித்தடத்தில் மொத்தம் 9 ரயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளது. அதன்படி இந்த வழித்தடத்தில் முதல் ரயில் நிறுத்தமாக நாராயணா இன்ஸ்டிடியூட் ஆஃப்கார்டியாக் சயின்சஸ் அமைய உள்ளது. இது பொம்மசந்திராவில் இருந்து 1.5 கிலோமீட்டர் தொலைவில் அமைய உள்ளது.
அதன்பிறகு 1.8 கிலோமீட்டர் தொலைவில் சந்தாபுரா சர்க்கிள் நிறுத்தம் அமைய உள்ளது. இதுதவிர ஹலே சந்தாபுரா, திருமாகொண்டனஹள்ளி, பாலகாரனஹள்ளி, அத்திப்பள்ளி தொழிற்பேட்டை, யாதவனஹள்ளி, அத்திப்பள்ளி, அத்திப்பள்ளி டெர்மினல் என்று 9 ரயில் நிறுத்தங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ரயில் பாதையை ஓசூர் ரோட்டிற்கு வலதுபுறம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ரயில் நிறுத்தங்கள் நடைமேம்பாலம், நடை சுரங்கப்பாதைகள் வழியாக இணைக்கப்பட உள்ளது.
இதுதொடர்பாக இந்த திட்டத்துக்கு நெருக்கமானவர்கள் கூறுகையில், ''பொம்மசந்திரா - அத்திப்பள்ளி இடையே மெட்ரோ ரயில் பாதை அமைப்பது தொடர்பான சாத்தியக்கூறு அறிக்கை தயாரித்து மாநில அரசிடம் வழங்கப்பட்டது. தற்போது விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கூறி உள்ளனர். விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான டெண்டர் விரைவில் வெளியிடப்படும்'' என்றார்.
கடந்த வாரம் தமிழக சட்டசபையில் நிதி அமைச்சர் மரிய வில்சன் பட்ஜெட் தாக்கல் செய்தார். அப்போது அவர் ஓசூரில் இருந்து பொம்மசந்திரா வரை 24 கிோலமீட்டர் தொலைவுக்கு 12 நிறுத்தங்களுடன் மெட்ரோ ரயில் சேவை தொடங்குவது பற்றி பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக கூறியிருந்தார். இந்நிலையில் தான் பெங்களூர் மெட்ரோ ரயில் நிர்வாகம் பொம்மசந்திரா - அத்திப்பள்ளி வரை மெட்ரோ ரயில் சேவையை தொடங்குவதற்கான பணியை விரைவுப்படுத்தி உள்ளது.


Click it and Unblock the Notifications
