இனி ஸ்விக்கி - ஜோமேட்டோவில் உணவு டெலிவரி கிடைக்காது? பெங்களூர் ஹோட்டல் சங்கம் வைத்த ‘செக்'.. பின்னணி
பெங்களூர்: ஸ்விக்கி மற்றும் ஸோமேட்டோ உள்ளிட்ட ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களுக்கு எதிராக பெங்களூர் ஹோட்டல் சங்கம் போர்க்கொடி உயர்த்தி உள்ளது. கமிஷன் தொகை குறைப்பு உள்பட பல்வேறு கோரிக்கைகளை ஸ்விக்கி, ஸோமேட்டோ நிறுவனங்கள் குறைக்க வேண்டும். இல்லாவிட்டால் ஆகஸ்ட் 15ம் தேதிக்கு பிறகு ஸ்விக்கி, ஸோமேட்டோ வழியாக வரும் ஆர்டர்களை ஏற்க மாட்டோம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்போது ஸ்விக்கி, ஜோமேட்டோவில் உணவு ஆர்டர் செய்து சாப்பிடும் நபர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த செயலிகள் வழியாக நாம் குறிப்பிட்ட ஹோட்டல்களில் உணவு ஆர்டர் செய்யும்போது அந்த ஹோட்டல்கள் ஸ்விக்கி, ஜோமேட்டோவிற்கு கமிஷன் தொகை வழங்க வேண்டும்.
இந்த கமிஷன் தொகை உணவுகளின் விலையை பொறுத்து இருக்கும். அதிகபட்சமாக 28 சதவீதம் வரை கமிஷன் தொகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் இதில் வெளிப்படைத்தன்மை, கமிஷன் தொகையை குறைத்தால், வாடிக்கையாளர்களிடம் புகார்களை தொடர்ந்து பிடிக்கப்படும் கட்டணம், ரத்து செய்யப்படும் ஆர்டர்களுக்கு இழப்பீடு வழங்குவது உள்பட சிலவற்றில் தொடர்ந்து பிரச்சனைகள் உள்ளன.
இதனை சரிசெய்ய வேண்டும் என்பது மட்டுமின்றி, பிரத்யேகமாக ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனம் - ஹோட்டல்களுக்கு இடையேயான உறவை வலுப்படுத்தும் வகையில் பிரத்யேக ரிலேஷன்ஷிப் மேனேஜர் நியமனம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை பெங்களூர் ஹோட்டல் சங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில் தற்போது இந்த கோரிக்கைகளை ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் நிறைவேற்ற வேண்டும். இல்லாவிட்டால் ஸ்விக்கி, ஹோமேட்டோ வழியாக கிடைக்கும் ஆர்டர்களை ஏற்கமாட்டோம் என்று பெங்களூர் ஹோட்டல் சங்கம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக பெங்களூர் ஹோட்டல் சங்கத்தின் தலைவர் எஸ் சுப்பிரமணிய ஹோலோ கூறியதாவது: ''ஆன்லைனில் உணவு டெலிவரி செய்யும் ஸ்விக்கி, ஸோமேட்டோ நிறுவனங்கள் தங்களின் கமிஷன் தொகையை குறைக்க வேண்டும். இதற்கான சீர்த்திருத்த நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
தற்போது ஆன்லைன் டெலிவரி நிறுவனங்கள் ஹோட்டல்களிடம் இருந்து குறைந்தபட்சம் 8-10 சதவீதம் வரையும், அதிகபட்சமாக 28 சதவீதம் வரையும் கமிஷன் பெறுகின்றன. இது அதிகமாக உள்ளது. இந்த பணம் என்பது வாடிக்கையாளர்களிடம் இருந்து தான் வசூலிக்கப்படுகிறது. இதனை குறைக்க வேண்டும். அதேபோல் கேன்சல் செய்யும் ஆர்டர்கள் மற்றும் தள்ளுபடி விலைகளால் ஹோட்டல் விற்பனையாளர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த பிரச்சனைகள் நீண்டகாலமாக உள்ளன. இதற்கு தீர்வு காணப்பட வேண்டிய நிலை வந்துள்ளது. இதனால் இந்த விவகாரம் தொடர்பாக ஸ்விக்கி, ஹோமேட்டோ நிறுவனங்களுக்கு கடிதம் எழுதப்பட உள்ளது. எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற ஆகஸ்ட் 15ம் தேதி காலக்கெடு வழங்கப்படும். அதற்குள் நிறைவேற்ற வேண்டும். இல்லாவிட்டால் ஸ்விக்கி, ஸோமேட்டோ வழியாக வரும் உணவு ஆர்டர்களை ஏற்கமாட்டோம்'' என்று கூறியுள்ளார்.
இதுபற்றி பெங்களூர் ஹோட்டல் சங்கத்தின் கவுரவ தலைவர் பிசி ராவ் கூறுகையில், ''கமிஷன், விளம்பர செலவு, பேமேண்ட் கேட்வே கட்டணம் உள்பட பிற பிடித்தங்கள் ஹோட்டல்களில் வருவாயை கணிசமான அளவில் குறைத்துள்ளன. இதனால் ஹோட்டல் உரிமையாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். இதனை ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் சரிசெய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது'' என்றார்.
இந்த பிரச்சனையால் ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் பிறகு பெங்களூரில் ஸ்விக்கி, ஜோமேட்டோவின் உணவு டெலிவரி கிடைக்குமா? இல்லையா? என்பதில் கேள்விக்குறி ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
