'வைப்' பண்றாங்களாம்.. மெட்ரோ ரயிலில் பாட்டு பாடி 11 பெண்களுக்கு நேர்ந்த கதி.. இனி மறக்கவே மாட்டாங்க
பெங்களூர்: பெங்களூர் மெட்ரோ ரயிலில் இரவு நேர பயணத்தின்போது பாட்டு பாடிய 11 பெண்கள் மீது போலீஸ் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. போலீசார் என்சிஆர் பதிவு செய்துள்ள நிலையில் அவர்களுக்கு நீதிமன்றம் வழியாக அபராதம் விதிக்கப்பட உள்ளது.
பெங்களூரில் பொதுமக்களின் பயன்பாட்டுக்கான மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. பெங்களூருவில் மாதவரா முதல் சில்க் போர்ட் வரை பச்சை வழித்தடத்திலும், ஒயிட்பீல்டில் இருந்து சல்லகட்டா வரை ப்ளூ வழித்தடத்திலும், ஆர்.வி.ரோட்டில் இருந்து பொம்மசந்திரா வரை மஞ்சள் வழித்தடத்திலும் மெட்ரோ ரயில் இயங்கி வருகிறது.

பெங்களூரில் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் பொதுமக்கள் விரைவாக இந்த மெட்ரோ ரயிலில் பயணித்து வருகின்றனர். தற்போது வரை பெங்களூர் நகரில் மொத்தம் 96.10 கிலோமீட்டர் தொலைவுக்கு 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் இயங்கி வருகிறது.
பாட்டு பாடி ஜாலி
இந்நிலையில் தான் கடந்த 15ம் தேதி இரவு 10.57 மணிக்கு பிஐஇசி ரயில் நிலையத்தில் இருந்து கேஜிடபிள்யூஏ ரயில் நிலையத்துக்கு மெட்ரோ ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது ரயிலில் பயணித்த பெண்கள் சிலர் பாட்டுப்பாடினர். ஒரே நேரத்தில் சத்தமாக பாட்டு பாடியதால் மற்ற பயணிகள் அதிருப்தியாகினர். இதனால் அவர்களை பாட்டு பாடுவதை நிறுத்தும்படி கூறினர். ஆனால் பெண்கள் கேட்கவில்லை.
பிற பயணிகளுடன் தகராறு
பீனியா இன்டஸ்ட்ரியல் ஸ்டேஷனுக்கு ரயில் சென்றது. அப்போது சில பயணிகள் இறங்கினர். அந்த சமயத்தில் பாட்டு பாடியவர்களுக்கும், அந்த பயணிகளுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. இதனால் மெட்ரோ ரயில் கதவை மூட முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து செக்யூரிட்டி அதிகாரி தலையீடு செய்தார். அதன்பிறகு மெட்ரோ ரயில் புறப்பட்டு சென்றார்.
தொடர்ந்து இடையூறு
ஆனாலும் அந்த பெண்கள் தங்களின் செயலை நிறுத்தவில்லை. தொடர்ந்து மெட்ரோ ரயிலில் சத்தமாக பாட்டு பாடி மற்றவர்களுக்கு இடையூறு செய்தனர். இந்த கும்பல் கோரகுண்டேபாளையா, சாண்டல் சோப் பேக்டரி, மகாலட்சுமி, குவெம்பு ரோடு உள்ளிட்ட மெட்ரோ நிலையங்களிலும் இதுபோன்று பயணிகளுக்கு இடையூறு செய்தது.
அபராதம் விதிக்க முடிவு
இதுதொடர்பாக செக்யூரிட்டி அதிகாரி கஜேந்திரா சார்பில் பீனியா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் ஹொய்சாலா வாகனத்தில் வந்து 11 பேர் மீதும் என்சிஆர் பதிவு செய்தனர். அந்த பெண்கள் கெஞ்சியதால் மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்துவிட்டு வார்னிங் செய்து போலீசார் அனுப்பினர். அதேவேளயைில் இந்த என்சிஆர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. அங்கு 11 பேருக்கும் அபராதம் விதிக்கப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications