ஒரே நாளில் 111 மி.மீ மழை.. 133 வருட சாதனையை முறியடித்தது பெங்களூர்.. மரங்கள் சாய்ந்தன, மின்வெட்டு
பெங்களூர்: தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், பெங்களூர் நகரில் ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் இரவு வரை இடியுடன் கூடிய கனமழை பெய்தது. பெங்களூர் நேற்று 111 மிமீ மழை பதிவாகியுள்ளது. இது ஜூன் மாதத்தில் ஒரே நாளில் பெய்த அதிகபட்ச மழை அளவாகும். 1891 ஆம் ஆண்டு ஜூன் 16 ஆம் தேதி பெங்களூரில் 101.6 மிமீ மழை பதிவான நிலையில், 133 ஆண்டுகால சாதனை நேற்று முறியடிக்கப்பட்டது.
இந்திய வானிலை ஆய்வுத் துறை (IMD) அதிகாரிகளின் அறிக்கைப்படி, ஜூன் மாத சராசரி மழையான 110.3 மி.மீட்டரை கடந்த இரண்டு நாட்களிலேயே பெங்களூர் கடந்துவிட்டது. இதுவரை, 120 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழை பதிவாகியுள்ளது. நேற்றைய தினம் பெங்களூருவின் அனைத்து பகுதிகளிலும் மிதமான மழை முதல் கனமழை வரை பதிவாகியுள்ளது.

அதிகபட்சமாக ஹம்பி நகரில் 110.50 மி.மீ., மழையும், மாருதி மந்திர் வார்டில் 89.50 மி.மீ., வித்யாபீடம் பகுதியில் 88.50 மி.மீ., மற்றும் மெஜஸ்டிக் அடுத்த காட்டன்பேட் பகுதியில் 87.50 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது. திங்கட்கிழமை மிதமானது முதல் கடுமையான இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்று வீசும் என IMD எச்சரிக்கை விடுத்துள்ளது. பகல் நேரத்தில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். காற்றுடன் கூடிய கனமழையால் பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை 100க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன, 500க்கும் மேற்பட்ட மரங்களின் கிளைகள் விழுந்து சாலைகள், வீடுகள் மற்றும் வாகனங்கள் சேதமடைந்தன. பல பகுதிகளில் மின்கம்பிகள் துண்டிக்கப்பட்டதால் மின் விநியோகமும் கடுமையாக பாதிக்கப்பட்டது.

பெங்களூர் மின்சார விநியோக நிறுவனம் (பெஸ்காம்) மின்கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்கள் மற்றும் சர்வீஸ் ஸ்டேஷன்களில் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மின்வெட்டு பரவலாக இருந்த நிலையில், சில பகுதிகளில் இரவு முழுவதும் இருளில் மூழ்கியது. மெட்ரோ ரயில் தண்டவாளத்தில் மரக் கிளைகள் விழுந்ததால் சில பகுதிகளில் நேற்று இரவு ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பல ஏரியாக்களில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடினாலும், ஞாயிறு விடுமுறையால் வாகன ஓட்டிகளுக்கு பாதிப்பு குறைவாகவே இருந்தது. பெங்களூரு-மைசூரு நெடுஞ்சாலையில் மோசமான வடிகால் பணியால் வெள்ளம் மற்றும் தண்ணீர் தேங்கியது, ராமநகர் அருகே வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுமார் ஒரு மணி நேரம் மைசூர் ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 3 கி.மீ தூரத்திற்கு இந்த பாதிப்பு இருந்தது.












Click it and Unblock the Notifications