பிரமாண்டமாக வருது.. பெங்களூரில் 2வது கிரிக்கெட் மைதான பணிக்கு ஒப்புதல்! அமைச்சரவை கூட்டத்தில் அதிரடி
பெங்களூர்: பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் கிரிக்கெட் அணி முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது. இதையடுத்து பெங்களூர் சின்னச்சாமி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த கொண்டாட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 11 பேர் பலியாகினர். இதையடுத்து 80 ஆயிரம் இருக்கைகளுடன் ரூ.2,350 கோடி செலவில் சர்வதேச தரத்தில் 2வது கிரிக்கெட் மைதானம் அமைக்கும் பணி தொடங்கி உள்ளது.
ஐபிஎல் வரலாற்றில் முதல் முதலாக ஆர்சிபி எனும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதல் முறையாக கடந்த ஜூன் 3ம் தேதி கோப்பை வென்றது. அதன்பிறகு ஜூன் 4ம் தேதி பெங்களூர் திரும்பிய ஆர்சிபி அணி வீரர்கள் ஊர்வலம் சென்றனர். வெற்றி கொண்டாட்ட விழா சின்னச்சாமி கிரிக்கெட் மைதானத்தில் நடந்தது.

அப்போது அளவுக்கு அதிகமாக ரசிகர்கள் குவிந்தனர். இந் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியாகினர். 56 பேர் காயமடைந்தனர். இதுபற்றி ஓய்வு நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா ஆணையம் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தது.
அதில், இடநெருக்கடி தான் கூட்ட நெரிசலுக்கு முக்கிய காரணம் என்று தெரிவிககப்பட்டது. சின்னச்சாமி கிரிக்கெட்மைதானத்தில் 33 ஆயிரம் இருக்கைகள் மட்டுமே உள்ளன. இதனால் பலரும் போட்டி போட்டு மைதானத்துக்குள் நுழைந்த நிலையில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு உயிரிழப்பு நடந்தது என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து சின்னச்சாமி கிரிக்கெட் மைதானத்துக்கு மாற்றாக பெங்களூரில் பிரமாண்டமான கிரிக்கெட் மைதானம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது பொம்மச்சந்திராவின் சூர்யா சிட்டி அருகே இந்தலவாடி கிராமத்தில் 2வது கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படுகிறது.
இந்நிலையில் நேற்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பெங்களூரில் புதிய கிரிக்கெட் மைதானம் அமைப்பது பற்றி விவாிக்கப்பட்டது.
அதாவது 2வது கிரிக்கெட் மைதானம் அமைக்கும் கொள்கை முடிவுக்கு கர்நாடகாவின் வீட்டுவசதி வாரியம் ஒப்புதல் வழங்கி உள்ளது. இதனால் விரைவில் விரிவான திட்ட அறிக்கை தயாரித்து அதற்கு ஒப்புதல் வழங்க முடிவு செய்யப்பட்டது. இந்த கிரிக்கெட் மைதானம் மொத்தம் 80 ஆயிரம் ரசிகர்கள் அமரும் வகையில் அமைய உள்ளது. ரூ.2,350 கோடி செலவில் சர்வதேச தரத்தில் அமைய உள்ளது.
இதுதொடர்பாக அமைச்சரவை கூட்டத்துக்கு பிறகு வெளியிடப்பட்ட அறிக்கையில், ‛‛பெங்களூரில் சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானம் அமைக்கும் கொள்கை முடிவுக்கு கர்நாடக வீட்டு வசதி வாரியம் ஒப்புதல் வழங்கி உள்ளது. இதனால் பெங்களூர் புறநகர் இந்தலவாடி கிராமத்தில் சூர்யா நகர் 4வது பேஸ் லே-அவுட்டில் 75 ஏக்கரில் இந்த மைதானம் அமைக்கப்பட உள்ளது. விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது.
பெங்களூர் சின்னச்சாமி கிரிக்கெட் மைதானம் அளவில் சிறியதாக உள்ளது. இதனால் புதிய மைதானம் அமைக்கப்பட உள்ளது. இந்த மைதானத்தில் நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளது'' என கூறப்பட்டுள்ளது. இந்த மைதானத்தில் பல்வேறு வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட உள்ளது.
கிரிக்கெட் மைதானம் மட்டுமின்றி பெங்களூரின் விளையாட்டு கலாசாரம் மற்றும் நகர வளர்ச்சிக்கு பூஸ்ட்டாக இது அமைக்கப்பட உள்ளது. இந்த மைதானத்தில் கிரிக்கெட் மட்டுமல்லாது உட்புற மற்றும் வெளிப்புற விளையாட்டு அரங்குகள் அமைக்கப்பட உள்ளது. ஒலிம்பிக் தரத்திலான நீச்சல் குளம், அதிநவீன ஜிம், அதிநவீன பயிற்சி மையங்கள், விருந்தினர் மாளிகை, ஹாஸ்டல்கள், ஹோட்டல்கள், கூட்ட அரங்கம் உள்ளிட்டவை இடம்பெற உள்ளது.
பெங்களூரில் தற்போது அமையும் கிரிக்கெட் மைதானத்தை ஓசூரில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் தான் உள்ளது. இதனால் தமிழ்நாட்டில் இருந்து எளிதாக இந்த மைதானத்தை அடைய முடியும். மாறாக பெங்களூரில் நகரில் இருப்பவர்கள் இந்த மைதானத்துக்கு வர சிரமத்தை எதிர்கொள்ளலாம். ஏனென்றால் பெங்களூர் நகரில் இருந்து பொம்மசந்திரா வரும் சாலை மிகவும் முக்கியமான ரோடாகும். இங்கும் எப்போதும் போக்குவரத்து நெரிசல் அதிகம் இருக்கும். இதனால் இந்த மைதானத்துக்கு பெங்களூரின் மையப்பகுதியில் இருந்து வருவோர் சிரமத்தை எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications