கொரோனா வைரஸ் பரவலில் உச்சம் தொட்ட பெங்களூரு - 1.5 லட்சம் பேர் சிகிச்சை... இன்னும் மோசமாகும்
பெங்களூருவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை ஒன்றரை லட்சத்தை எட்டியுள்ளது. நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு படுக்கை வசதிகளை ஏற்படுத்துவதில் மாநகராட்சிக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு: கர்நாடகா தலைநகர் பெங்களூரு கொரோனா ஹாட் ஸ்பாட்டாக மாறியுள்ளது. அங்கு கொத்து கொத்தாக கொரோனா பரவி வருகிறது. நேற்று ஒரேநாளில் 16,662 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பெங்களூருவில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை 1,49,624ஆக அதிகரித்துள்ளது. மே மாதத்தில் நிலைமை மேலும் மோசமடையும் என்று சுகாதாரத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
Recommended Video
நாடு முழுவதும் தினசரியும் மூன்றரை லட்சம் பேர் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்தியாவில் கொரோனாவால் பெரிதும் பாதிக்கப்பட்ட மாவட்டமாக பெங்களூரு மாறியுள்ளது. இங்கு தற்போது 1.5 லட்சம் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதற்கு அடுத்த இடத்தில் புனே மாவட்டம் உள்ளது. அங்கு 1,16,602 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். டெல்லியில் சுமார் ஒரு லட்சம் பேரும், மும்பையில் 81,174 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுதொடர்பாக பேசிய கோவிட் 19 தொழில்நுட்ப ஆலோசனைக் குழு உறுப்பினர் டாக்டர் கிரிதரா ஆர்.பாபு, பெங்களூருவில் வரும் மே 1ஆம் தேதி 25 ஆயிரம் பேருக்கு நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் நிலைமை மேலும் மோசமடையும் என்று எச்சரித்துள்ளார். அவசர சிகிச்சை பிரிவில் போதிய வசதிகள் செய்யப்பட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் 90 முதல் 92 சதவீத கொரோனா நோயாளிகள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களை கண்காணிப்பது பெரும் சவாலாக இருப்பதாக பெங்களூரு மாநகராட்சியின் சுகாதாரத்துறை சிறப்பு ஆணையர் ராஜேந்திர சோழன் தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகப்படியாக இருந்தாலும் 80 முதல் 85 சதவிகிதம் வரையிலான நோயாளிகள் அறிகுறிகள் இன்றியும், லேசான அறிகுறிகளுடன் இருக்கின்றனர். மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் 5 முதல் 6 சதவிகிதம் வரையிலான நோயாளிகளுக்கு போதிய படுக்கை வசதிகளை ஏற்படுத்தி தருவது தான் மாநகராட்சியின் முன்பிருக்கும் சவால் என்றும் ராஜேந்திர சோழன் தெரிவித்துள்ளார்.
நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க கூடுதலான கோவிட் சிகிச்சை மையங்கள் தேவைப்படுகின்றன. இதனைக் கருத்தில் கொண்டு திருமண மண்டபங்கள், மைதானங்கள் உள்ளிட்டவற்றை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ராஜேந்திர சோழன் தெரிவித்துள்ளார். வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகளுக்கு தேவையான மெடிக்கல் கிட் வழங்கும் பணிகள் மீண்டும் தொடங்கப்படவுள்ளதாகவும் ராஜேந்திர சோழன் கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பெங்களூருவில் வார விடுமுறை நாட்களில் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications