ஒன்றரை ஆண்டுகளாக யாரும் கண்டுக்கொள்ளவில்லை.. வீட்டிலேயே இறந்து கிடந்த பெண்.. என்ன நடந்தது?
பெங்களூர்: பெங்களூரில் உள்ள வீடு ஒன்றரை ஆண்டுகளாக இறந்து கிடந்த 57 வயது நிரம்பிய பெண்ணை யாரும் கண்டுக்கொள்ளாத நிலையில் இப்போது கழிவறையில் அவரது எலும்பு கூடுகள் மீட்கப்பட்டுள்ளது. அந்த பெண் யார்? என்ன நடந்தது? என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

பெங்களூரு பாகல்குண்டே போலீஸ் எல்லைக்குட்பட்ட ஹவனூர் லே - அவுட்டில் உள்ள ஒரு வீடு நீண்ட நாட்களாக பூட்டியே கிடந்தது. நேற்று முன்தினம் அந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் அந்த வீட்டுக்குள் சென்று பார்த்தனர். கழிவறையில் எலும்பு கூடுகள் கிடந்தன. எலும்பு கூடுகளை கைப்பற்றி பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், எலும்பு கூடாக கிடந்தவர் பெலகாவி மாவட்டம் சவதத்தியை சேர்ந்த தாட்சாயினி (வயது 57) என்பது தெரியவந்தது. அவர் அந்த வீட்டில் தனியாக வசித்து வந்த நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்ததும், அவர் சொந்த ஊருக்கு சென்றதாக நினைத்து அக்கம்பக்கத்தினரும் அவரை தேடவில்லை என்பதும் தெரியவந்தது.
இதனால் தாட்சாயினி கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பே உயிரிழந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். இருப்பினும் அவர் எப்படி இறந்தார்? என்பது தெரியவில்லை. அதோடு கழிவறையில் எலும்புகூடுகள் கிடந்தது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் போலீசார் அவரது சகோதரர் மகேஷ் என்பவரை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் ''தாட்சாயினியின் மகன் 2005ம் ஆண்டு இறந்தார். கணவர் 2017ம் ஆண்டு இறந்தார். இதனால் தாட்சாயினி தனியாக வசித்து வந்தார். லேசாக மனநலம் பாதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த ஓராண்டுக்கு மேலாக அவர் உறவினர்களுடன் எந்த தொடர்பிலும் அவர் இல்லாமல் இருந்தார். என்னிடம் அவர் பேசி 2 ஆண்டுகள் ஆகிறது'' என்று கூறியுள்ளார். இதுபற்றி பாகலகுண்டே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதுபற்றி போலீசார் கூறுகையில், ''இந்த வீடு ஓராண்டுக்கும் மேலாக பூட்டிக்கிடந்தது. இதனால் பலரும் வாடகைக்கு கூட வீடு கேட்டு வந்துள்ளனர். ஆனால் யாரை தொடர்பு கொள்வது என்பது தெரியாமல் சென்றுள்ளனர். நேற்று முன்தினம் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால் அக்கம்பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர். தாட்சாயினியின் எலும்பு கூடுகள் கிடைத்துள்ளது. குடும்பத்தினருக்கு அவரது சாவில் எந்த சந்தேகமும் இல்லை. இருப்பினும் இயற்கைக்கு மாறான மரணம் என்று வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்'' என்றனர்.


Click it and Unblock the Notifications
