கடலோர கர்நாடகாவை மொத்தமாக தூக்கும் பாஜக.. காங்கிரஸுக்கு அடி.. பஜ்ரங்தள் தடை அறிவிப்பால் சிக்கல்?
பெங்களூர் : ஏபிபி நியூஸ் + சி வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பில் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், கடலோர கர்நாடகா பகுதியில் காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சிகளை அடித்து நொறுக்கி, பாஜக அதிக தொகுதிகளைக் கைப்பற்றும் என்கிறது ஏபிபி நியூஸ் + சி வோட்டர் நடத்திய சர்வே.
224 உறுப்பினர்களைக் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. மே 13ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்று பாஜகவும், ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியும் தீவிரமாக தேர்தல் பணியாற்றின.

தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலானவற்றில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் எனக் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் ஏபிபி நியூஸ் - சி வோட்டர் இணைந்து நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துகணிப்பு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன.
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் என இந்தக் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், 100-112 இடங்களை மட்டுமே கைப்பற்றும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பகுதி வாரியாக சீட் விவரங்களை வெளியிட்டுள்ளது ஏபிபி. இதில் கடலோர கர்நாடகாவில் அடித்து தூக்கியுள்ளது பாஜக.
கடலோர கர்நாடகாவில் மொத்தமுள்ள 21 சீட்களில் 15-19 சீட்களை பாஜக கைப்பற்றும் என்றும் 2 -6 சீட்களை காங்கிரஸ் வெல்லும் என்றும் இதர கட்சிகளுக்கு எந்த சீட்டும் கிடைக்காது என்றும் ஏபிபி - சி வோட்டர் சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலோர கர்நாடகாவில் பாஜக 49 சதவீத வாக்குகளையும் காங்கிரஸ் 37% வாக்குகளையும் கைப்பெற்றும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பதில் கடலோர கர்நாடகா சிக்கலை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது.
தேர்தல் பிரச்சாரத்திற்கு மத்தியில் கடந்த 2ஆம் தேதி மதம், சாதியின் பெயரால் சமூகத்தில் பிளவு ஏற்படுத்தும் பஜ்ரங்தள் அமைப்பு தடை செய்யப்படும் என காங்கிரஸ் கட்சி அறிவித்தது. இதற்கு பஜ்ரங்தள் உள்ளிட்ட இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இதை பயன்படுத்தி பாஜகவினரும் காங்கிரசை கடுமையாக விமர்சித்து பரப்புரையில் ஈடுபட்டு வந்தனர். இந்துக்களுக்கு எதிரான கட்சி என காங்கிரஸ் கட்சியை தாக்கினர் பாஜகவினர். இந்நிலையில், இந்த விவகாரம் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பின் மூலம் தெரியவருகிறது.












Click it and Unblock the Notifications