கர்நாடகாவில்.. இரவில் திடீரென டீக்கடையில் முகாமிட்ட ஜேபி நட்டா! பரவும் வீடியோ..என்ன நடந்தது?
பெங்களூர்: கர்நாடகாவில் தேர்தல் பிரசாரத்தின்போது பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா இரவில் மக்களோடு மக்களாக சாலையோரம் உள்ள டீக்கடைக்கு திடீரென விசிட் செய்ததோடு நிர்வாகிகளுடன் சேர்ந்து டீக்குடித்துக்கொண்டே பொதுமக்களிடம் கலந்துரையாடினார். இதுதொடர்பான வீடியோ தற்போது வெளியாகி இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
கர்நாடகா சட்டசபை தேர்தல் மே மாதம் 10ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் முனைப்பில் பாஜக உள்ளது. அதேபோல் காங்கிரஸ் கட்சியும், ஜேடிஎஸ் கட்சியும் பாஜகவிடம் இருந்து ஆட்சியை பறிக்கும் முனைப்பில் வியூகம் வகுத்து செயல்பட்டு வருகின்றன.

அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் சவுத் இந்திய மாநிலங்களில் அதிக இடங்களில் வெற்றி பெற பாஜக திட்டமிட்டுள்ளது. இதற்கு கர்நாடகாவில் ஆட்சியை தக்கவைப்பது மிகவும் முக்கியமானதாகும்.
பாஜக தலைவர்கள் பிரசாரம்: இதனால் தான் பாஜக மேலிட தலைவர்கள் தொடர்ந்து அங்கு தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்பட பிற தலைவர்கள் அங்கு அடிக்கடி சென்று தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும் நட்சத்திர பேச்சாளர்களாக 40 பேர் கொண்ட பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. இதில் பிரதமர் மோடி, ஜேபி நட்டா, அமித்ஷாவுடன், நிர்மலா சீதாராமன், யோகி ஆதித்யநாத் உள்பட பிற தலைவர்களின் பெயர்கள் உள்ளன. இவர்களும் விரைவில் கர்நாடகாவில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளனர்.
3 நாள் பயணமாக ஜேபிநட்டா: இந்நிலையில் தான் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா 3 நாள் சுற்றுப்பயணமாக கர்நாடகா சென்றுள்ளார். நேற்று முதல் அவர் தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளார். சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிட்லகட்டாவில் நேற்று அவர் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவருடன் சிக்பள்ளாப்பூர் மாவட்டத்தில் உள்ள சட்டசபை தொகுதிகளின் பாஜக வேட்பாளர்கள், மாநில பாஜக தலைவர் நளின் குமார் கட்டீல் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.

மக்களோடு மக்களாக டீ: அதன்பிறகு ஜேபி நட்டா பிரசாரத்தை முடித்துவிட்டு பெங்களூர் புறநகர் மாவட்டம் ஒசக்கோட்டை எனும் பகுதியில் சாலையோரம் உள்ள கடையில் டீக்குடித்தார். சாதாரண மக்களோடு மக்களாக ஜேபி நட்டா கடையில் டீக்குடித்தார். அவருடன் பாஜக அமைச்சரான சுதாகர், மாநில தலைவர் நளின் குமார் கட்டீல் உள்பட பாஜக தலைவர்கள், வேட்பாளர்கள் டீ குடித்தனர்.
பரவும் வீடியோ: இந்த வீடியோவை பாஜக ஐடி விங்க் தேசிய பொறுப்பாளர் அமித் மாளவியா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, ‛‛ பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா கர்நாடகா தலைவர்களுடன் பெங்களூர் புறநகரில் உள்ள ஒசக்கோட்டையில் மக்களோடு உரையாடி டீக்கடையில் டீக்குடித்தார்'' என தெரிவித்துள்ளார். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications