கர்நாடகாவில் அதிர்ச்சி! தேர்தல் பரபரப்புக்கு இடையே.. பாஜக இளைஞர் அணி நிர்வாகி ஓட ஓட வெட்டிக்கொலை
பெங்களூர்: கர்நாடக தேர்தல் களம் உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ள நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் அணி தலைவர் பிரவீன் கம்மர் (வயது 36) ஓட ஓட விரட்டி கொடூரமாக வெட்டிக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் அங்கு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வரும் கர்நாடகாவில் வரும் மே 10 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு, தேர்தல் பிரசாரம், என தேர்தல் களம் அனல் பறந்து கொண்டிருக்கிறது. பாஜக ஆட்சி நடைபெற்று வரும் ஒரே தென்மாநிலம் கர்நாடகாதான் என்பதால் இங்கு ஆட்சியை இழந்து விடக்கூடாது என பாஜக வியூகம் வகுத்து வருகிறது.

அதேவேளையில், தொடர் தோல்விகளால் துவண்டு போயிருக்கும் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் உத்வேகத்துடன் உள்ளது. இன்னொரு பக்கம் ஜேடி(எஸ்) கட்சியும் கிங் மேக்கராக வலம் வரும் முனைப்புடன் உள்ளது. இப்படி கர்நாடக தேர்தல் களம் உச்ச கட்ட பரபரப்பை எட்டியுள்ள நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் அணி தலைவர் பிரவீன் கம்மர் (வயது 36) ஓட ஓட விரட்டி கொடூரமாக வெட்டிக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் அங்கு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக இளைஞர் அணி நிர்வாகியாகவும் கொடுர் கிராம பஞ்சாயத்து தலைவராகவும் இருந்து வந்த பிரவீன் கம்மர், செவ்வாய்க்கிழமை தர்வார்டு என்ற பகுதியில் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்டார். தர்வார்டு தொகுதியில் உள்ள அவரது கிராமத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாவின் போது இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட தகராறை விலக்கி விட பிரவீன் கம்மர் சென்றதாகவும் அப்போது சில இளைஞர்கள் பிரவீன் கம்மரை கத்தியால் கழுத்து உள்ளிட்ட இடங்களில் குத்திக் கொன்றதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
பிரவீன் கம்மர் படுகொலை தொடர்பாக அவரது மனைவி அளித்த புகாரின் பேரில் 7 பேரை கைது செய்துள்ள போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அரசியல் காரணங்களுக்காக இந்தக் கொலை நடைபெற்றதா என்று உறுதியாக தெரியவில்லை என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. தேர்தலுக்கு சில நாட்களே இருக்கும் நிலையில், பாஜக இளைஞர் அணியின் முக்கிய நிர்வாகி படுகொலை செய்யப்பட்டு இருப்பது கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications