தாலி கட்டும் நேரத்தில் வந்த போன்! மணக்கோலத்தில் பெண் எடுத்த முடிவால் நொறுங்கிய மாப்பிள்ளை
பெங்களூர்: தமிழ் சினிமா காட்சிகளில் திருமணம் நடக்கப்போகும் நேரத்தில் குறிப்பாக மாப்பிள்ளை மணப்பெண்ணின் கழுத்தில் தாலிக் கயிறை கொண்டு செல்லும்போது எப்படி நிறுத்தப்படுமோ அதேபோன்று ஒரு அதிர்ச்சி சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது. மணப்பெண்ணுக்கு வந்த போன் காலால் அவர் தாலி கட்டும் நேரத்தில் திருமணத்தை நிறுத்தியுள்ளார்.
என்னுடைய காதலன் போன் செய்து திருமணத்தை நிறுத்திவிட்டு வா நாம் ஓடிப்போய்விடும் என்று காதலன் கூறியதால் திருமணத்தை நிறுத்திவிட்டதாக மணப்பெண் திருமண மேடையில் குண்டை தூக்கி போட்டார். இதனால், சில நொடிகளில் தாலி கட்டிவிடுவோம் என்று நினைத்த மாப்பிள்ளை மட்டும் இன்றி அவர்களை வாழ்த்த வந்திருந்த சொந்த பந்தத்தினரும் அதிர்ச்சியடைந்தனர்.

அரசு பள்ளி ஆசிரியர்
கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தை சேர்ந்த இளைஞருக்கு நேற்று திருமணம் நடக்க இருந்தது. அரசு பள்ளி ஆசிரியரான இந்த இளைஞருக்கு பெற்றோர் பூவனஹள்ளி என்ற கிராமத்தை சேர்ந்த முதுகலை பட்டம் முடித்த பெண்ணுடன் நிச்சயம் செய்தனர். நிச்சயதார்த்தம் எல்லாம் முடிந்த நேற்று காலையில் இவர்களது திருமணம் நடைபெற இருந்தது.
திருமணத்துக்கு உண்டான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உறவினர்கள், நண்பர்கள் எல்லாரும் திருமணத்துக்கு வந்துவிட்டனர். பூ, மாலை, பாட்டு, கச்சேரி சொந்தக்காரர்கள் என திருமண வீடு களைக்கட்டியிருந்தது. முகூர்த்த நேரம் நெருங்கியதால், மணமேடைக்கு முதலில் மாப்பிள்ளை வந்து அமர்ந்தார். அதனைத் தொடர்ந்து மணப்பெண்ணும் பட்டுசேலை, நகைகள் உடுத்தியபடி மாப்பிள்ளை அருகில் மணக்கோலத்தில் வந்து அமர்ந்தார்.
தாலி கட்டும்போது வந்த போன்
இன்னும் சிறிது நேரத்தில் தாலி கட்டிவிடுவோம் கல்யாண மாப்பிள்ளையாகிவிடுவோம் என்று நினைத்த மாப்பிள்ளைக்கு அதிர்ச்சி காத்திருந்தது என்று தான் சொல்லவேண்டும். எப்படி சினிமாக்களில் ஐயர் மந்திரம் ஓத.. கட்டி மேளம்.. மாங்கல்யம் தந்துனானே நமதீப.. என்று கூறவும், மேளம், அங்கிருந்தவர்கள் சத்தங்களுக்கு மத்தியில் கடைசி நேரத்தில் எங்கிருந்தோ நிறுத்துங்க என்ற சத்தம் கேட்பதுபோல், இவரது வாழ்க்கையிலும் நடந்துள்ளது.
ஐயர் கெட்டிமேளம் என்று சொல்வதுக்கு முன்பு மணமகளின் செல்போன் ரிங்க்டோன் சத்தம் கேட்டுள்ளது. உடனே அதை எடுத்து மணமகள் பேசிய நிலையில், அதற்கு பிறகு அவரது முகம் மாறிப்போனது.. ஐயர் தாலியை கட்டுங்க என்று சொல்ல.. மாப்பிள்ளையும் தாலியை எடுத்து பெண்ணின் கழுத்து கிட்டே கொண்டுசென்றபோது.. "நிப்பாட்டுங்க.. எனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை" என்று கூறிவிட்டார்.
நான் ஒருத்தரை காதலிக்கிறேன்
இதனால் தாலி கட்ட நினைத்த மாப்பிள்ளை மட்டுமல்லாமல், அவர்களை வாழ்த்த வந்த சொந்தக்காரர்கள் கூட அப்படியே ஒரு நிமிடம் ஷாக் ஆகி நின்றுவிட்டனர். பின்னர் ஏன் என்று மாப்பிள்ளை கேட்க, மணமகள் ஒவ்வொன்றாக கூறினார். 'நான் ஒருத்தரை காதலித்து வருகிறேன்.. அவரை தான் திருமணம் செய்ய விரும்பினேன். ஆனால் இது என் பெற்றோருக்கு பிடிக்கவில்லை. வேறு வழியில்லாமல் இந்த திருமணத்துக்கு சம்மதித்தேன்..
இப்போது என் காதலன் தான் போன் செய்தார்.. எப்படியாவது கல்யாணத்தை நிறுத்தி விட்டு வா.. நாம் எங்காவது ஓடிப்போய் திருமணம் செய்துகொள்வோம் என்று கூறினார். நானும் என் காதலனுடன் தான் வாழ விரும்புகிறேன். தயவு செய்து திருமணத்தை நிறுத்திவிடுங்க" என்று கூறினார். இதனால் மாப்பிள்ளை அடுத்து எதும் பேசாமல் அப்படியே நின்று விட்டார்.
போலீசார் முயற்சியும் வீண்
பெண்ணின் பெற்றோர் எவ்வளவோ சமாதானம் செய்ய முயன்றனர். ஆனால் நான் என் காதலைனை தான் திருமணம் செய்வேன் என்று கூறிவிட்டு மணமேடையை விட்டு இறங்கி, மணமகள் அறைக்கு சென்று உள்பக்கமாக கதவை பூட்டிக்கொண்டார். இதனால் திருமணத்திற்கு வந்திருந்த பலரும் அதிர்சியடைந்தனர். தொடர்ந்து மாப்பிள்ளையும் இனி இந்த திருமணம் வேண்டாம் என்று கூறிவிட்டார்.
எனினும் மணமகளின் பெற்றோர் உடனே போலீசுக்கு போன் செய்து வரவைத்தனர். அதன்பேரில் போலீசாரும் வந்து பெண்ணிடம் பேச்சுவார்த்தை நடத்தி பார்த்தனர். ஆனால் அவர் உறுதியாக காதலனை தான் திருமணம் செய்வேன் என்று கூறியதால், போலீசாரும் இனி எதுவும் செய்ய முடியாது.. பெண் மேஜர்.. அவர் விருப்பப்படியே காதலனை திருமணம் செய்யட்டும் என்று கூறிவிட்டு சென்றனர். விருந்து, கச்சேரி என எல்லாம் ஏற்பாடு செய்துவிட்டு கடைசியில் திருமணம் நின்றுபோனதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.













Click it and Unblock the Notifications