பெங்களூர் வாங்க ஜோசப் விஜய்.. காவிரி பிரச்சனை பற்றி பேச ஆகஸ்ட் 3ல் அழைப்பு.. கர்நாடகா அரசு கடிதம்
பெங்களூர்: காவிரி நதி நீர் பிரச்சனை மற்றும் மேகதாது அணை தொடர்பாக விவாதிக்க ஆகஸ்ட் 3ம் தேதி வரும்படி தமிழக முதல்வர் ஜோசப் விஜய்க்கு, கர்நாடகா அரசு சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கர்நாடகாவில் இருந்து காவிரியில் தண்ணீர் திறக்க முடியாது என்று அம்மாநில அரசு காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் கூறிய நிலையில் இந்த விவகாரம் வெளியாகி உள்ளது.
தமிழகத்துக்கும், கர்நாடகாவிற்கும் இடையே காவிரி நதி நீரை பங்கீட்டு கொள்வதில் பிரச்சனை இருந்து வருகிறது. உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி ஒவ்வொரு ஆண்டும் கர்நாடகா, தமிழகத்துக்கு 177.25 டிஎம்சி தண்ணீரை மாதவாரியாக பிரித்து வழங்க வேண்டும்.

ஆனால் கர்நாடகா சார்பில் காவிரி நீர் முறையாக வழங்கப்படுவது இல்லை. வறட்சி, மழையின்மை என்று காரணம் காட்டி காவிரியில் தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய தண்ணீர் உரிய நேரத்தில் கிடைப்பது இல்லை.
நடப்பு ஆண்டில் கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யவில்லை. பற்றாக்குறையாக உள்ளது. இதனால் கேஆர்எஸ் உள்பட அங்குள்ள 4 அணைகளிலும் தண்ணீர் பற்றாக்குறை உள்ளது. 50 சதவீத அளவுக்கு மட்டுமே தண்ணீர் உள்ளன. தண்ணீர் பற்றாக்குறையை காரணம் காட்டி தமிழகத்துக்கு, கர்நாடகா தண்ணீர் திறக்கவில்லை. தமிழகத்திற்கு ஜூன் 1 முதல் ஜூலை 19 வரை 28.3 டிஎம்சி அளவுக்கு தண்ணீர் திறக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், பருவமழையை காரணம் காட்டி கர்நாடகா தொடர்ந்து தண்ணீர் திறக்க மறுத்து வருகிறது.
முன்னதாக பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே நேற்று டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் தமிழகம் சார்பில் கர்நாடகா ஜூன் 1 முதல் ஜூலை 19 வரை வெறும் 3.4 டிஎம்சி அளவு மட்டுமே தண்ணீரை கொடுத்திருக்கிறது. இன்னும் 24.8 டிஎம்சி அளவுக்கு தண்ணீரை திறந்து விட வேண்டி இருக்கிறது. அதனை உடனே வழங்க உத்தரவிட வேண்டும் என்று வாதிடப்பட்டது.
அதற்கு கர்நாடகா சார்பில்,''கர்நாடகாவின் கேஆர்எஸ், கபினி, ஹேமாவதி, ஹாரங்கி என 4 முக்கிய அணைகளின் மொத்த கொள்ளளவு 114.57 டிஎம்சி ஆகும். இப்போதைக்கு 48.9 டிஎம்சி தான் தண்ணீர் உள்ளது. இது பாதி அளவு தான். இதனால் எங்களுக்கு குடிநீருக்கு, தண்ணீர் தேவை உள்ளது. இதனால் தண்ணீர் திறக்க முடியாது'' என்று வாதிடப்பட்டது. இதையடுத்து காவிரி மேலாண்மை ஆணையம் சார்பில் தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பது தொடர்பாக எந்த உத்தரவையும் பிறப்பிக்காமல் போனது. இது கர்நாடகாவிற்கு சாதகமாக அமைந்தது.
இந்நிலையில் தான் முதல்வர் விஜய்யை பேச்சுவார்த்தைக்கு அழைத்து கர்நாடகா அரசு சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது, கர்நாடகாவின் வறட்சி கால சூழ்நிலை குறித்து முதல்வர் விஜய்யிடம் பேச கர்நாடகா அரசு தயாராகி உள்ளது. அதன்படி ஆகஸ்ட் மாதம் 3ம் தேதி முதல்வர் விஜய்யை பேச்சுவார்த்தைக்கு பெங்களூர் வரும்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக முதல்வர் விஜய்க்கு கடிதம் எழுதப்பட்டுள்ளதாம்.
அதில், '' போதிய மழை பெய்யாத சூழ்நிலையில் வறட்சி கால முறைப்படி காவிரி நீரை தண்ணீரை பங்கிட்டு கொள்வது குறித்து பேசவும், மேகதாது அணை குறித்தும் பேசி சுமூக தீர்வு காணவும் கர்நாடகம் விரும்புகிறது. இதனால் பேச்சுவார்த்தைக்கு பெங்களூருவுக்கு ஆகஸ்ட் 3ம் தேதி வர வேண்டும்'' என கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. இருப்பினும் இதுபற்றி தமிழகம் மற்றும் கர்நாடகா அரசு சார்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அறிவிக்கவில்லை. இதனால் முதல்வர் விஜய் கர்நாடகா அரசின் அழைப்பை ஏற்று ஆகஸ்ட் 3ம் தேதி பேச்சுவார்த்தைக்கு செல்வாரா? இல்லையா? என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.


Click it and Unblock the Notifications
