காவிரி: கர்நாடகா பந்த்- ஒரே வாரத்தில் பெங்களூரில் மீண்டும் 144 தடை உத்தரவு- போராட்டங்களுக்கும் தடை!
பெங்களூர்: காவிரி நீரை தமிழ்நாட்டுக்கு திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகா தழுவிய பந்த் போராட்டம் நாளை நடைபெறுவதால் பெங்களூர் மாநகரில் இன்று நள்ளிரவு முதல் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படும் என போலீசார் அறிவித்துள்ளனர்.
காவிரியில் தமிழ்நாட்டுக்கு உரிய நீரை திறந்துவிட கர்நாடகா அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. காவிரி மேலாண்மை ஆணையம் வினாடிக்கு 5,000 கன அடி நீரை 15 நாட்களுக்கு திறந்துவிட உத்தரவிட்டது. தமிழ்நாடு கேட்டதோ 24,000 கன அடி நீர். ஆனால் இந்த 5,000 கன அடி நீரை கூட கர்நாடகா திறந்துவிடாமல் சொற்ப அளவுதான் நீரை திறந்தது. இதற்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்துக்கு போனது.

மண்டியா பந்த்: உச்சநீதிமன்றமும் காவிரியில் தமிழ்நாட்டுக்கு 5,000 கன அடி நீரை திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவிட்டது. இதற்கு எதிராக கர்நாடகா பாஜக, கன்னட விவசாய அமைப்புகள் மண்டியா, சாம்ராஜ்நகர், மைசூர் உள்ளிட்ட இடங்களில் சில வாரங்களாக போராட்டங்களை நடத்தின. மண்டியாவில் பந்த் போராட்டமும் நடத்தப்பட்டது.
பெங்களூர் பந்த்: இதனைத் தொடர்ந்து பெங்களூர் பந்த் போராட்டமும் செப்டம்பர் 26-ந் தேதி நடத்தப்பட்டது. அன்றைய தினம் பெங்களூர் நகரில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது. பெங்களூர் பந்த் போராட்டத்துக்கு ஓரளவுதான் ஆதரவு இருந்தது. அப்போராட்டத்தின் போது போலீசாரின் தடையை மீறி போராட்டம் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
கர்நாடகா பந்த் போராட்டம்: இந்நிலையில் தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகா தழுவிய பந்த் போராட்டம் நாளை நடத்தப்படும் என கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இப்போராட்டத்துக்கு 2,000 கன்னட அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன என கன்னட சலுவாளி கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் கூறியுள்ளார். கர்நாடகா அரசும் கர்நாடகா பந்த் போராட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. கர்நாடகா பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. பெங்களூர் நகரில் நாளை டவுன் ஹாலில் இருந்து சுதந்திர பூங்கா வரை பிரம்மாண்ட பேரணி நடத்தப்படும் எனவும் போராட்ட அமைப்புகள் அறிவித்துள்ளன. கர்நாடகாவில் நெடுஞ்சாலைகளில் மறியல் போராட்டம் நடைபெறும் ரயில்களை மறித்தும் போராட்டம் நடத்தப்படும். சுங்க சாவடிகள் முன்பாகவும் மறியல் நடத்தப்படும் எனவும் கன்னட அமைப்புகள் தெரிவித்துள்ளன.
மீண்டும் 144 தடை உத்தரவு: இதனிடையே பெங்களூர் நகரில் கர்நாடகா பந்த் போராட்டத்தை முன்னிட்டு மீண்டும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது. பெங்களூர் நகரில் இன்று நள்ளிரவு முதல் நாளை நள்ளிரவு வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட உள்ளது.
போராட்டங்களுக்கு அனுமதி இல்லை: மேலும் உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற உத்தரவுகளின் படி பந்த் போராட்டத்துக்கு அனுமதி கிடையாது; எந்த ஒரு அமைப்பும் கட்சியும் பெங்களூரில் போராட்டம் நடத்த அனுமதி கோரவும் இல்லை. ஆகையால் பெங்களுர் நகரில் 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் போது போராட்டங்கள் நடத்தப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்; வர்த்தக நிறுவனங்களை மூட வேண்டும் என யாரும் கட்டாயப்படுத்தினாலும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பெங்களூர் மாநகர போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஹோட்டல்கள் மூடல்: இதனிடையே பெங்களூர் நகரில் கர்நாடகா பந்த் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து அனைத்து ஹோட்டல்களும் மூடப்படும் என உணவக உரிமையாளர் சங்கங்கங்கள் அறிவித்துள்ளன. இதனால் பெங்களூர் உள்ளிட்ட கர்நாடகா முக்கிய நகரங்களில் நாளை இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது.












Click it and Unblock the Notifications