விஜய்யின் ‘ஜனநாயகன்' போஸ்டரை கிழித்த கன்னட அமைப்பினர்.. காவிரி விவகாரத்தில் கர்நாடகாவில் பதற்றம்
பெங்களூர்: கர்நாடகாவில் இருந்து காவிரியில் தண்ணீர் திறக்க கோருவதால் ஆத்திரமடைந்த கன்னட அமைப்பினர் மண்டியாவில் உள்ள தியேட்டரில் ஒட்டப்பட்டு இருந்த முதல்வர் விஜய் நடிப்பில் வெளியான 'ஜனநாயகன்' போஸ்டரை கிழித்து எதிர்ப்பு தெரிவித்தனர்.
தமிழ்நாடு - கர்நாடகா இடையே மீண்டும் காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக பிரச்சனை வெடித்துள்ளது. தமிழகத்துக்கு நேற்று முதல் 15 நாட்களுக்கு தினமும் 3,500 கனஅடி தண்ணீரை காவிரியில் கர்நாடகா திறந்து விட வேண்டும் என்று காவிரி நீர் ஒழுங்குமுறை குழு உத்தரவிட்டது.

ஆனால், அதனை வழங்க கர்நாடகா மறுத்து வருகிறது. அதுமட்டுமின்றி தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து பெங்களூர், மண்டியா, மைசூர் உள்ளிட்ட பல இடங்களில் கன்னட அமைப்பினர், விவசாய அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் கன்னட அமைப்பினர் இன்று மண்டியாவில் போராட்டம் நடத்தினர். அங்குள்ள குருஸ்ரீ என்ற தியேட்டரில் முதல்வர் விஜய் நடிப்பில் வெளியாகி உள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. இதற்காக தியேட்டர் முன்பு விஜய் போட்டோவுடன் 'ஜனநாயகன்' போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்தது. அந்த போஸ்டரை கன்னட அமைப்பினர் கிழித்தனர்.
இதற்கிடையே தான் டெல்லியில் இன்று காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் தண்ணீர் திறக்ககோரிய காவிரி நீர் ஒழுங்குமுறை குழுவின் உத்தரவை எதிர்த்து கர்நாடகா காவிரி மேலாண்மை ஆணையத்தில் செய்யப்பட்ட மேல்முறையீடு பற்றி விவாதிக்கப்பட உள்ளது.


Click it and Unblock the Notifications
