சந்திரயான் 3.. லேண்டரில் இருக்கும் குட்டி ராக்கெட்.. "பிரேக்" இதுதான்.. இதோட வேலை என்ன தெரியுமா?
பெங்களூர்: சந்திரயான் 3 விண்கலம் நாளை மாலை நிலவில் கால் பதிக்க இருக்கிறது. சந்திரயான் விண்கலத்தின் லேண்டர் தரையிறங்குவதில் கடைசி 15 நிமிடங்கள் முக்கியமானது ஆகும். ஏனெனில் சந்திரயான் 2 பெயிலியர் ஆனது இந்த இடத்தில் தான். எனவே, சந்திரயான் 3 திட்டத்தை வெற்றிகரமாக்க இஸ்ரோ கையாளும் தொழில் நுட்பம் பற்றி இங்கே பார்க்கலாம்.
நிலவை காட்டி சோறு ஊட்டிக் கொண்டு இருந்த காலம் போய்.. நிலவுக்கே போய் குடியேற முடியுமா? விஞ்ஞான உலகம் ஆராய்ச்சி செய்து கொண்டு இருக்கிறது. நிலவு குறித்த ஆராய்ச்சியில் இந்தியாவும் முக்கிய பங்கு வகிக்கிறது. சந்திரயான் திட்டங்கள் மூலமாக நிலவை ஆய்வு செய்து வரும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, தனது சாதனை பயணத்தில் அடுத்த வரலாற்று சாதனையை நிகழ்த்த தயாராகி வருகிறது.

இதுவரை வேறு எந்த நாடும் ஆய்வு செய்யாத நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் 3 விண்கலம் ஆய்வு செய்ய உள்ளது. சந்திரயான்-1, சந்திரயான்-2 ஆகிய இரண்டு விண்கலங்களை நிலவுக்கு அனுப்பி, அங்கு தண்ணீர் இருப்பதை உறுதி செய்த இஸ்ரோ, சந்திரயான் 3 விண்கல திட்டத்தின் மூலம் பல முக்கிய கண்டுபிடிப்புகளை கண்டு பிடிக்க உள்ளது. கடந்த மாதம் 14-ந்தேதி சந்திரயான்-3 விண்கலத்தை இஸ்ரோ ஏவியது.
பல லட்சம் கிலோ மீட்டர் பயணம் செய்து நிலவின் சுற்றுவட்டப்பாதைக்குள் சென்ற சந்திரயான் 3 விண்கலம் தற்போது நிலவில் தரையிறங்க தயாராக உள்ளது. சரியாக நாளை மாலை 6.04 மணிக்கு சந்திரயான் விண்கலம் தரையிறங்கும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்த வரலாற்று சிறப்பு மிக்க சாதனையை இந்தியா மட்டுமின்றி உலகநாடுகளும் எதிர்பார்த்து கொண்டுள்ளது.
குறிப்பாக இந்தியாவுக்கு போட்டியாக ரஷ்யா ஏவிய லுனா 25 விண்கலம் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க முயன்ற போது தோல்வியில் முடிந்தது. இதனால், சந்திரயான் 3 விண்கலத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. தற்போது, நிலவு சுற்றுவட்டப்பாதையில் சுற்றி வரும் சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து லேண்டர் வெளியே கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த லேண்டர் கருவி, நிலவை நெருங்கி கொண்டு இருக்கிறது. இது தரையிறங்குவதற்கான பல்வேறு படிநிலைகளை கடந்து செல்ல வேண்டியுள்ளது. அதுபோன்ற வடிவமைப்பைதான் இஸ்ரோ மேற்கொண்டுள்ளது. குறிப்பாக நிலவில் தரையிறங்கும் போது கடைசி 15 நிமிடங்கள் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. சந்திரயான் 2 விண்கலம் இந்த இடத்தில் தான் தோல்வியை கண்டது.
எனவே, சந்திரயான் 3 விண்கலத்தில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களை இஸ்ரோ செய்துள்ளது. அதாவது நாளை தரையிறங்குவதற்கு 15 நிமிடத்திற்கு முன்பாக 30 கி.மீட்டர் தூரத்துக்கு லேண்டர் கருவி நெருங்கி வரும். பின்னர் ராக்கெட் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி லேண்டர் தரையிறங்கும். அது என்ன ராக்கெட் தொழில் நுட்பம் என சந்தேகம் வரலாம். ஏன், இந்த தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுகிறது என்றால், லேண்டர் கருவி நிலவில் தரையிறங்கும் போது அதே வேகத்தில் இறங்கினால் கீழே விழுந்து சேதம் அடைந்து விடும்.
எனவே அதன் வேகத்தை குறைக்க இந்த குட்டி ராக்கெட்டை லேண்டருக்கு கீழே இஸ்ரோ பொருத்தியுள்ளது. லேண்டர் நிலவை நோக்கி இறங்கும் போது, குட்டி ராக்கெட் எதிர்திசையில் உந்தி தள்ளும். இதனால், லேண்டரின் வேகம் மட்டுப்பட்டு சீரான வேகத்தில் நிலவின் தரைப்பகுதியை நோக்கி செல்லும். நிலவின் தரைப்பகுதிக்கு 10 மீட்டர் இடைவெளி வரும் போது இந்த ராக்கெட்டின் செயல்பாடு நிறுத்தப்பட்டு விடும்.
லேண்டர் கருவியின் செயல்பாடுகள் பாதிக்காமல் இருக்க இவ்வாறு செய்யப்படும். இதன்படி பார்த்தால் 10 மீட்டர் உயரத்தில் இருந்து லேண்டர் கருவி கீழே தானாகவே தரையிறங்கும். நொடிக்கு 2 மீட்டர் வேகத்தில் போய் லேண்டர் கருவி விழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை இதை விட வேகமாக விழுந்தாலும் லேண்டரில் வலுவான கால்கள் இருப்பதால் எந்த பாதிப்பும் ஏற்படாது.












Click it and Unblock the Notifications