மூச்சு விடமுடியவில்லை.. மோசமான உடல்.. பிளாஸ்மா தெரபி பெற்ற நபர் திடீர் பலி.. கர்நாடகாவில் ஷாக்!
கர்நாடகாவில் கொரோனாவிற்காக பிளாஸ்மா சிகிச்சை பெற்ற நபர் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூர்: கர்நாடகாவில் கொரோனாவிற்காக பிளாஸ்மா சிகிச்சை பெற்ற நபர் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உலகம் முழுக்க கொரோனாவிற்காக பிளாஸ்மா சிகிச்சையை பயன்படுத்தலாமா என்ற விவாதம் நடந்து வருகிறது. கொரோனா மூலம் பாதிக்கப்பட்ட நபர்கள் அதில் இருந்து முழுமையாக குணமடைந்த பின் அவர்களின் உடலில் இருந்து ரத்தத்தை எடுத்து அதை வேறு கொரோனா நோயாளிகளின் உடலில் செலுத்துவார்கள்.
ஏற்கனவே கொரோனா வந்து குணமடைந்த நபரின் ரத்தத்தில் இருக்கும் பிளாஸ்மாவை மட்டும் வெளியே எடுத்து அடுத்த கொரோனா நோயாளிக்கு செலுத்துவார்கள். இதுதான் கொரோனா பிளாஸ்மா சிகிச்சை ஆகும்.

பிளாஸ்மா தெரபி என்றால் என்ன
இந்த பிளாஸ்மா செல்களில் கொரோனாவிற்கு எதிரான எதிர்ப்பு சக்தி இருக்கும். இதை உடலில் செலுத்துவதன் மூலம், நமது உடலும் அந்த எதிர்ப்பு சக்தியை பெற்று, கொரோனாவிற்கு எதிராக போராடும். இதனால் எளிதாக கொரோனாவிற்கு எதிராக நமது உடல் போரிட்டு வெற்றிபெறும். இந்தியாவில் இதை ஆராய்ச்சி ரீதியாக பயன்படுத்தவும், நோயாளிகளிடம் ஆராய்ச்சி ரீதியாக பயன்படுத்தவும் மத்திய சுகாதார துறை அனுமதி அளித்துள்ளது.

பிளாஸ்மா சிகிச்சை பெற்ற நபர் பலி
இந்த நிலையில் கர்நாடகாவில் கொரோனாவிற்காக பிளாஸ்மா சிகிச்சை பெற்ற நபர் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அங்கு விக்டோரியா மருத்துவமனையில் இவர் சிகிச்சை பெற்று வந்தார். 60 வயதான இவர் ஆந்திர பிரதேசத்தை சேர்ந்தவர். இவருக்கு கடந்த ஒரு வாரமாக கொரோனா இருக்கிறது. இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் பிளாஸ்மா சிகிச்சை பெற்றார்.

திடீர் மோசம் ஆனது
முதலில் பிளாஸ்மா சிகிச்சைக்கு இவரின் உடல் ஒத்துழைத்தது. இவரின் உடல் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற்றம் அடைந்தது. ஆனால் நேற்று திடீர் என்று மீண்டும் உடல் மோசம் அடைந்தது. இவருக்கு மூச்சு விடுவதில் பெரிய பிரச்சனை வந்தது. இதையடுத்து நேற்று உடல்நிலை இவருக்கு மோசம் அடைந்து பலியானார். இவருக்கான பிரேத பரிசோதனை நடந்து வருகிறது.

காரணம் என்ன?
இவருக்கு ஏற்கனவே சர்க்கரை வியாதி, ஹைப்பர்டென்ஷன் மற்றும் இதயம் தொடர்பான பிரச்சனைகள் இருந்துள்ளது. இதனால் இவர் பலியாகி இருக்கலாம் என்றும் கூறுகிறார்கள். பெரும்பாலும் பிளாஸ்மா தெரபி இவரின் மரணத்திற்கு காரணமாக இருக்க வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது. பிரேத பரிசோதனை முடிவு வந்தால் தெரிந்துவிடும். இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

ஆராய்ச்சி தொடரும்
அதே சமயம் பிளாஸ்மா தெரபி தொடர்பான ஆராய்ச்சி தொடர்ந்து செய்யப்படும். இது பிளாஸ்மா தெரபியின் தவறு இல்லை. இதை தொடர்ந்து செய்வோம் என்று கர்நாடகாவின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதேபோல் மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் கடந்த சில நாட்கள் முன் ஒருவருக்கு கொரோனாவிற்காக பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டது. 53 வயது உடைய இந்த நபருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டது.

திடீரென பலியானார்
இவரும் பிளாஸ்மா சிகிச்சை பெற்று மூன்று நாட்களில் பலியானார். பிளாஸ்மா சிகிச்சை பெற்ற பின் இவருக்கு மோசமான சுவாச கோளாறு நோய்க்குறி எனப்படும் acute respiratory distress syndrome ஏற்பட்டது. அதேபோல் ரத்தத்தில் இன்பெக்சன் ஏற்படும் septicaemia- செப்டிசீமியா தாக்குதல் இவருக்கு ஏற்பட்டது. பிளாஸ்மா மாற்றியதன் காரணமாக இவருக்கு ரத்தத்தில் இன்பெக்சன் ஏற்பட்டு பலியானார்.












Click it and Unblock the Notifications