பெங்களூரில் ஓமிக்ரானின் இரு துணை வேரியண்ட்.. 3 அலைகளை போல் 4ஆவது அலையிலும் ஒரே பேட்டர்ன்!
பெங்களூர்: பெங்களூரில் ஓமிக்ரானின் இரு துணை வேரியண்ட்களான பிஏ.2.10 மற்றும் பிஏ.2.12 கண்டறியப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனாவின் 3ஆவது அலை இறுதிக் கட்டத்தில் இருந்தது. இதனால் மக்கள் சற்று நிம்மதி பெரூமூச்சு விட்டனர். இந்த நிலையில் தொற்று தற்போது மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது.
இது 4ஆவது அலைக்கான அறிகுறியா என்றும் மக்களிடையே சந்தேகம் கிளம்பி வருகிறது. நாட்டில் தொற்று மீண்டும் அதிகரிக்கும் மாநிலங்களில் தலைநகர் டெல்லி முக்கிய பங்கு வகிக்கிறது.

இரு தினங்கள்
அங்கு கடந்த இரு தினங்களுக்கு முன்னர் ஒரே நாளில் 1009 பேர் புதிதாக கொரோனா பாதிப்புக்குள்ளாகியுள்ளார்கள், இது அதற்கு முந்தைய தினத்தை விட 60 சதவீதம் அதிக எண்ணிக்கையாகும். டெல்லியில் புதிதாக தொற்றுக்கு ஆளானவர்களிடம் மரபணு சோதனை மேற்கொள்ளப்பட்டது.

பிஏ.2.12 வகை தொற்று
அவர்களில் பெரும்பாலானோருக்கு ஓமிக்ரானின் துணை மாறுபாடான பிஏ.2.12 வகை தொற்று பாதித்து இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே தற்போதைய தொற்று பரவலுக்கு இந்த ஓமிக்ரான் மாறுபாடே காரணம் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளார்கள்.

புதிய மாறுபாடுகள்
இதைத் தவிர ஓமிக்ரானின் மற்றொரு வழித்தோன்றலான பிஏ.2.12.1 வகை தொற்றும் சிலரிடம் கண்டறியப்பட்டு இருப்பதாக இந்திய கொரோனா மரபியல் கூட்டமைப்பு தெரிவித்து உள்ளது. எனினும் இதை சுகாதாரத்துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தவில்லை. அதேநேரம் பிஏ.2.12 மற்றும் பிஏ.2.10 ஆகிய 2 துணை மாறுபாடுகள் மட்டும் 60 சதவீதத்துக்கும் அதிகமான மாதிரிகளில் கண்டறியப்பட்டு இருப்பதாகவும், இவை வேகமாக பரவுவது தெரியவந்திருப்பதாகவும் கூறியுள்ளனர்.

ஹரியானா
இந்த புதிய மாறுபாடுகள் ஹரியானா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் பரவியுள்ளது. இந்த நிலையில் பெங்களூரில் இந்த இரு புதிய துணை மாறுபாடுகளும் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. பெங்களூர் நகர்ப்புறத்தில் கடந்த 7 தினங்களாக 300 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மாவட்டத்தில் 1,428 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

பெங்களூர்
இதுகுறித்து டாக்டர் சந்திரா கூறுகையில் பெங்களூரின் கிழக்கு பகுதியிலும் மகாதேவபுரத்திலும் கொரோனா கேஸ்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் அங்குள்ள 198 வார்டுகளிலும் கழிவுநீர் சுத்திகரிப்புப் பணிகளை நடத்த முடிவு செய்துள்ளோம். கழிவு நீர் கண்காணிப்பு தகவல்களும் இதையே உறுதிப்படுகின்றன. எனினும் எடுக்கப்பட்ட எல்லா மாதிரிகளிலும் ஓமிக்ரான் பிஏ.2 மாறுபாடு ஆதிக்கம் செலுத்துகிறது.

கொரோனா பரிசோதனை
கொரோனா பரிசோதனைகளை சுகாதாரத் துறை விரைவில் அதிகரிக்கும். நாங்கள் விழிப்புடன் இருக்கிறோம். தற்போது வரை கர்நாடகாவில் டெஸ்ட் பாசிட்டிவிட்டி ரேட்டானது 1 சதவீதத்தை விட குறைவாகவே இருக்கிறது. பெங்களூரில் சில நாட்களில் 1 சதவீதத்தை எட்டியது. ஆனால் அதுவும் சீராக உயரவில்லை.

3 அலைகள்
கடந்த 3 அலைகளின் போது முதலில் டெல்லி, அதன்பிறகு மகாராஷ்டிரா, கேரளா ஆகிய மாநிலங்களில் கொரோனா கேஸ்கள் அதிகரித்தன. அதன் பின்னர் 4 முதல் 6 வாரங்கள் கழித்து கர்நாடகாவில் கொரோனா கேஸ்கள் அதிகரித்தன. இதே போல் தற்போதும் நடக்கிறது. எனவே பரிசோதனையையும் 10 முதல் 15 சதவீதம் வரை அதிகரிக்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications