கர்நாடகா அரசியலில் ட்விஸ்ட்.. ஒரே நாளில் அந்தர் பல்டி அடித்த டி.கே. சிவக்குமார்
பெங்களூர்: கர்நாடகாவில் முதலமைச்சர் பதவிக்காக ஏற்பட்டுள்ள அதிகார யுத்தம் உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சித்தராமையா, டி.கே. சிவக்குமார் இடையே அதிகார போட்டி நிலவி கொண்டிருக்கிறது. முதலமைச்சர் பதவியை கைப்பற்ற சிவக்குமார் தன் கர்நாடகா காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சிவக்குமாரின் ஆதரவு எம்.எல்.ஏக்கள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். பரபரப்பான அரசியல் சூழலில் சிவக்குமார் கூறியுள்ள கருத்து அவரின் ஆதரவாளர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. அதில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அதன் பிறகு தான் பிரச்சனை எழுந்தது. கர்நாடகாவில் யாரை முதல்வராக்குவது என்று காங்கிரஸ் கட்சிக்குள் பிரச்சனை எழுந்தது. முன்னாள் முதலமைச்சர் சித்தராமையாவுக்கும், கர்நாடகா காங்கிரஸ் கமிட்டி தலைவர் டிகே சிவக்குமாருக்கும் இடையே முதலமைச்சர் பதவியை கைப்பற்ற அதிகார யுத்தம் நடைபெற்றது,

சித்தராமையா டி.கே சிவக்குமார்
நீண்ட விவாதத்திற்கு பிறகு ஒருவழியாக சித்தராமையா கர்நாடகா முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். டி.கே. சிவக்குமாருக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இதற்கு டி.கே சிவக்குமார் தரப்பில் அதிருப்தி ஏற்பட்டது. அதனால் காங்கிரஸ் தலைமை சார்பில் அப்போது ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது. அதில் ஆட்சியில் இருக்கும் 5 வருடங்களில் முதல் 2.5 வருடங்கள் சித்தராமையாவும், அடுத்த 2.5 வருடங்கள் டி.கே சிவக்குமாரும் முதலமைச்சர் பதவியில் இருப்பார்கள் என்று முடிவு செய்யப்பட்டது.
அதன்படி இந்த 2025 நவம்பர் மாதத்துடன் முதல் 2.5 வருடங்கள் முடிந்துவிட்து. சித்தராமையாவுக்கான காலம் முடிந்து, டி.கே. சிவக்குமாருக்கான காலம் பிறந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கர்நாடகா அரசியலில் நவம்பர் புரட்சி, பெரிய மாற்றம் இருக்க போகிறது என்று கடந்த சில வாரங்களாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. முதலமைச்சர் பதவியை பிடிப்பதற்காக டி.கே சிவக்குமாரும், முதலமைச்சர் பதவியை தக்க வைப்பதற்காக சித்தராமையாவும் தீவிரமாக காய் நகர்த்தி வருகிறார்கள்.
முதலமைச்சர் பதவி ரேஸ்
அதன் ஒரு பகுதியாக சிவக்குமார் ஆதரவு எம்எல்ஏக்கள் சிலர் நேற்று டெல்லி சென்றுள்ளனர். காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்த எம்எல்ஏக்கள், சிவக்குமாரை முதல்வராக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். மேலும் அவர்கள் காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபாலை சந்திக்கவும் திட்டமிட்டுள்ளனர். இது கர்நாடகா அரசியலில் உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதில் கடுப்பான கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா, நவம்பர் புரட்சி எல்லாம் ஒன்றும் இல்லை. இது ஊடகங்கள் கிளப்பிவிட்ட கட்டுக்கதை என்று விளக்கமளித்திருந்தார். ஆனால் சிவக்குமாரின் நடவடிக்கைகள் அதற்கு நேர்மாறாக உள்ளது. டி.கே. சிவக்குமார் தற்போது கர்நாடகா காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும் பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் அவர் அந்தப் பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிவக்குமார் ட்விஸ்ட்
கட்சி தலைமை பதவியை ராஜினாமா செய்த பிறகு டி.கே. சிவக்குமாருக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்றும் அவரின் ஆதரவாளர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள். இதுகுறித்து நேற்று முன்தினம் சூசகமாக கருத்து தெரிவித்த டி.கே. சிவக்குமார், நான் இருக்கிறேனா இல்லையா என்பதை பற்றி கவலை இல்லை. என் பதவியில் கட்சிக்காக 100 அலுவலகங்கள் திறக்க திட்டமிட்டேன். அதை செய்துவிட்டேன். ஒரே பதவியில் நிரந்தரமாக இருக்க முடியாது.
காங்கிரஸ் கமிட்டி தலைவராக 5.5 வருடங்கள் இருந்துவிட்டேன். வருகிற மார்ச் மாதத்துடன் 6 வருடங்கள் ஆகப்போகிறது. மற்றவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். நான் அவர்களுக்கு பக்க பலமாக நிற்பேன் என கூறியுள்ளார். முதலமைச்சர் பதவிக்கு சித்தராமையா அடம் பிடித்து வரும் நிலையில், எந்த பதவியும் யாருக்கும் நிரந்தரமில்லை. மற்றவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்பதையே சிவக்குமார் மறைமுகமாக சொல்லியிருப்பதாக கூறப்படுகிறது.
ஆதரவாளர்கள் குழப்பம்
இந்நிலையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சிவக்குமார், சித்தராமையா முதல்வர் பதவியில் தொடர்வதை யாரும் எதிர்க்கவில்லை. கட்சி அவருக்கு வாய்ப்பு வழங்கியுள்ளது. நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றுகிறோம். எம்எல்ஏக்கள் டெல்லி சென்றது பற்றி எனக்கு தெரியவில்லை. என்று கூறியுள்ளார். ஒரே நாளில் சிவக்குமாரின் கருத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தால் அவரின் ஆதரவாளர்கள் குழப்பமடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications