உதயநிதி ஸ்டாலினிடம் போட்டி போட்டு தேதி கேட்கும் இளைஞரணி நிர்வாகிகள்! பின்னணி என்ன?
சென்னை: உதயநிதி ஸ்டாலினிடம் திமுக இளைஞரணி நிர்வாகிகள் போட்டி போட்டுக் கொண்டு தேதி கேட்க ஆரம்பித்துள்ளனர்.
உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தமிழகத்தின் பல பகுதிகளிலும் திமுக இளைஞரணியினர் நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா, மார்ச் 1ஆம் தேதி வரக்கூடிய முதலமைச்சர் ஸ்டாலினின் பிறந்தநாள் விழா என இப்போதே உதயநிதியிடம் மாவட்டச் செயலாளர்கள் உட்பட இளைஞரணி புதிய நிர்வாகிகள் தேதி கேட்கின்றனர்.

திமுக இளைஞரணி
திமுக இளைஞரணிச் செயலாளரும், சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினின் 45வது பிறந்தநாள் விழாவை இளைஞரணியின் புதிய நிர்வாகிகள் இன்னும் கொண்டாடி வருகின்றனர். நலத்திட்ட உதவிகள் வழங்குவது, பொதுக்கூட்டங்கள் நடத்துவது என பல நிகழ்வுகள் தொடர்கின்றன. உதயநிதி பிறந்தநாளை ஒட்டி நேற்றுக் கூட சென்னை தியாகராயர் நகரில் 350 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீரூடைகள் வழங்கப்பட்டன.

முதல்வர் பிறந்தநாள்
இதனிடையே எதிர்வரும் மார்ச் 1ஆம் தேதி திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலினின் பிறந்தநாள் விழா வரவிருப்பதால் புதிதாக நியமிக்கப்பட்ட இளைஞரணி நிர்வாகிகள் பலரும் உதயநிதி ஸ்டாலினை அழைத்து முதல்வரின் பிறந்தநாளை கொண்டாட விரும்புகிறார்கள். இதனால் இப்போதே உதயநிதியிடம் போட்டி போட்டுக் கொண்டு தேதி கேட்க ஆரம்பித்துள்ளார்கள். இதேபோல் மற்ற அணிகளின் சார்பிலும் உதயநிதியிடம் தேதி கேட்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உதயநிதி பிஸி
சினிமா ஷூட்டிங், இளைஞரணி பணிகள், திரைப்பட விநியோகம், தொகுதிப் பணிகள், கட்சி முக்கியஸ்தர்கள் இல்ல திருமணங்களுக்கு தேதி கொடுப்பது, என தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் பிஸியாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. இதனிடையே இதற்கு மத்தியிலும் இளைஞரணி மாவட்ட நிர்வாகிகளின் அழைப்பை ஏற்று அவர்கள் நடத்தும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க முயற்சித்து வருகிறார் உதயநிதி ஸ்டாலின்.

மதுரையில் பிரம்மாண்டம்
இதனிடையே உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவுக்காக மதுரையில் அமைச்சர் மூர்த்தி பிரம்மாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த நிலையில், அதனை பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவாக மாற்றி அதில் கலந்துகொண்டு இளைஞர்களுக்கு கிரிக்கெட் பேட்களை பரிசளித்திருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications