மட்டன் வாங்க போறீங்களா.. வாங்க சார் வாங்க.. ஒரு கிலோ 550 ரூபாய்தான்.. கடைசியில் பார்த்தால் நாய் கறி
பெங்களூர்: பெங்களூரில் நாய் கறி விற்றதாக வெளியான தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ரயில் நிலையத்தில் சுமார் 1,500 கிலோ இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநில தலைநகரம் பெங்களூரில் நாய் இறைச்சியை விற்பதாக தகவல் வந்தது. அதனடிப்படையில் ரயில்வே பாதுகாப்புப் படை மற்றும் பெங்களூரு காவல்துறை இணைந்து கேஎஸ்ஆர் சிட்டி ரயில் நிலையத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். நடைமேடை 8 இல் நாய் இறைச்சி இருப்பதாக புகார் சொல்லப்பட்டது. தொடக்கத்தில் சுமார் 5,000 கிலோ இறைச்சி இருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது. பிறகு அதிகாரிகள் சோதனையிட்டதில் 150 பெட்டிகளில் சுமார் 1,500 கிலோ இறைச்சி இருப்பது தெரியவந்தது.

உணவுப் பிரிவு அதிகாரிகள் அந்த இறைச்சியின் மாதிரியை எடுத்து ஆய்வகத்துக்கு அனுப்பியுள்ளனர். இந்த இறைச்சி எங்கிருந்து வந்தது, அனுப்பியவரிடம் உரிய உரிமம் இருக்கிறதா என்ற கோணத்திலும் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதுகுறித்து வெளியாகியுள்ள தகவல்கள் பேரதிர்ச்சியை கொடுக்கின்றன. "பெங்களூரில் ஒரு கிலோ மட்டன் சராசரியாக ரூ.750 - 800க்கு விற்பனையாகிறது. ஆனால் கடந்த 6 மாதங்களாக சிலர் மட்டன் இறைச்சி ஒரு கிலோ ரூ.550 - 600 என்று விற்பனை செய்தனர். அப்போதே சந்தேகம் வந்தது. அப்துல் ரசாக் என்பவர்தான் நாய் இறைச்சி விற்கிறார். இதுகுறித்து கர்நாடக முதலமைச்சர், உணவுத்துறை, காவல்துறை ஆகியோருக்கு ஏராளமான புகார்கள் அனுப்பியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை." என்று சில வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
"நாங்கள் முறையாக தொழில் நடத்தி வருகிறோம். எங்களுக்கு ஜெய்பூரில் இறைச்சி கூடம் உள்ளது. இறைச்சியை 5 டிகிரி வெப்பத்தில் நன்கு பராமரித்துதான் பெங்களூர் அனுப்புகிறோம். பணம் பறிப்பதற்காக தவறான தகவல்களை பரப்புகிறார்கள்." என்று அப்துல் ரசாக் கூறியுள்ளார். "இது ஆட்டு இறைச்சி தான். நாய் இல்லை. இதுதொடர்பான அனைத்து ஆவணங்களையும் அதிகாரிகளிடம் விரைவில் சமர்பிப்பேன்." என்றும் அவர் கூறியிருக்கிறார்.
இதனிடையே ராஜஸ்தானில் இருந்து நாய் இறைச்சி விற்கிறார்கள் என்ற தகவல் பரவியவுடன், பெங்களூர் ரயில் நிலையத்தில் இந்து அமைப்பினர் குவிந்துவிட்டனர். இதனால் அங்கு சிறிது நேரத்துக்கு பதற்றம் நிலவியது. புனித் கிரேஹல்லி என்பவர்தான் இந்தப் புகாரை எழுப்பியிருந்தார். பசுக்களின் காவலர் என்று அடையாளத்துடன் வலம்வரும் அவர் கொலை வழக்கில் சிறை சென்று வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. "ஆய்வகத்துக்கு அனுப்பியுள்ள இறைச்சி மாதிரிகளின் முடிவுகள் 14 நாட்களில் கிடைத்துவிடும். அதனடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்." என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதேபோல, கடந்த 2018 ஆம் ஆண்டு ராஜஸ்தானில் இருந்து சென்னை ரயில் நிலையத்துக்கு ஆயிரம் கிலோ நாய் இறைச்சி கொண்டு வரப்பட்டிருப்பதாக புகார் எழுந்தது. ஆனால், பரிசோதனையில் அது நாய் இறைச்சி இல்லை, ஆட்டு இறைச்சிதான் என்பது தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
