அலறடித்த கரப்பான் பூச்சி கட்சி.. விடிய விடிய நடந்த போராட்டம்.. நீட் தேர்வு நாளில் உச்சக்கட்ட பதற்றம்
டெல்லி: டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்திற்காக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி நேற்று சனிக்கிழமை அளவில் போராட்டம் நடைபெற்றது. அந்த போராட்டம் நள்ளிரவிலும் தொடர்ந்தது. விடிய விடிய நடைபெற்ற இந்த போராட்டத்தில் அதிகளவில் மக்கள் கலந்து கொண்டனர். இன்றும் 2வது நாளாகப் போராட்டம் தொடரும் என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரப்பான் பூச்சி கட்சி அமைப்பின் நிறுவனர் அபிஜீத் திப்கே தலைமையில் இந்தப் போராட்டம் நடைபெற்றது. நீட் தேர்வு முறைகேடுகளால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நீதி கேட்டு இந்த அமைப்பு தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. நாடு முழுக்க இந்த அமைப்பு போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், நேற்று டெல்லியில் இந்த போராட்டங்கள் நடத்தப்பட்டது.

போராட்டம்
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு ரத்து ஆகியவற்றிற்குத் தார்மீகப் பொறுப்பேற்று, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக பதவி விலக வேண்டும் என்பதே இவர்களின் முதன்மையான கோரிக்கை. மேலும், நீட் தேர்வு முறைகேடு தொடர்பான மன உளைச்சலால் தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
டெல்லி காவல்துறை சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே போராட்டம் நடத்த அனுமதி அளித்திருந்தது. ஆனால், மாலை 5 மணி ஆன பிறகும், "அமைச்சர் பதவி விலகும் வரை நாங்கள் இடத்தை விட்டு நகர மாட்டோம்" என்று கூறி போராட்டக்காரர்கள் அங்கேயே அமர்ந்தனர். போலீசார் மைக் மூலம் போராட்டத்தை முடித்துக் கொள்ளுமாறு எச்சரித்தனர். விரைவு அதிரடிப்படையும் வரவழைக்கப்பட்டுப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
துண்டிப்பு
இரவு 8 மணி அளவில், போராட்டக் களத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும், குடிநீர் மற்றும் கழிவறை வசதிகள் முடக்கப்பட்டதாகவும் கரப்பான் பூச்சி கட்சி குற்றம் சாட்டியது. இருப்பினும், பின்னர் தண்ணீர் மற்றும் மின்சார வசதி மீண்டும் வழங்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான இளைஞர்கள் தங்கள் கைகளில் தட்டு மற்றும் கரண்டிகளை கொண்டு வந்து அவற்றை அடித்து சத்தம் எழுப்பினர்.
2020-ம் ஆண்டு கொரோனா காலத்தில் சுகாதார ஊழியர்கள் உட்பட முன்களப் பணியாளர்களைக் கௌரவிக்கப் பிரதமர் மோடி தட்டு அடிக்கச் சொன்னதைக் குறிப்பிட்டு இந்தப் போராட்டத்தை நடத்தினர். தட்டு அடிப்பதன் மூலம் கொரோனாவை விரட்ட முடியும் என்றால், அதே தட்டு அடிக்கும் சத்தத்தின் மூலம் தர்மேந்திர பிரதானையும் பதவியில் இருந்து விரட்ட முடியும் என்று அபிஜீத் திப்கே பேசினார்.
ஆதரவு
பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்தார். அவர் பேசுகையில், "வெறும் தட்டு அடிப்பதோடு நின்றுவிடக் கூடாது. கல்வி அமைச்சர் பதவி விலகாவிட்டால், ஜூன் 27-ம் தேதி முதல் நான் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவேன்" என்று அறிவித்தார். இந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கரப்பான் பூச்சி மாஸ்க் அணிந்து நூதன முறையில் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
இன்று ஞாயிற்றுக்கிழமை 2வது நாளாகப் போராட்டம் தொடரும் என்றே தெரிகிறது. காலை 9 மணிக்கு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பெருமளவில் திரண்டு வந்து போராட்டத்தில் இணையுமாறு அபிஜீத் திப்கே அழைப்பு விடுத்துள்ளார்.
பதவி விலக வேண்டும்
மத்திய அரசு பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தாலும், கல்வி அமைச்சர் பதவி விலகினால் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்துவோம் என்பதில் போராட்டக்காரர்கள் உறுதியாக உள்ளனர். இன்று நீட் தேர்வுக்கான மறுதேர்வு நடைபெறவுள்ள நிலையில், டெல்லியில் இந்தப் போராட்டம் தீவிரமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications