"இரட்டை குண்டுவெடிப்பு.." பிரான்ஸ் அதிபரை கொல்ல முயற்சி.. சிரியாவில் உச்சக்கட்ட பதற்றம்
டமாஸ்கஸ்: சிரியா தலைநகர் டமாஸ்கஸில், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மாக்ரோன் தங்கியிருந்த ஹோட்டல் அருகே செவ்வாய்க்கிழமை அடுத்தடுத்து குண்டுவெடிப்புகள் நிகழ்ந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மாக்ரோனை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐரோப்பிய தலைவர்களில் மிக முக்கியமானவர் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மாக்ரோன். சர்வதேச மோதல்களை முடிவுக்குக் கொண்டு வருவது உட்பட பல விஷயங்களில் இம்மானுவேல் மாக்ரோன் பங்கு முக்கியமானது. உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வரவும் கூட மாக்ரோன் தொடர்ச்சியாகப் பல முக்கிய முயற்சிகளை எடுத்து வருகிறார்.

குண்டுவெடிப்பு
இதற்கிடையே அவர் சிரியா அதிபர் அகமது அல்-ஷராவுடன் பேச்சுவார்த்தை நடத்த சிரியா தலைநகர் டாமாஸ்கஸுக்கு சென்றிருந்தார். இதற்கிடையே அவரை குறிவைத்து கொலை முயற்சி தாக்குதல் நடந்துள்ளது. இம்மானுவேல் மாக்ரோன் தங்கியிருந்த ஹோட்டல் அருகே தொடர் குண்டுவெடிப்புகள் ஏற்பட்டுள்ளது. பெரும் வெடிச்சத்தத்தைத் தொடர்ந்து அங்கு கரும் புகை சூழ்ந்தது.
குண்டுவெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அங்கு அனைத்து சாலைகளும் மூடப்பட்டுள்ள நிலையில், அப்பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வெடிப்பு சத்தம் கேட்டதாகவும், அதன் பின்னர் வானில் கரும்புகை எழுவதைக் கண்டதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளனர்.
பாதுகாப்பு
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மாக்ரோன், சிரிய அதிபர் அகமது அல்-ஷராவை அதிபர் மாளிகையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்த போது இந்த குண்டுவெடிப்புகள் நிகழ்ந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் மாக்ரோனுக்கு எதுவும் ஆபத்தில்லை. அவர் பாதுகாப்பாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
யார் காரணம்?
இந்த குண்டுவெடிப்புக்கு யார் காரணம் என்று தெரியவில்லை. இதுவரை எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்கவில்லை. இது தொடர்பாக சிரியா பாதுகாப்புப் படைகள் விசாரணையை தொடங்கியுள்ளன. வெடிகுண்டுகள் எவ்வாறு வைக்கப்பட்டன.. யாரை காலி செய்ய வெடிகுண்டுகள் வைக்கப்பட்டன என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சிரியாவில் பல ஆண்டுகளாக நீடித்த உள்நாட்டுப் போருக்குப் பிறகு அரசியல் சூழ்நிலை இப்போது தான் மெல்ல சீராகி வருகிறது. இந்தச் சூழலில் பிரான்ஸ் அதிபர் வருகையின் போது இப்படியொரு மோசமான சம்பவம் நடந்துள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
முதல் பயணம்
சிரிய முன்னாள் அதிபர் பஷார் அல்-அசாத் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்ட பிறகு.. ஐரோப்பிய ஒன்றியத்தை சேர்ந்த முக்கிய தலைவர் ஒருவர் டமாஸ்கஸுக்கு சென்றது இதுவே முதல்முறை.. அந்த வகையில், மாக்ரோனின் இந்த பயணம் சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்டது. இந்தச் சூழலில் தான் குண்டுவெடிப்பு நடந்துள்ளது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் யாரேனும் உயிரிழந்தார்களா அல்லது காயமடைந்தோர்களா குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.














Click it and Unblock the Notifications