லெப்ட் எடுத்து அமைச்சராயாச்சு! பிறகு எதற்கு வெட்டி பேச்சு! திருமாவுக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி
சென்னை: அமைச்சரவைக்குள் வந்துவிட்டாலே ஒரு அங்கம்தானே, தவெகவில் கூட்டணி அமையவில்லை என வார்த்தை விளையாட்டு வேண்டாம் என எம்பி தொல் திருமாவளவனுக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் பதில் கொடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருப்பதாவது: இந்தியா கூட்டணி என்பது டெல்லியில் விளையாடும் விளையாட்டு, தமிழகத்தில் இருப்பது தவெக தலைமையிலான கூட்டணி ஆட்சி, தவெக தலைமையில் 4 கட்சிகள் சேர்ந்து ஆட்சி அமைத்துவிட்டோம். 2 கட்சிகள் வெளியே இருந்து ஆதரவு தருகிறார்கள்.
இதில் எந்த குழப்பமும் இல்லை. சட்டசபையில் தவெக கொண்டு வந்த நம்பிக்கை கோரும் தீர்மானத்திற்கு எல்லாரும் (ஆதரவு எம்எல்ஏக்கள்) எழுந்து நின்று வாக்களித்துவிட்டார்கள். தேர்தல் கூட்டணி வருகிறதா என்பதை தேர்தல் அறிவித்தவுடன்தான் பார்க்க முடியும்! எங்களை பொருத்தமட்டில் ஆதரவு தந்து தோழமை வந்து அமைச்சரவையில் இருக்கிறோம்.

தவெக ஆட்சிக்கு வந்து முதல் அமைச்சரவை கூட்டம் நடந்து விட்டது. அதில் 4 கட்சியும் கலந்து கொண்டது. ஒரு அமைச்சரவை கூட்டத்தில் இத்தனை கட்சிகள் கலந்து கொண்டது 50 ஆண்டுகளில் இது முதல்முறையாகும்.
எனவே இந்த முறை என்பது புதிது! வார்த்தைகளில் குழப்பம் வேண்டாம். ஆதரவு நிலை, தோழமை நிலை, தேர்தல் கூட்டணி ஆகிய மூன்றிற்கும் பல வித்தியாசங்கள் உள்ளன. ஆதரவு எடுத்துவிட்டாலே கூட்டணிக்குள் வந்துவிட்டீர்கள் என்றுதான் அர்த்தம்.
அதாவது லெப்ட் டர்ன் எடுத்துவிட்டாலே லெப்டில் வந்துவிட்டீர்கள் என்று அர்த்தம். அதனால் எல்லா கட்சிகளும் லெப்ட் டர்ன் எடுத்தாகிவிட்டது. எனவே லெப்ட் டர்ன் எடுத்துவிட்டு ரைட் டர்ன் பற்றி பேசுவது வெட்டி வேலை! நமது பாதை தெளிவாக இருக்கிறது.
தமிழகத்தை காக்கவும் பாஜகவிடம் தமிழகம் செல்லாமல் இருக்கவும் இந்த கூட்டணி அமைக்கப்பட்டு தவெகவுக்கு ஆதரவு தெரிவித்து இந்த கூட்டணியை பலமாக மாற்றி இருக்கிறோம். நமது வேலையில்லா பட்டதாரிகள் அப்படிதான் இந்த கூட்டணியை பார்த்து புலம்பிக் கொண்டிருப்பார்கள். புலம்பல்களையும் கதறல்களையும் நம்மால் பார்க்க முடிகிறது.
சோஃபா, பேரம் என எதுவேண்டுமானாலும் திமுக சொல்லட்டும், அமைச்சர்கள் பாட்டுக்கு வேலையை செய்யட்டும் என மாணிக்கம் தாகூர் பேசியிருந்தார்.
அமைச்சரவையில் சேர்ந்துவிட்டதால் தவெக கூட்டணியில் சேர்ந்துவிட்டோம் என்று அர்த்தம் இல்லை என திருமாவளவன் தெரிவித்திருந்தார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே இன்னொரு கூட்டணியில் இடம் பெற்று விட்டோம் என்ற அர்த்தம் இல்லை.
ஆட்சி அமைக்க 2 இடங்கள் பற்றாக்குறையாக உள்ளது. இதனால் விசிக ஆதரவு தர வேண்டும் என முதல்வர் விஜய்யிடம் இருந்து வெளிப்படையாக கடிதம் வந்தது. காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் ஆதரவு கொடுத்தன. அப்படித்தான் விசிகவும் வெளியில் இருந்து ஆதரவு கொடுப்பதாக தெரிவித்தோம்.
10 நாட்கள் கழித்துதான் அமைச்சரவையில் இடம் பெறுவது என்ற முடிவை நாங்கள் எடுத்தோம். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த போது "இன்னும் திமுக கூட்டணியில் இருக்கிறீர்களா" என கேட்டனர். அதற்கு நான் "ஆம், திமுக கூட்டணியில் தொடர்கிறோம்" என்றுதான் கூறினேன்.
ஜூலை 1 ஆம் தேதி கூட்டணி தொடர்பாக ஆதரவு நல்கிய கட்சிகளுடன் முதல்வர் விஜய் பேச்சுவார்த்தை நடத்தினார். அந்த கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. ஆகவே தவெக தலைமையில் ஒரு கூட்டணி அமையவில்லை என்றுதான் அர்த்தம். விசிக அமைச்சரவையில் இடம் பெற்றதாலேயே திமுகவுக்கு நாங்கள் துரோகம் செய்துவிட்டோம் என்ற பலரும் விமர்சனங்களை முன் வைத்தனர். பதவி கிடைத்தவுடன் ஒரு கூட்டணியை உதறிவிட்டு ஓடிவிடவில்லை. எடுக்கும் முடிவுகள் ஒவ்வொன்றையும் கூட்டணி தலைமையிடம் தெரிவித்து பகிர்ந்து கொண்டோம். ஸ்டாலினையும் சந்தித்து பேசியிருக்கிறோம். திமுகவுடனான நட்பும் உறவும் தொடர்கிறது என திருமாவளவன் தெரிவித்திருந்தார். இதை மாணிக்கம் தாகூர் எதிர்த்துள்ளார்.












Click it and Unblock the Notifications