கரூர் விவகாரத்தில் ஆதவ் அர்ஜுனா மீது அவமதிப்பு வழக்கு தொடர உச்ச நீதிமன்றம் அனுமதி.. வில்சன் எம்பி
டெல்லி : அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கரூர் விவகாரம் தொடர்பாக அப்படி பேசியுள்ளார் என்றால் அது நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது என உச்சநீதிமன்றம் இன்று சுட்டிக் காட்டியுள்ளது என்று விளக்கம் அளித்த திமுக எம்.பி.யும் மூத்த வழக்கறிஞருமான வில்சன், ஆதவ் அர்ஜுனாவிற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்படும் என்று கூறினார்.
திமுக எம்.பி.யும் மூத்த வழக்கறிஞருமான வில்சன் உச்ச நீதிமன்றத்தில் என்ன நடந்தது என்று டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறும் போது, உச்ச நீதிமன்றம் கரூர் வழக்கை சிபிஐக்கு மாற்றம் செய்யும் போது, 3 பேர் கொண்ட கமிட்டி அமைத்தனர். நீதியசர் அஜய் ரஸ்தோகி அடங்கிய அமர்வு அளித்த தீர்ப்பில் கூறும் போது, கரூர் கூட்டநெரிசல் சம்பந்தமாக 3 பேர் கமிட்டிக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டு விட்டது.

அந்த கமிட்டியிடம் திமுகவை செல்ல உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியதால், இன்று மனுக்கள் வாபஸ் வாங்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியது நீதிமன்ற அவமதிப்பு என்று சுட்டிக்காட்டப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், உங்களுக்கு இந்த விவகாரத்தில் என்ன சட்ட ரீதியான உரிமைகள் உள்ளதோ, அதன்படி நடந்து கொள்ளலாம் என்று கூறினார்கள்" என்று வில்சன் கூறினார். அப்போது வில்சனிடம், அப்படி என்றால் அமைச்சர் ஆதவ் மீது வழக்கு தொடரப்படுமா என்று கேட்டனர். அதற்கு பதில் அளித்த வில்சன், ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவிலேயே ஆர்எஸ் பாரதி, ஆதவ் அர்ஜுனா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்று கூறியிருக்கிறார். அதனை தான் இன்று நீதிமன்றமும் சுட்டிக்காட்டியது..
அவர் (ஆதவ் அர்ஜுனா) கரூர் விவகாரம் தொடர்பாக அந்த மாதிரி பேசியது உண்மை என்றால், நிச்சயமாக நீதிமன்றம் கொடுத்த உத்தரவிற்கு எதிரானதாகும் என்பதுதான் என்று நீதியரசர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். மேலும் நீதிபதிகள், இந்த 3 பேர் அடங்கிய கமிட்டிக்கு முழு பவர் இருக்கிறது.. எல்லா விஷயங்களிலும் வழிகாட்டுதல்கள் கொடுப்பது உள்பட அதிகாரம் அவர்களுக்கு இருக்கிறது என்கிற போது, எப்படி இந்த மனுவை நீங்கள் தாக்கல் செய்யலாம் என்று கேட்டதால், அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் இந்த மனுவை திராவிட முன்னேற்ற கழகம் வாபஸ் பெற்றது என்றார்.
அப்போது செய்தியாளர்கள் அடுத்தகட்டமாக திமுகவின் நடவடிக்கை என்ன என்று கேட்டார். அதற்கு வழக்கறிஞர் வில்சன், சாட்சிகள் பிறழ் சாட்சியாக மாறிவிடக்கூடாது.. எனவே உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும். உச்ச நீதிமன்றம் ஒரு உத்தரவு போட்டிருக்கிறது. அந்த உத்தரவை செயல்படுத்த வேண்டும். இது தான் எண்ணம். எந்த முறையில் அணுக வேண்டும்.. எப்படி அணுக வேண்டும் என்று நீதியரசர்கள் கருத்து தெரிவித்தார்கள்..
அந்த கருத்து திராவிட முன்னேற்ற கழகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, அவர்கள் கூறியுள்ளபடி, கமிட்டியில் மனு போடுவோம், அதேபோல் ஆதவ் மீது அவமதிப்பு வழக்கும் போடுவோம். முதல்வர் விஜய் அங்கு செல்வது இன்புளுயன்ஸ் செய்ய வாய்ப்பு உள்ளது. அதேபோல் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெரேட்டிவ் செட் செய்வது என்பது ஏற்கனவே கொடுத்த வாக்குமூலம், போலீசாரின் விசாரணை போன்றவற்றில் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் தான் இந்த மனுவை உச்ச நீதிமன்றத்தில் மனுவை தாக்கல் செய்தது. நீதிபதிகளின் அறிவுறுத்தலின் பேரில் நடவடிக்கை எடுக்கப்படும்" இவ்வாறு வில்சன் எம்பி கூறினார்.














Click it and Unblock the Notifications