விஜய் குற்றவாளி என்ற திமுக மனு நிராகரிப்பு ஏன்.. உச்ச நீதிமன்றத்தில் இன்று என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: கரூர் துயர சம்பவம் தொடர்பான விவகாரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை முதல்வர் விஜய் சந்திக்க தடை கேட்டு திமுக தொடர்ந்த மனுவை விசாரணைக்கு ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. அத்துடன் திமுகவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மனுவை முறையாக தயாரிக்காமல் சரியான தகவல்களை மூத்த வழக்கறிஞர்களிடம் பகிர்ந்து கொள்ளாமல் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளது என்றும் இதனாலேயே திமுகவின் மனு இன்று தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நிலுவையில் உள்ள நிலையில், தமிழக முதல்வர் ஜோசப் விஜய், தமிழக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் பிற குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் பொதுவெளியில் கருத்துக்கள் தெரிவிக்க தடை விதிக்கக் கோரியும், விசாரணை முடியும் வரை பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் அவர்கள் தொடர்பு கொள்வதை முறைப்படுத்தக் கோரியும் திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி தாக்கல் செய்த மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

Why was the DMK s petition claiming Vijay is a convict rejected What happened in the Supreme Court today

தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பில் வக்கீல் அனுராதா அற்புதம் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்து இருந்தார். அந்த மனுவில் அவர் கூறுகையில், கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சமீபத்தில் பேசிய பேச்சு வழக்கின் சாட்சிகள் மற்றும் ஆதாரங்களை பாதிக்கும் நோக்கத்துடன் இருப்பதாக இருக்கிறது. எனவே, அவர் மீது உரிய புகாரை பதிவு செய்து விசாரணை நடத்த சி.பி.ஐ.க்கு உத்தரவிட வேண்டும்.

சி.பி.ஐ. விசாரணை நடைபெற்று வரும் நிலையில், வருகிற 10-ந்தேதி முதல்வர் விஜய் கரூர் செல்ல இருப்பதாகவும், அப்போது பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இத்தகைய நடவடிக்கைகள் சி.பி.ஐ. விசாரணையை பாதிக்கக்கூடும் என்பதால், இதுபோன்ற நிகழ்வுகளை நடத்துவதற்கு முன்பு சி.பி.ஐ.யின் அனுமதி பெறும் வகையில் உரிய வழிகாட்டுதல்களை உச்சநீதிமன்றம் வகுக்க வேண்டும்.

அத்துடன், சி.பி.ஐ. விசாரணை நிறைவடையும் வரை கரூர் கூட்ட நெரிசல் வழக்கு குறித்து முதல்வர் விஜய், அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ஆனந்த், நிர்மல்குமார் உள்ளிட்டோர் பொதுவெளியில் கருத்து தெரிவிக்க தடை விதிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

நீதிபதி கே.வி. விஸ்வநாதன் மற்றும் நீதிபதி அலோக் ஆராதே ஆகியோர் அடங்கிய பகுதிநேர விடுமுறைக்கால அமர்வு, இந்த மனுவை விசாரிக்க விருப்பமில்லை என்று தெரிவித்தனர். திமுக தரப்பு அதனைத் திரும்பப் பெற அனுமதி கோரியது. இதையடுத்து, மனுவை 'திரும்பப் பெறப்பட்டதாகக் கூறி' தள்ளுபடி செய்த நீதிபதிகள், சட்டப்படியான பிற வழிகளை மனுதாரர் நாடிக் கொள்ளலாம் என்றும் நீதிபதிகள் அனுமதி அளித்தனர்.

முன்னதாக இன்றைய விசாரணையின் போது, தி.மு.க. செயலாளர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ரஞ்சித் குமார், "தமிழக அமைச்சர்கள் பொதுவெளியில் பேசி, இந்த கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக ஒரு புதிய போலிப் பிம்பத்தை உருவாக்கி வருகின்றனர். இது, விசாரணையை சி.பி.ஐ.-க்கு மாற்றி கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மீறும் செயலாகும்" என்று வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட உச்ச நீதிமன்ற நீதிபதி விஸ்வநாதன், "முதலமைச்சரின் பயணத் திட்டத்தை உச்ச நீதிமன்றம் முறைப்படுத்த வேண்டும் என்றும், அவரது பயண அட்டவணையை நாங்கள் தீர்மானிக்க வேண்டும் என்றும் நீங்கள் விரும்புகிறீர்களா?" என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு விளக்கமளித்த வழக்கறிஞர் ரஞ்சித் குமார், "பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு உதவி வழங்குவதை மனுதாரர் எதிர்க்கவில்லை; ஆனால், முதலமைச்சரும் மற்ற அமைச்சர்களும் இந்த வழக்கின் தகுதி மற்றும் தன்மை குறித்து பொதுவெளியில் கருத்துத் தெரிவிப்பதைத் தடுக்க மட்டுமே கோருகிறோம்" என்றார்.

இதைக் கேட்ட உச்ச நீதிமன்ற நீதிபதி விஸ்வநாதன், "அப்படியென்றால், பேச்சுரிமைக்கு எதிராக நாங்கள் தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று சொல்கிறீர்களா? அவர்களின் பேச்சுக்கு உங்களது பேச்சின் மூலம் பதில் கொடுங்கள். சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்ட ஒரு வழக்கில், ஓர் அரசியல் எதிரியை இதில் உள்ளே நுழைத்து, அடுத்தடுத்து உத்தரவுகளைப் பிறப்பிக்க உச்ச நீதிமன்றத்தை எவ்வாறு பயன்படுத்த முடியும்?" என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 10 லட்சம் ரூபாய் நிதியுதவியும், அரசு வேலைவாய்ப்பு ஆணைகளும் வழங்குவது எவ்வாறு சி.பி.ஐ. விசாரணையை பாதிக்கும் என்றும் நீதிபதி கேட்டார். இந்த மனு "நன்கு சிந்தித்துதான் தாக்கல் செய்யப்பட்டதா?" என்றும் நீதிபதி வியப்பிடன் கேட்டனர்.

அப்போது வழக்கறிஞர் ரஞ்சித் குமார், "விஜய் இங்கு இரட்டைப் பாத்திரத்தை வகிக்கிறார் - அவர் நிர்வாகத்தின் தலைவராகவும் இருக்கிறார், அதே நேரத்தில் இந்த வழக்கின் முதல் குற்றவாளியாகவும் (Accused No. 1) இருக்கிறார்" என்று குறிப்பிட்டார்.

உடனே நீதிபதி விஸ்வநாதன், வழக்கறிஞரின் கூற்றைத் திருத்தி, எப்.ஐ.ஆர்.-இல் விஜய்யின் பெயர் குற்றவாளியாகச் சேர்க்கப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டினார். "யார் முதல் குற்றவாளி? உங்களது மனுவிலோ அல்லது முந்தைய அரசாங்கத்தால் பதிவு செய்யப்பட்ட எப்.ஐ.ஆரிலோ முதலமைச்சர் குற்றவாளியாகக் குறிப்பிடப்படவில்லை. தயவுசெய்து உங்கள் தரவுகளைச் சரிபார்க்கவும். ஒருவேளை நான் தவறாகக் கூட இருக்கலாம்" என்றார் நீதிபதி.

எதிர்மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நீரஜ் கிஷன் கவுல், இந்த வழக்கில் விஜய் குற்றவாளி அல்ல என்பதை உறுதிப்படுத்தினார். பின்னர் தி.மு.க. வழக்கறிஞரிடம் பேசிய நீதிபதி விஸ்வநாதன், "அமைச்சர்களாக இருக்கும் சிலர்தான் குற்றவாளிகளாக உள்ளனர், முதலமைச்சர் அல்ல. நீதிமன்றத்தை அரசியல் போர்க்களமாக எப்படி மாற்ற முடியும்?" என்று கேட்டு, இந்த மனுவை விசாரிக்க நீதிமன்றம் தயாராக இல்லை என்பதால், அதைத் திரும்பப் பெறுமாறு அறிவுறுத்தினார்.

இதையடுத்து வழக்கறிஞர் ரஞ்சித் குமார், இந்த விசாரணையைக் கண்காணிப்பதற்காக உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழுவிடம் இந்த விவகாரத்தைக் கொண்டு செல்ல தங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கோரினார். மேலும், தமிழக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசிய சில கருத்துக்களுக்காக அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கத் தனியாக மனு தாக்கல் செய்ய உத்தேசித்துள்ளதாகவும் தெரிவித்தார். இறுதியாக, சட்டத்தின் கீழ் உள்ள பிற வழிகளை மனுதாரர் நாடிக் கொள்ளலாம் என்ற அனுமதியுடன் இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

நீதிபதிகள் தங்களது உத்தரவில், "மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் ரஞ்சித் குமாரின் வாதம் கேட்கப்பட்டது. அவர் இந்த மனுவைத் திரும்பப் பெற்று, தகுந்த பிற சட்ட வழிகளை நாட விரும்புவதால், மனு திரும்பப் பெறப்பட்டதாகக் கூறி தள்ளுபடி செய்யப்படுகிறது" என்று குறிப்பிட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+