அமைச்சர்களுக்கு முதல்வர் அலுவலகம் 'ரெட் கார்டு'.. தேவையில்லாத ஆய்வுக்கு தடை.. நிர்மல்குமார் பரபரப்பு
சென்னை: தவெக ஆட்சி அமைத்தது முதலே கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பான குற்றச்சாட்டுகள், குதிரைபேரம், அரசியல் சர்ச்சைகள் என தொடர்ந்து பல்வேறு விவகாரங்கள் அரசுக்கு சவாலை ஏற்படுத்தி வருகின்றன. இதுமட்டுமல்லாமல் அக்கட்சியின் அமைச்சர்களின் செயல்பாடுகளும் அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பி வருகின்றன. இதைத்தொடர்ந்து, அமைச்சர் கீர்த்தனா பள்ளி ஒன்றில் ஆய்வு மேற்கொண்டபோது மாணவியிடம் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. இந்நிலையில், அமைச்சர்கள் தேவை இல்லாமல் ஆய்வுக்குச் செல்லக் கூடாது என்று முதல்வர் அலுவலகம் அறிவுறுத்தியுள்ளதாக அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே திருத்தங்கலில் உள்ள அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா ஆய்வு மேற்கொண்டார். அப்போது, வகுப்பறை ஒன்றுக்குள் சென்ற அமைச்சர் அங்குள்ள மாணவர்களிம் பேசினார். அப்போது, அங்கிருந்த மாணவிகளிடம் ஆங்கிலத்தில் அமைச்சர் சில கேள்விகளைக் கேட்டார். ஆங்கில கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் மாணவிகள் சிலர் திணறினர்.

அப்போது அமைச்சர் கீர்த்தனா, முதல் பெஞ்சில் இருக்கும் மாணவியே இப்படி இருக்கும்போது லாஸ்ட் பெஞ்ச் மாணவிகளை நினைத்துப் பாருங்கள் என்று பேசினார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிய நிலையில், கடும் விமர்சனத்துக்குள்ளாகி உள்ளது. இச்சம்பத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: அரசு அலுவலகங்கள் மற்றும் அரசுப் பள்ளிகளுக்குச் சென்று தேவையில்லாத ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டாம் என்று முதல்வர் அலுவலகம் சார்பில் அமைச்சர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல, அரசு ஊழியர்கள், பணியாளர்களைத் தொந்தரவு செய்யக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்லா துறைகளையும் சீரமைக்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை மற்றும் செவிலியர்கள் இல்லை. இவற்றை எல்லாம் சீரமைக்க வேண்டியிருக்கிறது. தமிழக ஆளுநர் ஆய்வு மேற்கொள்வதில் எந்தவொரு பயனும் இல்லை. பொதுப் பணித் துறை உள்பட யாருக்கும் ஆளுநர் உத்தரவு போட முடியாது, நிதியையும் ஒதுக்க முடியாது.
வழக்கறிஞர்கள் நியமனத்துக்கு லஞ்சம் வாங்கப்படுவதாக எழுந்துள்ள புகார் குறித்த கேள்விக்கு, மாவட்ட வழக்கறிஞர்கள் நியமனத்தில் தவறான தகவல் பரவி வருகிறது. இதுவரை இல்லாத வகையில் அனைத்து நீதிமன்றங்களுக்கும் முறையே விண்ணப்பங்கள் பெறப்பட்டு, நேற்று முதல் ஆணைகள் வெளியிடப்பட்டு வருகின்றன. நியமனங்கள் 100 சதவீதம் நேர்மையாக நடைபெற்று வருகிறது.
இதுவரை தமிழ்நாடு முழுவதும் 5 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உரிய ஆய்வுகளை மேற்கொண்டு இறுதி முடிவுகளை எடுத்து வருகின்றனர். இதுதொடர்பாக யாராவது லஞ்சம் வாங்கினால் புகார் அளிக்கலாம். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று
கூறினார்.












Click it and Unblock the Notifications