கீர்த்தனாவின் ரீல்ஸ் சர்ச்சை.. இந்தியா முழுவதும் அமைச்சர்கள் இப்படிதான்.. திருமாவளவன் சொன்ன வார்த்தை
சென்னை: இந்தியா முழுவதும் அமைச்சர்கள் எங்கு சென்றாலும் ரீல்ஸ் போடுவது வாடிக்கையாகிவிட்டது என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். அமைச்சர் கீர்த்தனாவின், பள்ளி மாணவி ரீல்ஸ் சர்ச்சை தொடர்பாக பேசிய திருமாவளவன், பொது ஒழுங்கிற்கு கேடாக இருந்தால் விசிக சுட்டிக் காட்டும் என்றும் கூறியுள்ளார்.
சிவகாசி அருகே திருத்தங்கலில் உள்ள அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைச்சர் கீர்த்தனா ஆய்வு மேற்கொண்டார். அப்போது வகுப்பறை ஒன்றில் கீர்த்தனா மாணவிகளிடம் ஆங்கிலத்தில் சில கேள்விகளை கேட்டார். அதற்கு சில மாணவிகள் பதில் அளித்தனர், சிலர் பதில் அளிக்க முடியாமல் திணறினர். லாஸ்ட் பெஞ்ச் மாணவர்கள் பற்றியும் நேரடியாக அவர்கள் முன்னிலையிலேயே ஆசிரியர்களிடம் குறை கூறினார்.

அதுமட்டுமல்லாமல் இதனை ரீல்ஸாக எடுத்து தனது சோசியல் மீடியா பக்கத்திலும் வெளியிட்டார். இந்த வீடியோ வெளியாகி டிரெண்டாகிய சூழலில், கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டது. குறிப்பாக அரசுப் பள்ளி மாணவர்களிடையே தாழ்வு மனப்பான்மையை அமைச்சர் கீர்த்தனா உருவாக்குவதாக பெற்றோரும் குற்றம்சாட்ட தொடங்கினர்.
இதற்கு அமைச்சர் கீர்த்தனா, நானே ஒரு அரசுப் பள்ளி மாணவி தான் என்று பதில் அளித்துள்ளார். இந்த நிலையில் அமைச்சர் கீர்த்தனாவின் ரீல்ஸ் சர்ச்சை தொடர்பாக விசிக தலைவர் திருமாவளவனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு திருமாவளவன், இந்தியா முழுவதும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் ஆய்வுக்கு சென்றால் ரீல்ஸ் போடுவது வாடிக்கையாக மாறிவிட்டது.
ஒருவரை மட்டும் நாம் சொல்ல முடியாது. சோசியல் மீடியா வலிமையாக இருக்கும் இந்த காலச்சூழலில், ஒவ்வொரு அசைவையும் பதிவு செய்வது தவிர்க்க முடியாததாக மாறியுள்ளது. அது பொது ஒழுங்கிற்கு கேடாக இருந்தால், நாம் சுட்டிக்காட்டுவோம். அதனை அமைச்சர்கள் உள்வாங்கி கொண்டு, தேவைப்பட்டால் தவிர்ப்பார்கள் என்று நம்புகிறேன். நீங்கள் சொல்லும் எந்தக் காட்சியையும் பார்க்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, தவெக அமைச்சரவையில் இணைந்துவிட்டதால், அவர்களுடன் கூட்டணி வைத்துவிட்டோம் என்று பொருள் அல்ல. ஜூலை 1ஆம் தேதி கூட்டணி தொடர்பாகதான் முதல்வர் விஜய் பேசினார். அந்த கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. இதனால் தவெக தலைமையில் கூட்டணி உருவாகவில்லை என்பதே அர்த்தம். பதவி என்றவுடன் கூட்டணியை உதறிவிட்டு ஓடவில்லை. திமுகவுடன் நட்பு தொடர்கிறது என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications