அப்போ விஸ்வநாதன்.. இப்போ கீர்த்தனா? மாணவர்களுக்குத் தான் பிரஷர்! வாய்ஸ் கொடுப்பாரா சிஎம் விஜய்?
சென்னை: அமைச்சர் விஸ்வநாதன் மாணவிகளிடம் அத்துமீறி நடந்து கொண்டதாக எழுந்த பரபரப்பு அடங்குவதற்குள், அமைச்சர் கீர்த்தனா 'லாஸ்ட் பெஞ்ச் மாணவிகள்' என பேசிய பேச்சு அரசியல் வட்டாரத்திலும் சமூக வலைதளங்களிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால் இந்த இரு விவகாரங்களில் இதுவரை முதலமைச்சர் விஜய் வாய் திறக்காதது குறித்து எதிர்க்கட்சிகள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளன. மேலும் விஜய் ஆட்சியில் மாணவிகள் மிகுந்த மாணவ மாணவிகள் மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளாக்கப்படுவதாகவும் விமர்சனம் எழுந்துள்ளது.
தமிழக வெற்றி கழகத்தின் அரசு அமைந்ததிலிருந்து பெரும் விமர்சனத்துக்குள்ளாவது தவெகவினரின் ரீல்ஸ் சர்ச்சை தான். மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், பேருந்து நிலையங்கள் என அமைச்சர்கள் ஆய்வு என்ற பெயரில் ரீல்ஸ் போடுவதாக விமர்சனம் இருக்கிறது.

இது ஒருபுறம் இருக்க, ஆட்சிக்கும் நிர்வாகத்துக்கும் சம்பந்தமே இல்லாமல் சில தமிழக வெற்றிக்கழகத்தினர் ஆய்வு என்ற பெயரில் பணியாளர்களையும், அரசு அதிகாரிகளையும், ஆசிரியர்களையும் தொந்தரவுக்கு உள்ளாக்குவதாக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது.
ரீல்ஸ் கலாச்சாரம்
சில நேரங்களில் ஆய்வு என்ற பெயரில் ரீல்ஸ் போட்ட தவெக நிர்வாகிகள் கட்சியிலிருந்து விலக்கப்பட்டிருக்கின்றனர். அதே நேரத்தில் சில நேரங்களில் உச்சபட்ச அதிகாரத்தில் இருக்கும் அமைச்சர்களே சர்ச்சையில் சிக்குவதும் அதிகரித்து வருகிறது. அப்படி இரு பெரிய புயலை கிளப்பிய விவகாரங்கள் என்றால் அது அமைச்சர் விஸ்வநாதன் மற்றும் கீர்த்தனா ஆய்வு விவகாரம் தான்.
அமைச்சர் விஸ்வநாதன்
கடந்த ஜூன் மாதம் 21ஆம் தேதி மதுரை மாவட்டம் மேலூரில் யோகா தினத்தையொட்டி மாரத்தான் போட்டி நடைபெற்றது. அப்போது போட்டியில் கலந்து கொண்ட மாணவிகள் சிலர் மயங்கி விழுந்ததாக கூறப்படும் நிலையில் அவர்களுக்கு அமைச்சர் விஸ்வநாதன் முதலுதவி அளித்ததாக சில வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில் அவர் மாணவிகளின் கால்கள் மற்றும் பிற பகுதிகளை தொடுவது போல் இருந்ததால் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி திமுகவின் வழக்கறிஞர்கள் புகார் அளித்தனர்.
அமைச்சர் விளக்கம்
மேலும் சமூக ஆர்வலர்களும் அரசியல் கட்சித் தலைவர்களும் அவரது நடத்தை குறித்து கடும் விமர்சனங்களை முன் வைத்தனர். ஆனால் மனிதாபிமான அடிப்படையில் மாணவிகளுக்கு முதலுதவி மட்டுமே செய்ததாகவும் தனது செயல் தவறாக சித்தரிக்கப்படுவதாக தனது வருத்தத்தையும் விளக்கத்தையும் வெளியிட்டு இருந்தார் அமைச்சர் விஸ்வநாதன்.
அமைச்சர் கீர்த்தனா
அந்த பரபரப்பு அடங்குவதற்குள் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைச்சர் கீர்த்தனா ஆய்வு மேற்கொண்டார். அந்த ஆய்வின் போது ஒரு வகுப்பறைக்குச் சென்ற அமைச்சர் கீர்த்தனா, முதல் பெஞ்சில் அமர்ந்திருந்த மாணவிகளிடம் ஆங்கிலத்தில் சில கேள்விகளை கேட்டார். அவரின் கேள்விகளுக்கு மாணவிகள் பதில் அளிக்க முடியாத திணறிய போது முதல் பெஞ்ச் மாணவியை இப்படி இருந்தால் லாஸ்ட் பெஞ்ச் மாணவிகளை பற்றி நினைத்து பாருங்கள் என பேசினார்.
எதிர்க் கட்சிகள் கண்டனம்
இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வெளியான நிலையில் அமைச்சர் கீர்த்தனாவின் ஆய்வுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக்கல்வித்துறையின் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர். இதற்கிடையே இது தொடர்பாக விளக்கம் அளித்த அமைச்சர் கீர்த்தனா, "அரசு பள்ளி மாணவியை கேலி செய்தார் என்ற ஒரு பொய்யான கதையை பரப்புகிறார்கள். நானே ஒரு அரசு பள்ளி மாணவிதான். நானும் தமிழ் வழி கல்வி படித்தவள் தான்" என ஒரு நீண்ட விளக்கத்தை அளித்திருந்தார்.
அடிக்கடி சர்ச்சை
இது ஒருபுறம் இருக்க அமைச்சர்கள் ஆய்வு என்ற பெயரில் அடிக்கடி சர்ச்சையில் சிக்கிவரும் நிலையில் அமைச்சர் விஜய் நேரடியாக தலையிடவில்லை என்பதோடு அமைச்சர்களை கண்டிக்கக் கூட இல்லை என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. முதலில் விஸ்வநாதன் விவகாரத்தில் மாணவிகளின் பாதுகாப்பு குறித்தும் கீர்த்தனா விவகாரத்தில் மாணவர்கள் அவமதிக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கிறது. இந்த இரண்டு சம்பவங்களுமே மாணவர்களின் மனநிலையை கல்விச் சூழலையும் பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது என்ற விமர்சனமும் முன்வைக்கப்படுகிறது.
முதல்வர் விஜய்
கல்வி நிலையங்கள் மாணவர்கள் பாதுகாப்பாகவும் மன அழுத்தம் இன்றியும் கற்க வேண்டிய இடமாக இருக்க வேண்டும். ஆனால் ஆய்வு என்ற பெயரில் ரீல்ஸ் கலாச்சாரத்தால் மாணவ மாணவர்களும் பெற்றோர்களும் அச்சத்துடனும் குழப்பத்துடனும் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் முதல்வர் விஜய் தான் நேரடியாக கருத்து தெரிவித்து இருக்க வேண்டும். அமைச்சர்களையும் கண்டித்திருக்க வேண்டும். ஆனால் இப்படி கண்டு கொள்ளாமல் இருப்பது இந்த விமர்சனங்களை மேலும் அதிகரிக்கும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications