முதல்வர் விஜய் கரூர் செல்ல தடையில்லை.. திமுக மனுவில் பிழை.. உச்ச நீதிமன்றத்தில் வாதம் முழு விவரம்
கரூர்: முதல்வர் விஜய் வரும் 10ம் தேதி கரூர் செல்வதற்கு எதிராக தடை கேட்டு உச்ச நீதிமன்றத்தில் திமுக தாக்கல் செய்த இடையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க செல்லும் முதல்வருக்கு தடை கேட்டதற்காக திமுகவை உச்ச நீதிமன்றம் இன்று கடுமையாக கண்டித்தது.
முதலமைச்சரின் பயணத் திட்டத்தை உச்ச நீதிமன்றம் முறைப்படுத்த வேண்டும் என்றும், அவரது பயண அட்டவணையை நாங்கள் தீர்மானிக்க வேண்டும் என்றும் நீங்கள் விரும்புகிறீர்களா?" என்று திமுக வழக்கறிஞரை பார்த்து உச்ச நீதிமன்றம் சராமரியாக கேள்வி எழுப்பியது.

அதற்கு விளக்கமளித்த திமுக சார்பு வழக்கறிஞர் ரஞ்சித் குமார், பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு உதவி வழங்குவதை மனுதாரர் எதிர்க்கவில்லை; ஆனால், முதலமைச்சரும் மற்ற அமைச்சர்களும் இந்த வழக்கின் தகுதி மற்றும் தன்மை குறித்து பொதுவெளியில் கருத்துத் தெரிவிப்பதைத் தடுக்க மட்டுமே கோருகிறோம்" எனறு கூறினார்.
அப்போது குறுக்கிட்ட உச்ச நீதிமன்ற நீதிபதி விஸ்வநாதன், "அப்படியென்றால், பேச்சுரிமைக்கு எதிராக நாங்கள் தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று சொல்கிறீர்களா? அவர்களின் பேச்சுக்கு உங்களது பேச்சின் மூலம் பதில் கொடுங்கள். சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்ட ஒரு வழக்கில், ஓர் அரசியல் எதிரியை இதில் உள்ளே நுழைத்து, அடுத்தடுத்து உத்தரவுகளைப் பிறப்பிக்க உச்ச நீதிமன்றத்தை எவ்வாறு பயன்படுத்த முடியும்?" என்று சரமாரியாக கேள்வி எழுப்பினார்.
மேலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 10 லட்சம் ரூபாய் நிதியுதவியும், அரசு வேலைவாய்ப்பு ஆணைகளும் வழங்குவது எவ்வாறு சி.பி.ஐ. விசாரணையை பாதிக்கும் என்றும் நீதிபதி விஸ்வநாதன் கேட்டார். இந்த மனு "நன்கு சிந்தித்துதான் தாக்கல் செய்யப்பட்டதா?" என்றும் நீதிபதி திமுக வழக்கறிஞரை பார்த்து கேட்டார்.
அப்போது வழக்கறிஞர் ரஞ்சித் குமார், "விஜய் இங்கு இரட்டை பொறுப்பு வகிக்கிறார் - அவர் நிர்வாகத்தின் தலைவராகவும் இருக்கிறார், அதே நேரத்தில் இந்த வழக்கின் முதல் குற்றவாளியாகவும் இருக்கிறார்" என்று வாதிட்டார்.
அப்போது குறுக்கிட்ட உச்சநீதிமன்ற நீதிபதி விஸ்வநாதன், வழக்கறிஞரின் கூற்றைத் திருத்தி, எப்.ஐ.ஆர்.-இல் விஜய்யின் பெயர் குற்றவாளியாகச் சேர்க்கப்படவில்லை . "யார் முதல் குற்றவாளி? உங்களது மனுவிலோ அல்லது முந்தைய (திமுக) அரசாங்கத்தால் பதிவு செய்யப்பட்ட எப்.ஐ.ஆர்.-இலோ முதலமைச்சர் (விஜய்) குற்றவாளியாகக் குறிப்பிடப்படவில்லை. தயவுசெய்து உங்கள் தரவுகளைச் சரிபார்க்கவும். ஒருவேளை நான் தவறாகக் கூட இருக்கலாம்" என்று கூறினார்.
தொடர்நது விஜய் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நீரஜ் கிஷன் கவுல், இந்த வழக்கில் விஜய் குற்றவாளி அல்ல என்பதை உறுதிப்படுத்தினார். பின்னர் தி.மு.க. வழக்கறிஞரிடம் பேசிய நீதிபதி விஸ்வநாதன், "அமைச்சர்களாக இருக்கும் சிலர்தான் குற்றவாளிகளாக உள்ளனர், முதலமைச்சர் அல்ல. நீதிமன்றத்தை அரசியல் போர்க்களமாக எப்படி மாற்ற முடியும்?" என்று கேட்டு, இந்த மனுவை விசாரிக்க நீதிமன்றம் தயாராக இல்லை என்பதால், அதைத் திரும்பப் பெறுமாறு அறிவுறுத்தினார். இதையடுத்து திமுகவின் மனு வாபஸ் பெறப்பட்டது.
கரூர் வழக்கு விவரம்
தமிழகத்தின் முதல்வரும், தவெக தலைவருமான விஜய், சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு பல்வேறு மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று பிரசாரம் செய்து வந்தார். ஒவ்வொரு சனிக்கிழமையும் ஒரு மாவட்டம் என்கிற ரீதியில் பிரச்சாரம் செய்து வந்தார். அப்படித்தான்கரூருக்கு கடந்த ஆண்டு (2025) செப்டம்பர் மாதம் 27-ந்தேதி விஜய் சென்றார். அங்குள்ள வேலுசாமிபுரத்தில் பிரசாரம் செய்த போது மிகப்பெரிய கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி 41 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் 110 பேர் காயம் அடைந்தனர். இது போன்று ஒரு தலைவரை பார்க்க சென்று மிகப்பெரிய அளவில் உயிரிழப்பு ஏற்பட்டது இந்தியாவில் இதுதான் முதல் முறை என்பதால், மொத்த நாட்டிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதனிடையே பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது விஜய் நேரில் சென்று ஆறுதல் கூறவில்லை.. பாதுகாப்பு காரணமாக விஜய் நேரில் சென்று ஆறுதல் கூற இயலவில்லை என்று கூறப்பட்டது. அதன்பிறகு சில வாரங்கள் கழித்து, பாதிக்கப்பட்டவர்களை மாமல்லபுரம் அழைத்து தலா ரூ. 20 லட்சம் த.வெ.க. சார்பில் வழங்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது. மேலும், விசாரணையை உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான கண்காணிப்பு குழு மேற்பார்வையிடும் என்றும் உத்தரவிட்டது. இதனையடுத்து கரூரில் சம்பவம் நடந்த இடம் உள்ளிட்ட பகுதிகளில் சி.பி.ஐ. அதிகாரிகள் நேரில் விசாரித்தனர்.
மேலும் இந்த வழக்கு விசாரணைக்காக டெல்லி சென்று சி.பி.ஐ. அலுவலகத்தில் விஜய் 2 முறை ஆஜரானார். சி.பி.ஐ. விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்த சூழ்நிலையில் தமிழகத்தில் த.வெ.க. ஆட்சி அமைத்துள்ள நிலையில், கரூரில் நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தில் தலா ஒருவருக்கு அரசு வேலை வழங்க ஏற்பாடுகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.. இதற்காக வருகிற 10-ந்தேதி முதல்வர், கரூர் செல்ல திட்டமிட்டு உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
திமுக இன்று தாக்கல் செய்த மனுவின் விவரம்
தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பில் வக்கீல் அனுராதா அற்புதம் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்து இருந்தார். அந்த மனுவில் அவர் கூறுகையில், கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சமீபத்தில் பேசிய பேச்சு வழக்கின் சாட்சிகள் மற்றும் ஆதாரங்களை பாதிக்கும் நோக்கத்துடன் இருப்பதாக இருக்கிறது. எனவே, அவர் மீது உரிய புகாரை பதிவு செய்து விசாரணை நடத்த சி.பி.ஐ.க்கு உத்தரவிட வேண்டும்.
சி.பி.ஐ. விசாரணை நடைபெற்று வரும் நிலையில், வருகிற 10-ந்தேதி முதல்வர் விஜய் கரூர் செல்ல இருப்பதாகவும், அப்போது பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இத்தகைய நடவடிக்கைகள் சி.பி.ஐ. விசாரணையை பாதிக்கக்கூடும் என்பதால், இதுபோன்ற நிகழ்வுகளை நடத்துவதற்கு முன்பு சி.பி.ஐ.யின் அனுமதி பெறும் வகையில் உரிய வழிகாட்டுதல்களை உச்சநீதிமன்றம் வகுக்க வேண்டும்.
அத்துடன், சி.பி.ஐ. விசாரணை நிறைவடையும் வரை கரூர் கூட்ட நெரிசல் வழக்கு குறித்து முதல்வர் விஜய், அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ஆனந்த், நிர்மல்குமார் உள்ளிட்டோர் பொதுவெளியில் கருத்து தெரிவிக்க தடை விதிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது. இந்த மனு தான் உச்ச நீதிமன்றத்தில் இன்று தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.














Click it and Unblock the Notifications