அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் திமுகவின் அவசர வழக்கு தள்ளுபடி
சென்னை: கரூர் கூட்ட நெரிசல் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் திமுக முறையிட்டது. திமுக தனது மனுவில் ஆதவ் அர்ஜுனாவின் பேச்சுக்ள், சாட்சிகள் மற்றும் ஆதாரங்களை பாதிக்கும் நோக்கத்துடன் இருப்பதாக குற்றம்சாட்டியிருந்தது. ஆனால் விஜய் கரூர் செல்ல தடை விதிக்கக்கோரிய வழக்கு இன்று தள்ளுபடியான நிலையில், ஆதவ் அர்ஜுனா பொதுவெளியில் பேச தடை கோரிய மனுவையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
கரூர் மாநகரம் வேலுசாமிபுரத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27ம் தேதி நடிகர் விஜய் தலைமையில் தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. மிகக்குறுகிய இடத்தில் பல ஆயிரம் இருந்ததால், நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான பல்வேறு மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது. இந்த வழக்கினை உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு நீதிபதியான அஜய் ரஸ்தோகியின் நேரடியாக கண்காணித்து வருகிறார்கள். இதுபோன்ற சூழலில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களான சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் த.வெ.கவில் கடந்த வாரம் இணைந்தனர்.
இந்த இணைப்பு விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசுகையில், "எங்களுக்கு கரூர் கணக்கு ஒன்று உள்ளது. அதனை முடிக்காமல் விட மாட்டோம். கரூரில் கூட்ட நெரிசலை காவல்துறையை வைத்து உருவாக்கினார்கள். விஜய் மீதே கை வைத்தீர்களே, மக்களை கொன்று குவித்தீர்களே. அதற்கு நிச்சயம் பதிலடி கொடுப்போம் என்று தெரிவித்திருந்தார். இது பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. இதற்கு உடனடியாக எதிர்வினை ஆற்றிய திமுக, நேரடியாக உச்ச நீதிமன்றத்திலேயே ஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிராக முறையிட்டுள்ளது.
தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பில் வக்கீல் அனுராதா அற்புதம் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்து இருந்தார். அந்த மனுவில் அவர் கூறுகையில், "கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சமீபத்தில் பேசிய பேச்சு வழக்கின் சாட்சிகள் மற்றும் ஆதாரங்களை பாதிக்கும் நோக்கத்துடன் இருப்பதாக இருக்கிறது. எனவே, அவர் மீது உரிய புகாரை பதிவு செய்து விசாரணை நடத்த சி.பி.ஐ.க்கு உத்தரவிட வேண்டும்.
சி.பி.ஐ. விசாரணை நடைபெற்று வரும் நிலையில், வருகிற 10-ந்தேதி முதல்வர் விஜய் கரூர் செல்ல இருப்பதாகவும், அப்போது பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இத்தகைய நடவடிக்கைகள் சி.பி.ஐ. விசாரணையை பாதிக்கக்கூடும் என்பதால், இதுபோன்ற நிகழ்வுகளை நடத்துவதற்கு முன்பு சி.பி.ஐ.யின் அனுமதி பெறும் வகையில் உரிய வழிகாட்டுதல்களை உச்சநீதிமன்றம் வகுக்க வேண்டும்.
அத்துடன், சி.பி.ஐ. விசாரணை நிறைவடையும் வரை கரூர் கூட்ட நெரிசல் வழக்கு குறித்து முதல்வர் விஜய், அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ஆனந்த், நிர்மல்குமார் உள்ளிட்டோர் பொதுவெளியில் கருத்து தெரிவிக்க தடை விதிக்க வேண்டும்" இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், திமுகவை இன்று கடுமையாக கண்டித்தது.
முதலமைச்சரின் பயணத் திட்டத்தை உச்ச நீதிமன்றம் முறைப்படுத்த வேண்டும் என்றும், அவரது பயண அட்டவணையை நாங்கள் தீர்மானிக்க வேண்டும் என்றும் நீங்கள் விரும்புகிறீர்களா?" என்று திமுக வழக்கறிஞரை பார்த்து உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
அதற்கு விளக்கமளித்த திமுக சார்பு வழக்கறிஞர் ரஞ்சித் குமார், பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு உதவி வழங்குவதை மனுதாரர் எதிர்க்கவில்லை; ஆனால், முதலமைச்சரும் மற்ற அமைச்சர்களும் இந்த வழக்கின் தகுதி மற்றும் தன்மை குறித்து பொதுவெளியில் கருத்துத் தெரிவிப்பதைத் தடுக்க மட்டுமே கோருகிறோம்" எனறு கூறினார்.
அப்போது குறுக்கிட்ட உச்ச நீதிமன்ற நீதிபதி விஸ்வநாதன், "அப்படியென்றால், பேச்சுரிமைக்கு எதிராக நாங்கள் தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று சொல்கிறீர்களா? அவர்களின் பேச்சுக்கு உங்களது பேச்சின் மூலம் பதில் கொடுங்கள். சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்ட ஒரு வழக்கில், ஓர் அரசியல் எதிரியை இதில் உள்ளே நுழைத்து, அடுத்தடுத்து உத்தரவுகளைப் பிறப்பிக்க உச்ச நீதிமன்றத்தை எவ்வாறு பயன்படுத்த முடியும்?" என்று சரமாரியாக கேள்வி எழுப்பினார். தொடர்ந்து மனுவை தள்ளுபடி செய்தனர்.














Click it and Unblock the Notifications