பச்சை அயோக்கியத்தனம்.. அப்பவே விஜய்யை கைது செய்திருக்கணும்? திமுக கிட்ட உளவுத்துறை தந்த ரிப்போர்ட்?
சென்னை: திமுகவுக்கு பலத்த அடி இன்று நீதிமன்றம் மூலம் விழுந்துள்ளது.. கரூர் விவகாரத்தில் அன்றே நடிகர் விஜய் மீது சட்ட நடவடிக்கை எதுவும் எடுக்காமல், திமுக ஏன் மென்மையான போக்கை கடைப்பிடிக்க வேண்டும்? என்று சோஷியல் மீடியாவில் மீண்டும் கேள்விகள் வந்து விழ துவங்கி உள்ளன.. இந்த கேள்விகள் பல்வேறு விவாதங்களையும் ஏற்படுத்தி வருகிறது.
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் சொல்வதற்கும், அவர்களுக்கான அரசுப் பணி நியமன ஆணைகளை வழங்குவதற்கும், தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் வரும் ஜுலை 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் கரூருக்கு பயணம் மேற்கொள்வதாக அறிவித்திருந்தார்.

இதை எதிர்த்து, திமுக தரப்பில் உச்சநீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், முதலமைச்சர் விஜய் பெயர் குற்றஞ்சாட்டப்பட்டவராக எங்கும் சேர்க்கப்படவில்லை.. நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களை ஒரு முதல்வர் சந்திப்பது எப்படி சாட்சிகள் மீது ஆதிக்கம் செலுத்துவதாக அமையும்? இந்த மனுவைத் திரும்பப் பெறாவிட்டால் தள்ளுபடி செய்யப்படும்" என்றது. இதையடுத்து வேறு வழியின்றி திமுக தரப்பில் அந்த மனு அவசர அவசரமாக வாபஸ் பெறப்பட்டது.
நீதிமன்றத்தின் இந்த உத்தரவு, திமுகவுக்கு பின்னடைவாக பார்க்கப்பட்டு வருகிறது.. அதேசமயம், பல்வேறு விமர்சனங்களையும், கேள்விகளையும், இந்த உத்தரவு எழுப்பி உள்ளது.
எப்ஐஆர் பதிவு போடலியே
கரூர் சம்பவம் நடந்தபோதே, முதலமைச்சர் விஜய் மீது உடனடியாக சட்டப்படி எப்ஐஆர் பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்றும், ஆரம்பத்திலேயே விஜய் மீது திமுக அரசு வழக்கு போடாமல் மெத்தனமாக விட்டது மிகப்பெரிய அரசியல் தவறு என்றும் திமுகவின் மூத்த தலைகளும், அக்கட்சியின் முன்னாள் அமைச்சர்களும் அதிருப்தி தெரிவித்து வந்தனர்.
இன்றைய தினம் நீதிமன்ற தீர்ப்பு வெளியாகிய நிலையில் மீண்டும் முணுமுணுப்புகள் கிளம்பி உள்ளன.. உண்மையில், இன்றைய நீதிமன்ற தீர்ப்பு திமுகவுக்கு விழுந்த பெரிய அடியாகவே பார்க்கப்படுகிறது.
அன்று கரூர் கொடுமை நடந்தபோதே விஜய் கைது செய்யப்படுவாரா என்ற கேள்வி எழுந்தது. இதை செய்தியாளர்கள் அன்றைய முதல்வர் ஸ்டாலினிடமே நேரடியாகக் கேட்டனர். அதற்கு ஸ்டாலின், "அரசியல் நோக்கத்தோடு நான் எதையும் சொல்ல விரும்பவில்லை. அந்த ஆணையத்தின் மூலமாக உண்மை வெளிவரும். உண்மை வெளிவரும் போது நிச்சயமாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று பதிலளித்து மிகவும் மென்மையான போக்கைக் கையாண்டார்.
விஜய் கைது செய்யலியே
உடனே விஜய்யோ, "என் மீது பழி போட நினைக்கிறீர்கள், துணிவிருந்தால் என்னிடம் வந்து பழி வாங்குங்கள்" என்று ஸ்டாலினுக்கு பகிரங்கமாகவே சவால் விடுத்தார். அப்போதும் ஸ்டாலின் அமைதி காத்தது, திமுகவின் பல மூத்த தலைவர்களைக் கடும் அதிருப்திக்குள்ளாக்கியது.. விஜய்யை அப்போதே கைது செய்திருக்க வேண்டும் என்பதே அவர்களின் ஆதங்கமாகவும் இருந்தது.
இதற்கு நடுவில் உளவுத்துறையும் ஒரு சர்வே எடுத்ததாக செய்திகள் கசிந்திருந்தன.. காரணம், விஜய்யை கைது செய்தால், அதுவே விஜய்க்கு அனுதாப அலையை உருவாக்கி, அரசியல் ரீதியாக ஆதரவான நிலையை ஏற்படுத்திவிடும் என திமுக தரப்புக்குச் சிலர் ஆலோசனை வழங்கினார்களாம். அதனால்தான் அவசரப்படாமல், மக்களின் கருத்தறிந்து செயல்படலாம் என முடிவெடுத்த திமுக தலைமை, இதற்காக உளவுத்துறையை முடுக்கிவிட்டது.
உளவுத்துறை சொன்ன தகவல்
உளவுத்துறை போலீசாரும், சில தனியார் ஏஜென்சிகளும் தமிழகம் முழுதும் சாலையோர வியாபாரிகள், விவசாயிகள், வணிகர்கள், பட்டதாரிகள், இளைஞர்கள், பெண்கள், கல்லூரி மாணவ - மாணவியர், ஆட்டோ டிரைவர்கள் எனப் பலதரப்பட்ட மக்களிடம் ரகசிய கருத்துக்கணிப்பு நடத்தியதாக தெரிகிறது.
அதில், கரூர் பிரசார கூட்டத்துக்கு போலீஸ் அதிகாரிகள் சரியான பாதுகாப்பு கொடுக்கவில்லை என்று பலர் சொன்னாலும், இந்த விஷயத்தில் விஜய்யை அரசு நிச்சயமாகக் கைது செய்திருக்க வேண்டும் என்றே மக்கள் அழுத்தம் திருத்தமாகத் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்திருந்தனர். ஆனால், இந்த உளவுத்துறை ரிப்போர்ட்டையும் மீறி அன்றைய திமுக தலைமை எடுத்த மென்மையான முடிவுதான் இன்று நீதிமன்றத்தில் அவர்களுக்குப் பின்னடைவைத் தந்துள்ளது.
ஆர்எஸ் பாரதி காட்டம்
கடந்த 4 நாட்களுக்கு முன்பு கூட மூத்த தலைவர் ஆர்.எஸ்.பாரதி அளித்த பேட்டியில், "கரூர் விவகாரத்தில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்த நடவடிக்கையை அரசியல் அறிந்தவர்களும், மனசாட்சி உள்ளவர்களும் பாராட்டினர். 41 பேர் உயிரிழந்த நிலையில் ஓடி ஒளிந்தவர் விஜய். ஆனால், இரவோடு இரவாக சம்பவ இடத்திற்கு சென்றவர் எங்கள் தலைவர் ஸ்டாலின். நாங்கள் எந்த அதிகாரியை வைத்து விசாரணை நடத்தினோமோ, அதே அதிகாரியைத்தான் இன்று விஜய் அரசு நியமித்திருக்கிறது. இதன்மூலம் நாங்கள் எந்தளவு நடுநிலையோடு செயல்பட்டோம் என்பதற்கு இதுவே உதாரணம்" என்று திமுக தரப்பு நியாயத்தைக் காரசாரமாகப் பேசியிருந்ததை இங்கு நாம் நினைவூட்ட வேண்டி உள்ளது.
ஆனால், இன்றைய நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு, சோஷியல் மீடியாவிலும், அரசியல் வட்டாரத்திலும் ஆதங்கங்கள் பதிவாகி வருகின்றன..
இடும்பாவன் கார்த்திக்
அந்தவகையில், நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் இடும்பாவன் கார்த்திக் தனது ட்விட்டர் பக்கத்தில் தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார்.
"கரூர் பேரவலத்தில் விஜய்யை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி, கைதுசெய்து சிறைப்படுத்தி இருக்க வேண்டும். ஒற்றை வழக்குகூட போடாமல் விஜய்யை முழுமையாகக் காப்பாற்றிவிட்டது திமுக. கருத்துருவாக்க அரசியலில் விஜய்க்கு ஆதரவாகப் பேசி, காப்பாற்றிவிட்டது அதிமுக. இரண்டு திராவிடக் கட்சிகளும் நீதியை நிலைநாட்ட முயலாது, தங்களது எதிர்கால அரசியலை மனதில் வைத்தே முடிவு எடுத்தது பச்சை அயோக்கியத்தனம்!" என்று காட்டமாக பதிவிட்டுள்ளார்
திமுகவினர் ஆதங்கம்
அவ்வளவு ஏன்? திமுக தொண்டர்களும் தங்களது ஆற்றாமையையும், ஆதங்கத்தையும், பொருமலையும் இணையத்தில் பதிவிட்டபடி உள்ளனர்.. "இப்படி ஒரு தீர்ப்பு வந்தாகிவிட்டது, அப்படியானால் ஆதிக்க அரசியலுக்கு எதிராக போராடும் திமுக மீது தவறே இல்லை என்றாலும் தவறாகவே சித்திரிக்கப்படும்.
கரூர் வழக்கில் இதுவரையில் என்ன விசாரணை செய்யப்பட்டது என்று ஏன் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பவில்லை? அவர்களின் மேற்பார்வையில் தானே அங்கு விசாரணை நடக்கிறது? அதை மீறி ஒரு அமைச்சர் சாட்சிகளை கலைக்கும் நோக்கத்தோடு பேசுவதை எப்படி நீதிமன்றம் ஏற்கிறது என்பது புரியாத புதிராக இருக்கிறது.
41 பேர் மரணத்திற்கான காரணியான நடிகர் விஜய் மீது அன்றைக்கே வழக்கு பதிவு செய்திருக்க வேண்டும்; தும்பை விட்டு வாலை பிடிச்சுக்கிட்டு நிக்கிறாங்களே திமுககாரங்க" என்றெல்லாம் சோஷியல் மீடியாவில் கமெண்ட்கள் பதிவாகி கொண்டிருக்கின்றன..
தீர்க்கப்படாத சந்தேகங்கள்
இன்றைய தீர்ப்பு எப்படி வந்திருந்தாலும் சரி, மக்கள் மத்தியில் இன்னும் சில அடிப்படையான அரசியல் கேள்விகள் தீர்க்கப்படாமலேயே தொக்கி நிற்கின்றன.
முக்கியமாக, கரூர் பிரச்சார கூட்டத்துக்கு விஜய் தாமதமாக வந்தது சரியா? கரூரில் கூட்டத்துக்கு வந்திருந்தோருக்கு, குடிக்க தண்ணீர் கூட ஏற்பாடு செய்யாதது சரியா? இப்படிப்பட்ட ஆபத்தான கூட்டங்களுக்கு மக்கள் திரண்டு சென்றது சரியானதா? சம்பவத்துக்கு பிறகு வீடியோ வெளியிட்ட நடிகர் விஜய், பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதலாக உடனே சென்று நேரில் நாலு வார்த்தை பேசாதது சரியா? நடந்த சம்பவத்துடன், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை இதில் தொடர்புபடுத்துவது சரியா? போன்ற கேள்விகளுக்கும் விடை கிடைத்தால் நல்லா இருக்கும்...!!















Click it and Unblock the Notifications