ஒரு போலீஸ் அதிகாரிக்கு இவ்வளவு சொத்தா.. கேட்க தலையே சுத்துதே.. நாட்டையே உலுக்கிய ஒரு ரெய்டு
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் போலீஸ் அதிகாரி ஒருவர் கணக்கில் வராத அளவிற்கு பல கோடி ரூபாய் சேர்ந்திருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் வீட்டில் நடத்தப்பட்ட ரெய்டு நாட்டையே உலுக்கி உள்ளது.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், ஹைதராபாத் கணினி சேவை பிரிவில் துணை காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வரும் சங்கிரெட்டி பீம் ரெட்டி பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். அதோடு இவரை தெலங்கானா லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடியாகக் கைது செய்துள்ளது.

போலீஸ் அதிகாரி சிக்கியது எப்படி?
கடந்த வாரம் அவரது வீடு உட்பட 16 இடங்களில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையின் தொடர்ச்சியாக இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முறைகேடு செய்த அந்த டிஎஸ்பி பீம் ரெட்டி, ஹைதராபாத் இப்ராஹிம்பாக் பகுதியில் உள்ள வெசெல்லா மெடோஸ் குடியிருப்பில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து திங்கட்கிழமை இரவு சுமார் 7.40 மணியளவில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளால் முறைப்படி கைது செய்யப்பட்டார். அவர் விரைவில் சிறப்பு ஏசிபி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
நாட்டையே உலுக்கிய சொத்துக் குவியல்
டிஎஸ்பி பீம் ரெட்டி தனது பணிக்காலத்தில் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, சட்டவிரோத வழிகளில் தனது வருமானத்திற்கு அதிகமாக பல கோடி ரூபாய் மதிப்பிலான அசையும் மற்றும் அசையா சொத்துக்களைக் குவித்துள்ளதாக ஏசிபி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது சிறிய அளவில் முறைகேடுகள் இல்லாமல்.. சிறிய மாமூல் வசூல் இல்லாமல் பெரிய பெரிய முறைகேடுகளை இவர் சாதாரணமாக செய்துள்ளார். தெலங்கானா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் உள்ள அவரது உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பினாமிகளின் வீடுகள் உட்பட மொத்தம் 16 இடங்களில் ஜூலை 2-ம் தேதி ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட சோதனையில் இந்த பகீர் தகவல்கள் வெளியாகின.
அதிகாரப்பூர்வ ஆவணங்களின்படி, கைப்பற்றப்பட்ட முக்கிய சொத்துக்களின் விவரங்கள் நாட்டையே உலுக்கி உள்ளது
ஹைதராபாத் இப்ராஹிம்பாக், வெசெல்லா மெடோஸ் பகுதியில் உள்ள ஒரு சொகுசு வில்லா வீடு, டெலிகாம் நகர் பகுதியில் அமைந்துள்ள பென்ட் ஹவுஸ் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு, டெலிகாம் நகர், சாய் பிரபா ரெசிடென்சியில் உள்ள ஒரு பிளாட் என்று 20க்கும் மேற்பட்ட வீடுகள், நிலங்கள், குடியிருப்புகள், வணிக வளாகங்களை இவர் வாங்கி உள்ளார்.
கிலோ கணக்கில் தங்கம், வெள்ளி:
டிஎஸ்பி பீம் ரெட்டியின் வீட்டில் இருந்து கணக்கில் வராத ரூ.3.60 லட்சம் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அதே நேரத்தில், அவரது பினாமி என சந்தேகிக்கப்படும் நபரின் வீட்டில் இருந்து ரூ.40 லட்சம் ரொக்கம் ஏசிபி அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது.
மேலும், சோதனையின் போது சுமார் 2 கிலோ எடையுள்ள தங்க நகைகளும், 20 கிலோ எடையுள்ள வெள்ளிப் பொருட்களும் கண்டறியப்பட்டன. இது தவிர, பல்வேறு வங்கிக் கணக்குகளில் இருந்த சுமார் ரூ.19 லட்சத்து 91,000 வைப்புத்தொகையையும் அதிகாரிகள் முடக்கியுள்ளனர். மொத்தமாக இவரிடம் கணக்கில் வராத ரூ.350 இருந்துள்ளது.
இந்த வழக்கில் டிஎஸ்பி பீம் ரெட்டிக்கு மிக முக்கிய திருப்பமாக அமைந்தது அவரது வீட்டில் சிக்கிய ஒரு ரகசிய டைரி தான். கடந்த மே மாதம் தனது மனைவியுடன் கோவில் ஒன்றிற்கு செல்வதற்கு முன்பாக, பீம் ரெட்டி தனது கைப்பட ஒரு டைரியை எழுதியுள்ளார். அதில், அவர் வாங்கிய சொத்துக்கள், முதலீடுகள், கடன்கள் மற்றும் பினாமிகளின் பெயர்களைத் துல்லியமாகப் பட்டியலிட்டுள்ளார்.
மேலும், இந்த டைரியின் ஸ்கேன் செய்யப்பட்ட பிரதிகளை யாத்திரைக்குக் கிளம்பும் முன்பாக வாட்ஸ்அப் மூலம் தனது இரு மகன்களுக்கும் அவர் பகிர்ந்துள்ளார். இந்த ரகசிய டைரியை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கைப்பற்றியதைத் தொடர்ந்தே, அவரது பினாமிகள் மற்றும் மறைக்கப்பட்ட சொத்துக்களின் நெட்வொர்க்கை எளிதாக அதிகாரிகளால் கண்டறிய முடிந்தது. ஒரே ஒரு போலீஸ் அதிகாரி இவ்வளவு சொத்து சேர்க்க முடியுமா என்று தற்போது நாடே அண்ணாந்து பார்க்கும் அளவிற்கு இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது.














Click it and Unblock the Notifications