தமிழகத்தில் அரிசி விலை உயர்வு! முக்கிய காரணங்கள் என்ன?
சென்னை: கர்நாடகா, ஆந்திராவில் இருந்து வரத்து குறைந்துள்ளதால் தமிழகத்தில் அரிசியின் விலை கிலோவுக்கு ரூ 10 உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
வட இந்தியர்களுக்கு கோதுமை முக்கியம் என்பதை போல் தென்னிந்தியர்களுக்கு அரிசி முக்கிய உணவாக பார்க்கப்படுகிறது. ஏழை எளிய மக்கள் ஒரு வேளை உணவையாவது சாப்பிட வேண்டும் என்பதால் ரேஷன் கடைகளில் இலவச அரிசி வழங்கப்படுகிறது.

அது போல் கோதுமையும் வழங்கப்படுகிறது. தமிழகத்தின் நெற் களஞ்சியம் தஞ்சை மாவட்டத்தில் அரிசி உற்பத்தி நடைபெறுகிறது. அது போல் தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளிலும் நெல் விளைவிக்கப்படுகிறது. ஆரணி உள்ளிட்ட பகுதிகளில் பட்டு புடவைகளை போல் அரிசியும் பிரபலம். இங்கு ஏராளமான அரிசி ஆலைகள் உள்ளன.
அது போல் கர்நாடகா, ஆந்திராவில் இருந்தும் அரிசி இறக்குமதி செய்யப்படுகிறது. அந்த வகையில் அங்கெல்லாம் வரத்து குறைந்துள்ளதால் அரிசியின் விலை தமிழகத்தில் கிலோவுக்கு ரூ 10 வரை உயர்ந்துள்ளது. இது குறித்து விரிவாக பார்ப்போம்.
தமிழகத்தில் சில்லறை மற்றும் மொத்த விற்பனை சந்தைகளில் சாப்பாட்டு அரிசி மற்றும் இட்லி அரிசியின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. பொதுவாக அறுவடை காலங்களான ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் அரிசி விலை குறைவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக விலை ஏறுமுகமாகவே உள்ளது.
சில்லறை விற்பனையில் ரகத்தைப் பொறுத்து கிலோவுக்கு ₹5 முதல் ₹15 வரை விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
பொன்னி / சன்ன ரக அரிசி: இதற்கு முன்பு கிலோ ₹48 முதல் ₹52 வரை விற்கப்பட்ட நிலையில், தற்போது தரம் மற்றும் பிராண்டைப் பொறுத்து ₹58 முதல் ₹70 வரை உயர்ந்துள்ளது.
இட்லி அரிசி (குண்டு அரிசி): கிலோ ₹36-ல் இருந்து உயர்ந்து தற்போது ₹40 முதல் ₹44 வரை விற்பனை செய்யப்படுகிறது.
கர்நாடக பொன்னி: தரத்திற்கு ஏற்ப கிலோ ₹46 முதல் ₹65 வரை விற்கப்படுகிறது.
விலை உயர்வுக்கான காரணங்கள்
வரத்து குறைவு மற்றும் சாகுபடி பாதிப்பு: தமிழகத்தின் முக்கிய நெல் உற்பத்திப் பகுதிகளான காவிரி டெல்டா மாவட்டங்களில் போதிய பருவமழை இல்லாதது மற்றும் பருவம் தவறிய மழை காரணமாக குறுவை, சம்பா சாகுபடிகள் சில இடங்களில் பாதிக்கப்பட்டன. இதனால் உள்நாட்டு நெல் வரத்து குறைந்துள்ளது.
வெளிமாநில வரத்து பாதிப்பு: தமிழக சந்தைகளுக்குத் தேவையான சன்ன ரக அரிசி பெரும்பாலும் ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்தே கொண்டு வரப்படுகிறது. அங்கேயும் போதிய விளைச்சல் இல்லாததால், தமிழகத்திற்கு வரும் அரிசி மூட்டைகளின் வரத்து சரிந்துள்ளது.
உற்பத்தி மற்றும் போக்குவரத்து செலவு அதிகரிப்பு: சமீபத்திய எரிபொருள் (பெட்ரோல், டீசல்) விலை உயர்வு காரணமாக லாரி வாடகை அதிகரித்துள்ளது. அத்துடன் அரிசி ஆலைகளுக்கான மின்சாரக் கட்டணம் மற்றும் பேக்கிங் மெட்டீரியல்களின் விலை உயர்ந்துள்ளதும் அரிசி விலை அதிகரிக்க மறைமுகக் காரணமாக அமைந்துள்ளது.
ஹோட்டல் உணவுகள் விலை உயரும் அபாயம்
அரிசியின் விலை உயர்வால் வீடுகளில் மட்டுமல்லாது, உணவகங்களிலும் இட்லி, தோசை, சாப்பாடு ஆகியவற்றின் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக ஓட்டல் உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
பொதுமக்கள் மற்றும் வணிகர்களின் கோரிக்கை:
தமிழக அரசு இந்த விலை உயர்வை உடனடியாகக் கண்காணித்து, வெளிச்சந்தையில் அரிசி விலையைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், கூட்டுறவு அங்காடிகள் (அமுதம் அங்காடி) மற்றும் நியாயவிலைக் கடைகள் மூலம் தரமான சாப்பாட்டு அரிசி தடையின்றிக் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications