நான் வருவேன்.. ஆனா கைது பண்ண கூடாது.. செந்தில் பாலாஜி அனுப்பிய லெட்டர்.. அதிர்ச்சியான போலீஸ்
சென்னை: திருவல்லிக்கேணி போலீசாருக்கு ஒரு கடிதத்தை அனுப்பியுள்ள செந்தில்பாலாஜி, " நான் நேரில் ஆஜரானால் வேறு வழக்கில் கைது செய்ய திட்டமிட்டிருக்கிறீர்கள். கைது செய்ய மாட்டோம் என உறுதி தந்தால் ஆஜராகிறேன் " என்று எழுதியுள்ளார். இந்த கடிதத்திற்கு பின் முக்கியமான சில காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
தவெக எம். எல். ஏ. இளையராஜாவிடம் குதிரை பேரம் நடத்தியதாக முன்னாள் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் ஆகியோருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் மேற்கண்ட இருவருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கியது சென்னை உயர் நீதிமன்றம்.

அதன்படி திருவல்லிக்கேணி ஸ்டேசனில் தினமும் காலை மற்றும் மாலை என 2 வேளைகளிலும் ஆஜராகி கையெழுத்து போடப்பட வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது. ஆனால் ஒரு வாரமாக அவர்கள் ஆஜராகவில்லை.
ஜாமீன் மனுவை ரத்து செய்ய புதிய மனு தாக்கல்
இந்த நிலையில், இதனை சுட்டிக்காட்டி, அவர்களின் ஜாமீன் மனுவை ரத்து செய்ய புதிய மனுவை தாக்கல் செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர். ஜாமீன் ரத்து செய்யப்பட்டால் அவர்கள் இருவரையும் உடனடியாக கைது செய்யவும் ஆலோசிக்கப் பட்டுள்ளது.
இதற்கான உத்தரவை சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ், காவல் துறையினருக்கு அறிவுறுத்தியுள்ளார். இதனால், செந்தில் பாலாஜி மற்றும் அசோக் இருவரையும். கண் கொத்தி பாம்பு மாதிரி கண்காணித்து, கமிஷனருக்கு தகவல் கொடுத்தபடி இருக்கிறது உளவுத்துறை.
கண் கொத்தி பாம்பு மாதிரி கண்காணித்து ஆலோசனை
இந்த நிலையில், திருவல்லிக்கேணி போலீசாருக்கு ஒரு கடிதத்தை அனுப்பியுள்ள செந்தில்பாலாஜி, "நான் நேரில் ஆஜரானால் வேறு வழக்கில் கைது செய்ய திட்டமிட்டிருக்கிறீர்கள். கைது செய்ய மாட்டோம் என உறுதி தந்தால் ஆஜராகிறேன் " என்று எழுதியுள்ளார்.
இந்த கடிதத்தை பார்த்த திருவல்லிக்கேணி போலீசார், "நிபந்தனை விதித்தது நீதிமன்றம். வேறு வழக்கில் கைது செய்ய மாட்டோம் என நாம் எதற்கு உறுதி கொடுக்க வேண்டும்? இப்படி உறுதி தர வேண்டிய வேலை நம்முடையது இல்லை. ஆஜராவதும் ஆகாததும் அவருடைய விருப்பம். ஆஜராகமால் இருந்தால் அதற்கான சட்ட நடவடிக்கைகளை நாம் எடுக்கலாம் " என்று ஆலோசித்துள்ளது போலீஸ்.
வேறு வழக்கில் கைது செய்யப்படுவோம்
வேறு வழக்கில் கைது செய்யப்படுவோம் என்று செந்தில் பாலாஜி ஏன் கூற வேண்டும்? என்று விசாரித்தபோது, "குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் வாக்கு மூலம் பெற்றுள்ளனர். இதில் 35 கோடி ரூபாய் புழங்கியாதாக சொல்லப்படும் விவகாரம் நிறைய விஷயங்களை கைது செய்யப்பட்டவர்கள் கக்கியுள்ளனராம்.
சட்ட விரோத பரிவர்த்தனை
அதனால் இந்த 35 கோடி ரூபாய் விவகாரத்தில் சட்ட விரோத பரிவர்த்தனை நடந்திருப்பதாக அமலாக்கத்துறைக்கு போலீஸ் தரப்பில் இருந்து சொல்லப்பட்டுள்ளதாம். அதனால் இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறையும் களத்தில் குதிக்கவிருக்கிறது. இந்த விஷயம் செந்தில் பாலாஜிக்கு தெரிய வந்துள்ளது. அமலக்கத்துறை வழக்கு பதிவு செய்யும் பட்சத்தில் நாம் கைது செய்யப்படுவோம் என நினைத்து தான் அப்படி ஒரு கடிதத்தை எழுதியதுடன் போலீஸ் ஸ்டேசனில் ஆஜராகாமல் தவிர்க்கிறாராம் செந்தில் பாலாஜி " என்கிற தகவல் திமுக தரப்பிலிருந்து கிடைக்கிறது.
- சிறப்பு நிருபர் எழில்












Click it and Unblock the Notifications