ஜந்தர் மந்தருக்கு வந்த கபில் சிபல், பிரசாந்த் பூஷன்! டெல்லியில் சூடுபிடிக்கும் போராட்டம்
டெல்லி: தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் இன்று 2வது நாளாக போராட்டம் தீவிரமடைந்திருக்கிறது. இந்த போராட்டத்தில் மூத்த வழக்கறிஞர்களான கபில் சிபல், பிரசாந்த் பூஷன் உள்ளிட்டோர் பங்கேற்று தங்கள் ஆதரவை தெரிவித்திருக்கின்றனர்.
மூத்த வழக்கறிஞர்கள் இந்த போராட்டத்திற்கு நேரடியாக வந்து ஆதரவு தெரிவித்திருப்பது மத்திய பாஜக அரசுக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறது. வெறுமென மாணவர்கள், இளைஞர்கள் மட்டுமே இந்த போராட்டத்தை முன்னெடுப்பார்கள் என்று எதிர்பார்த்திருந்த நேரத்தில், மூத்த வழக்கறிஞர்கள் வந்திருப்பது, போராடுபவர்களுக்கு சட்ட பாதுகாப்புக்கு நாங்கள் கேரண்டி என்று அவர்கள் சொல்வதை போல அமைந்திருக்கிறது.

ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று கூறி காக்ரோச் ஜனதா கட்சி (CJP) சில நாட்கள் கால அவகாசத்தை கொடுத்தது. ஆனால், அவர் ராஜினாமா செய்யவில்லை. எனவே அக்.2ம் தேதி மும்பையில் நாங்கள் போராட்டத்தை தொடருவோம் என்று காக்ரோச் கட்சி அறிவித்தது. அதேபோல டெல்லியில் இதே கோரிக்கையை முன்வைத்து நாங்களும் காக்ரோச் கட்சிக்கு ஆதரவாக டெல்லியில் போராடுவோம் என்று மாணவர்கள், இளைஞர் அமைப்பினர் அறிவித்தனர். அதன்படி நேற்று டெல்லியில் போராட்டம் தொடங்கியது.
இந்த போராட்டத்தை அகில இந்திய மாணவர் சங்கம் (AISA), இந்திய மாணவர் சங்கம் (SFI), இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI) உள்ளிட்ட கம்யூனிஸ்ட் மாணவர், இளைஞர் அமைப்புகள் முன்னெடுத்துள்ளன. இந்த போராட்டத்தில் பங்கேற்றிருந்தவர்களில் 1,000 பேரை டெல்லி போலீஸ் நேற்று கைது செய்து விடுவித்திருந்தது. இருப்பினும் இன்று போராட்டக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. AISA தலைவர் நேஹா போரா அழைப்பின் பேரில் மேலும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஜந்தர் மந்தரில் குவிந்துள்ளனர். ஒரு பக்கம் CJP தலைவர் அபிஜீத் தீப்கே மும்பையிலும், இன்னொரு பக்கம் நேஹா போரா டெல்லியிலும் மத்திய அரசை அசைத்து பார்த்து வருகின்றனர்.
இந்த போராட்டத்தில் உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர்களான கபில் சிபல், பிரசாந்த் பூஷன் உள்ளிட்டோர் பங்கேற்றிருப்பது தேசிய அளவில் கவனம் பெற்றிருக்கிறது. இவ்வளவு போராட்டம் நடத்தியும் மத்திய அரசு இன்னும் அசைந்துக்கொடுக்கவில்லை. மாறாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்து விடுவித்து வருகிறது. டெல்லி போலீசும், மத்திய அரசு இதே பிடிவாதத்துடன் இருந்தால் அக்.10ம் தேதி கரப்பான்பூச்சிகள் ஜந்தர் மந்தரை முற்றுகையிடும் என்று தீப்கே அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பு மத்திய அரசுக்கு மேலும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
போராடத்திற்கான காரணம்
ஞானேஷ் குமார், மற்ற 2 தேர்தல் ஆணையர்களை கலந்தாலோசிக்காமல் SIR உள்ளிட்ட முக்கிய விஷயங்களில் தன்னிச்சையாக முடிவெடுத்திருக்கிறார். ஏற்கெனவே SIR விஷயத்தில் மத்திய அரசு மீதும், தேர்தல் ஆணையத்தின் மீதும் எதிர்க்கட்சிகள் பயங்கர கடுப்பில் இருக்கின்றன. இந்த நேரம் பார்த்து, ஞானேஷ் குமாரின் தன்னிச்சையான நடவடிக்கை குறித்து வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. எனவே மொத்த எதிர்க்கட்சிகளும் ஞானேஷ் குமாருக்கு எதிராக களத்தில் இறங்கியிருக்கின்றன.


Click it and Unblock the Notifications
