சிக்கிய ரூ.1 கோடி.. தாராபுரம் தேர்தலுக்கு விநியோகம்? மாவட்ட செயலாளரிடம் விசாரிக்க அதிமுக எதிர்ப்பு - ஸ்டேஷன் முற்றுகை
திருப்பூர்: திருப்பூர் தாராபுரம் சட்டசபை தொகுதிக்கு வரும் 6ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் அரவக்குறிச்சியில் ரூ.1 கோடி சிக்கியது தொடர்பாக திருப்பூர் புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர் செல்வக்குமரனிடம் விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டசபை தொகுதியின் எம்எல்ஏவாக இருந்த சத்தியபாமா சமீபத்தில் தனது பதவியை ராஜினாமா செய்து முதல்வர் விஜய்யின் தவெகவில் இணைந்தார். இதனால் காலியான தாராபுரம் சட்டசபை தொகுதியின் இடைத்தேர்தல் வரும் 6ம் தேதி நடைபெற உள்ளது.
தவெக சார்பில் சத்தியபாமா போட்டியிடும் நிலையில் அதிமுக சார்பில் பானுமதி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்த சத்தியபாமாவை எப்படியாவது தோற்கடித்து மீண்டும் தொகுதியை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் அதிமுக தீவிரமாக களப்பணி மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் தான் சேலத்தில் இருந்து கரூருக்கு ஆவணங்கள் இன்றி ரூ.1 கோடி கொண்டு செல்லப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் தீவிரமாக சோதனை மேற்கொண்டனர். அப்போது சுப்பிரமணி என்பவரிடம் இருந்து ரூ.1 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.
அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. முதலில் அவர் முன்னுக்கு பின் முரணமாக பதிலளித்தார். அதன்பிறகு இந்த பணத்தை திருப்பூர் புறநகர் மாவட்டம் அதிமுக மாவட்ட செயலாளர் செல்வக்குமரனிடம் ஒப்படைக்க தன்னிடம் தரப்பட்டதாக தெரிவித்துள்ளார். தாராபுரம் சட்டசபை இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் பானுமதியின் வெற்றிக்காக செல்வக்குமரன் தற்போது தீவிரமாக பணியாற்றி வருகிறார்.
இப்படியான சூழலில் இந்த தகவல் போலீசாருக்கு சந்தேகத்தை அதிகரித்தது. தேர்தல் தேதி நெருங்குவதால் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்வதற்காக இந்த பணம் எடுத்து வரப்பட்டதா? என்ற சந்தேகம் எழுந்தது. இதனால் போலீசார் மாவட்ட செயலாளர் செல்வக்குமரனை அழைத்து தாராபுரம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுபற்றி அறிந்த அதிமுகவினர் போலீஸ் நிலையம் முன்பு அதிகளவில் திரண்டனர். அதிமுக மாவட்ட செயலாளர் செல்வக்குமரனை உடனடியாக விடுவிக்க வேண்டும். அவரிடம் விசாரணை நடத்தக்கூடாது என்று கூறியும், போலீசாருக்கு எதிராக கோஷமிட்டும் முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர். போலீசார் சமாதானம் செய்தாலும் அவர்கள் கேட்கவில்லை. இதனால் தாராபுரம் காவல் நிலையத்தில் பெரும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.


Click it and Unblock the Notifications
