5 நிமிஷம் பேசுனதுக்கே கொளத்தூர்ல காலினு சொன்னீங்க.. கரூர்ல ஏன் ஜெயிக்கல? - மு.க.ஸ்டாலின் கேள்வி!
சென்னை: மதுராந்தகத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கொளத்தூரில் 5 நிமிஷம் பேசுனதுக்கே நான் தோற்றுவிட்டேன் என்று சொன்னார்கள்.. ஆனால், கரூரில் பாட்டு பாடியும், விழுப்புரத்தில் மாநாடு நடத்தியும் ஏன் ஜெயிக்கவில்லை? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.
மதுராந்தகத்தில் திமுக வேட்பாளர் பரந்தாமனை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட ஸ்டாலின் பேசியதாவது, "5 நிமிஷம் பிரச்சாரம் செய்ததற்கே கொளத்தூரில் ஸ்டாலின் தோற்றுவிட்டார் என்று நக்கல் பேச்சு பேசுகிறீர்களே! நான் கேட்கிறேன்.. கரூரில் போய் பாட்டெல்லாம் பாடினீர்களே! ஏன் அங்கு ஜெயிக்கவில்லை?

விழுப்புரத்தில் மாநாடெல்லாம் போட்டீர்களே! ஏன் அங்கு ஜெயிக்கவில்லை? கன்னியாகுமரி போனீர்களே! அங்கு ஒரு சீட் கூட வாங்கலையே! திருவாரூர் போய்.. பொய் பொய்யாக பேசினீர்களே! அங்கு என்ன ஆச்சு? உண்மை என்னவெனில், விஜய் நீண்ட நேரம் பரப்புரை செய்த தொகுதிகளில் தவெக படுதோல்வி அடைந்தது. இதுதான் யதார்த்தம். மதுராந்தகமும் இந்த லிஸ்ட்டில் சேர வேண்டும்.
மக்கள் பிரச்சனைகளை எழுப்பினால், முதலமைச்சராக அதற்கு பொறுப்பாக பதில் சொல்லுங்கள். எல்லா மேடைகளிலும் திமுக, திமுக என்று புலம்பினால் மக்கள் பிரச்சனை சரியாகிவிடாது. மக்கள் அதற்காக உங்களுக்கு வாக்களிக்கவில்லை. மக்களை நீங்கள் எந்த அளவுக்கு அலட்சியமாக நினைக்கிறீர்களோ அந்த ஆணவத்தாலேயே நீங்கள் அழிவது உறுதி. மதுராந்தகம் மக்களுக்கு நான் சொல்லிக்கொள்வது ஒன்றுதான். இந்த இடைத்தேர்தலில் தவெகவுக்கு அளிக்கிற வாக்கு.. அராஜகத்திற்கும், ஆணவத்திற்கும், முறைகேடுகளுக்கும், பணநாயகத்திற்கும் அளிக்கும் வாக்கு. இதை மதுராந்தகம் மக்கள் மறந்துவிட வேண்டாம்.
துரோகிகளை விரட்டி அடியுங்கள். ஏற்ற கொள்கைக்கு உறுதியாக இருப்பவருக்கு வாக்களியுங்கள். திமுக வேட்பாளர் பரந்தாமனுக்கு வாக்களியுங்கள். அவர் உங்களோடு இருப்பார். மற்றவர்களை மாதிரி ஓடி போக மாட்டார். வாக்களித்த மக்களுக்கு துரோகம் செய்தவர்கள் சட்டமன்றத்திற்கு போக கூடாது. மதுராந்தகம் மக்கள் அவர்களை போக விட கூடாது" என்று கோரியிருக்கிறார்.
மறுபுறம் தவெக தலைவர்களும் தீவிரமாக பரப்புரை மேற்கொண்டிருக்கின்றனர். வழக்கமாக இடைத்தேர்தல் என்று வரும்போது அதற்கான பிரச்சாரத்தில் முதல்வராக இருப்பவர்கள் பங்கேற்க மாட்டார்கள். ஏனெனில் ஆளும் கட்சிதான் அந்த தொகுதியில் எப்படியாவது வெற்றிப்பெற வேண்டும் என்று முழு பலத்தையும் பயன்படுத்துவார்கள். இருந்தாலும் முதல்வர் பிரச்சாரத்திற்கு போக மாட்டார். ஆனால், இந்த முறை முதலமைச்சர் விஜய் தொகுதிக்கு வந்திருக்கிறார். அப்படியெனில் தவெகவுக்கு தோல்வி பயம் தெரிகிறதா? என்று எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்ப தொடங்கியிருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications
