பிச்சைக்காரர்களுடன் போய் இருங்கள்.. மாற்றுத்திறனாளியாக நடித்து யாசகம் கேட்ட இளைஞருக்கு நேர்ந்த கதி
பெங்களூர்: பெங்களூரில் மாற்றுத்திறனாளி போல் நடித்து யாசகம் கேட்டு வந்த 20 வயது இளைஞரை போலீசார் பிடித்து தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை பிச்சைக்காரர்கள் தங்கும் இடத்தில் தங்க வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெங்களூர் பேட்ராயனாபுரா போலீஸ் எல்லைக்குட்பட்ட ஐடிஐ லே-அவுட் பகுதியில் இளைஞர் ஒருவர் யாசகம் கேட்டு நடமாடினார். அவர் மாற்றுத்திறனாளி போல் நடக்க முடியாமல் ஊன்றுகோல் உதவியுடன் நடந்தார்.

ஆனால் அவரது நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள், ஆட்டோ டிரைவர்கள் அவரை மடக்கி பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் மாற்றுத்திறனாளி இல்லை என்பது தெரியவந்தது.
அவரது கால்கள் நன்றாக இருந்தும் மக்களிடம் இருந்து அதிகளவில் பணத்தை யாசகம் பெறுவதற்காக மாற்றுத்திறனாளி போல் நடித்து பிச்சை எடுத்ததும் தெரியவந்தது. கையில் ஐபோன் ஒன்றை வைத்திருந்தார். இதனால் அவர் அந்த ஐபோனை திருடி இருக்கலாம் என்று நினைத்தனர். இதனால் பொதுமக்கள் அந்த இளைஞரை பிடித்து தர்மஅடி கொடுத்தனர்.
சம்பவம் தொடர்பாக பேட்ராயனாபுரா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் வந்து அவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவரது பெயர் முகேஷ் என்பதும் 20 வயது நிரம்பியவர் என்பதும் தெரியவந்தது. உத்தரபிரதேசத்தை சேர்ந்த அவர் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு வேலை தேடி பெங்களூர் வநதுள்ளார். சில இடங்களில் வேலை தேடினார். ஆனால் அவருக்கு வேலை கிடைக்கவில்லை.
இதனால் அவர் பஸ் மற்றும் மார்க்கெட்டுகளில் இரவு நேரத்தில் தங்கி உள்ளார். அதுமட்டுமின்றி அன்றாட தேவைகளுக்கு பிச்சை எடுக்க முடிவு செய்துள்ளார். இளம் வயதில் பிச்சை எடுத்தால் யாரும் பணம் தரமாட்டார்கள் என்று நினைத்த முகேஷ் மாற்றுத்திறனாளி போல் நடிக்க தொடங்கினார். மாற்றுத்திறனாளி என்றால் பலரும் பணம் கொடுப்பார் என்பதால் இந்த முடிவை எடுத்து பொதுமக்களிடம் சிக்கி கொண்டதும் தெரியவந்துள்ளது.
மேலும் முகேஷ் ஐபோன் திருடியதாக பொதுமக்கள் குற்றம்சாட்டிய நிலையில் அதனை போலீசார் இன்னும் உறுதி செய்யவில்லை. ஐபோன் அவருக்கு சொந்தமானதா? ஐபோன் வைத்திருந்தால் அவர் எப்படி யாசகம் பெறும் நிலைக்கு வந்தார்? என்ற சந்தேகங்கள் போலீசாருக்கு உள்ளது. இதனால் முகேசை போலீசார் பிடித்து பெங்களூரில் உள்ள பெக்கர்ஸ் காலனியில் தங்க வைத்தனர். இந்த காலனியில் பிச்சைக்காரர்கள் தங்கி உள்ள நிலையில் அவர்களில் ஒருவராக முகேசை போலீசார் சேர்த்துள்ளனர். மேலும் தொடர்ந்து முகேசின் பின்னணி பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications
