திப்பு சுல்தானை போல்.. சித்தராமையாவையும் கொல்ல வேண்டும்.. பாஜக எம்எல்ஏ சர்ச்சை.. போலீஸ் அதிரடி
பெங்களூர்: கர்நாடகாவில் திப்பு சுல்தானை போல் சித்தராமையாவையும் கொல்ல வேண்டும் என பொருள்படும்படி கர்நாடகா பாஜக முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்எல்ஏவுமான அஸ்வத் நாராயண் பேசிய புகாரில் அவர் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான புகார் சில மாதங்களாக நிலுவையில் இருந்த நிலையில் தற்போது காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்ததால் அவர் மீது அதிரடியாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பெங்களூர் மல்லேஸ்வரம் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் அஸ்வத் நாராயண். இவர் இந்த தொகுதியில் 2008, 2013, 2018 தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற்றார். தற்போது 4வது முறையாகவும் அதே தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வாகை சூடியுள்ளார்.

இவர் கர்நாடகாவில் பாஜக ஆட்சி நடந்தபோது முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான அமைச்சரவையில் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்தார். மேலும் துணை முதல்வராகவும் சிறிது காலம் செயல்பட்டார். இந்நிலையில் தான் தேர்தலுக்கு முன்பு பாஜக தலைவர்கள் மண்டியா, ராமநகர் உள்ளிட்ட பழைய மைசூர் மாவட்டங்களில் அதிக இடங்களில் வெற்றி பெற முனைப்பு காட்டினார்.
இதனால் பழைய மைசூர் மாவட்டங்களில் பாஜக தலைவர்கள் முகாமிட்டு தீவிர பிரசாரம் மேற்கொண்டனர். இந்நிலையில் தான் கடந்த பிப்ரவரி மாதம் 15ம் தேதி மண்டியா மாவட்டம் சாத்தனூர் பகுதியில் அஸ்வத் நாராயண் பேசினார். அப்போது, ‛‛மண்டியா மக்களுக்கு அரசியலில் மாற்றம் ஏற்படுத்துவற்கான சக்தி உள்ளது. மண்டியாவை சேர்ந்த மக்கள் மனது வைத்தால் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம்.
அரசியலில் புதிய மாற்றம் மண்டியாவில் இருந்து தொடங்க வேண்டும்.இல்லாவிட்டால் திப்பு சுல்தான் சித்தராமையா ஆட்சிக்கு வந்துவிடுவார். உங்களுக்கு திப்பு வேண்டுமா அல்லது சாவர்க்கர் வேண்டுமா?. திப்பு சுல்தான் வேண்டாம் என்று அனுப்பியது போல் சித்தராமையாவையும் நீங்கள் அனுப்ப வேண்டும். திப்பு சுல்தானை நஞ்சேகவுடா, ஊரிகவுடா பினிஷ் செய்தது போல் சித்தராமையாவையும் பினிஷ் ஆப் செய்ய வேண்டும்'' என்றார்.
இது அப்போது பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. திப்பு சுல்தானை கொன்றது போல் சித்தராமையாவையும் கொலை செய்ய வேண்டும் என அஸ்வத் நாராயண் பொதுமக்களை தூண்டி விடுவதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியது. இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் லட்சுமண் சார்பில் மைசூர் தேவராஜா போலீசில் பிப்ரவரி 17 ல் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் பாஜக ஆட்சியில் இருந்த நிலையில் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.
இதற்கிடையே தான் நேற்று மீண்டும் லட்சுமணன் தலைமையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தேவராஜா போலீசில் மீண்டும் புகார் அளித்தனர். இந்த புகாரை தொடர்ந்து போலீசார் அஸ்வத் நாராயண் மீது வழக்குப்பதிவு செய்தனர். அஸ்வத் நாராயண் மீது கொலை மிரட்டல், மதகலவரத்தை தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications